vendredi 10 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 88]




காதல் ஆயிரம் [பகுதி - 88]
 
811.
தாக்கிக் தகா்த்தாலும் போக்கித் துடைத்தாலும்
தேக்கிச் செழிக்குதடி உன்னினைவு! - நோக்கும்
திசையெல்லாம் தேவியுன் பொன்முகம் மின்னும்!
இசைவெல்லாம் காட்டும் இனித்து!

812.
பலகோடி செல்வம் படைத்தென்ன? பெண்ணே
நலங்கோடி உன்வரவே நல்கும்! - நிலவே
ஒருகோடி இன்பம் தருகின்ற பாக்கள்
அருங்கோடி வாழ்வை அளந்து!

813.
மடல்ஏன் எழுதவில்லை! மங்கை..நீ யின்றி
உடல்ஏன்? இயங்கும் உயிர்ஏன்? - இடா்என்ன
வந்தாலும் ஏற்பேன் மயிலே உனக்காக!
வந்தாளும் இன்பம் வடித்து!

814.
இங்கே நலமாய் இருக்கின்றாய்! அன்பே..நான்
அங்கே நலமா? பதில்அளிப்பாய்! - எங்கே
இருந்தாலும் நம்முயிர் ஒன்றி இணையும்
பெருங்காதல் பித்தம் பிடித்து!

815.
மலைபோல் கவியெழுதி மங்கை மனத்தை
உலைபோல் உருக்கும் நிலையேன்? - கலைசோ்
சிலைபோல் செதுக்கிச் சிரிக்கின்ற பாக்கள்
வலைபோல் பிடிக்கும் வளைத்து!

(தொடரும்)

4 commentaires:

  1. 815 : மிகவும் ரசித்தேன் ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!
    அன்னையர் தின வாழ்த்துக்கள் முதலில் இங்கே உரித்தாகட்டும் .
    சிறப்பான கவிதை வரிகளை எந்நாளும் இதயத்தில் இருந்து
    ஈன்றெடுப்பவர்கள் கவிஞர்கள் அந்தவகையிலும் உங்களுக்கு
    என் இனிய வாழ்த்துக்கள்.மனம் என்னும் பூங்காவில் மணம்
    வீசிடும் இக் கவிதை வரிகள் எந்நாளும் சிறப்பெய்தி வாழ்கவே!


    பலகோடி செல்வம் படைத்தென்ன? பெண்ணே
    நலங்கோடி உன்வரவே நல்கும்! - நிலவே
    ஒருகோடி இன்பம் தருகின்ற பாக்கள்
    அருங்கோடி வாழ்வை அளந்து!

    RépondreSupprimer
  3. உலைபோல உருகும் நிலையேனோ !ரசித்த வரிகள் தொடருங்கள் ஐயா!

    RépondreSupprimer