lundi 18 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 28]





காதல் ஆயிரம் [பகுதி - 28]

271.
வண்ண மயிற்றோகை! வாயில் திரையசைவு!
எண்ணம் எழுதும் எழிலுரை! - இன்விசிறி!
கண்ணைச் சொடுக்கி மலர்க்கணை தான்விடுத்தே
என்னை அழைக்கும் இமை!

272.
காதல் திருக்கோயில் பொற்கதவு! முன்னின்று
மோதல் படைநடத்தும் முட்படை! - வேதமென
ஓதல் தொடங்கும்! உயிரிலகும்! உன்விழியின்
சூதறிய உண்டோ துணிவு!

273.
கெண்டை விழியென்பார்! கிள்ளும் விழியென்பார்!
வண்டை நிகர்த்த வடிவென்பார்! - பண்டையிலே
சண்டை தரிக்கின்ற வாளென்பார்! வேலென்பார்!
அண்டை இருந்தே அசத்து!

274.
தண்டை சலசலக்க! கொண்டை மணமணக்க!
வெண்டை விரல்கள் எனைமயக்க! - மென்வாழைத்
தண்டை நிகர்த்த தவப்பெண்ணே! உன்விழிகள்
நண்டை நிகர்த்த நறுக்கு!

275.
என்னடி கோபம்! இளையவளே நீயின்றி
இன்னடி வெண்பா எனக்கேதாம்? - மின்னிடிபோல்
வன்னடி தந்து வதைக்காதே? உன்மனத்தைப் 
பொன்னடி என்பதோ பொய்!

276.
உயிர்பிரிந்தும், உன்னினைவே ஒன்றிக் கிடக்கும்!
துயர்நிறைந்தும் தேடும் துணையைக்! - கயலே!
வயல்விளைந்து நிற்கும்! வளர்காதல் இன்ப
இயல்விளைந்து நிற்கும் இனித்து!

277.
ஏன்எனக் கேட்டால் எதையிங்கு நான்உரைப்பேன்?
தேன்என எண்ணித் தினங்குடித்தேன்! - நான்மயங்க
மான்என வண்ண மயில்என வந்தவளே!
தான்எனும் வீம்பைத் தகர்த்து!

278.
தொட்டுத் தடவிச் சுயநிலையைத் தானிழந்து
கொட்டும் மழையில் குளித்தசுகம்! - சட்டென்று
கட்டும் கவிதையில் காட்ட முடிந்திடுமோ?
முட்டும் நினைவுகள் முனைந்து!

279.
கள்ளூறும் பார்வை! கனியிதழில் தேன்சொட்டச்
சொல்லூறும் பேச்சு! சுவைத்தமிழில் - உள்ளூற
மெல்லூறும் இன்னிசை! என்னவளே உன்னணைப்பில் 
புல்லூறும் போர்வையைப் போர்த்து!

280.
பொய்யுரைத்துப் பேசல் புகழ்ப்புலவர் வேளையென
மெய்யுரைத்துப் பேசுகின்ற மென்றொடியே! - செய்யவளே!
கையுடைத்துக் காலுடைத்து வாழ்ந்திடலாம்! உள்ளமெனும்
பையுடைத்துப் பாடுவதேன் பாட்டு?

(தொடரும்)

8 commentaires:

  1. //வண்ண மயிற்றோகை! வாயில் திரையசைவு!
    எண்ணம் எழுதும் எழிலுரை! - இன்விசிறி!
    கண்ணைச் சொடுக்கி மலர்க்கணை தான்விடுத்தே
    என்னை அழைக்கும் இமை!//
    இதுவரை அறியாத கற்பனை அருமை.ஐயா!

    RépondreSupprimer
  2. வார்த்தைகளை கொண்டு-
    வளைத்து கட்டி போடுறீங்க....

    அய்யா...!

    RépondreSupprimer
  3. உயிர்பிரிந்தும், உன்னினைவே ஒன்றிக் கிடக்கும்!

    நிறைவான கவிதைக்கு பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
  4. கொட்டும் அருவியாய் வார்த்தைகள் அகமகிழ்ந்து போனேன்.

    RépondreSupprimer
  5. பொய்யும் உரைப்பர் புலவர் என்று
    மெய்யை உரைத்திட்ட கவிஞரையாவே நீர்
    நெய்யும் நறும்பாக்கள் சொல்லுதே புனையும் உம்
    கையும் மணக்கும் கவியெழுதித்தான்...

    உங்கள் கற்பனை அற்புதம்!... வாழ்த்துக்கள்!!!

    RépondreSupprimer
  6. அருவியாய் பொங்கும் கற்பனை வளம்

    RépondreSupprimer
  7. ''..தண்டை சலசலக்க! கொண்டை மணமணக்க!
    வெண்டை விரல்கள் எனைமயக்க! - மென்வாழைத்
    தண்டை நிகர்த்த தவப்பெண்ணே! உன்விழிகள்
    நண்டை நிகர்த்த நறுக்கு!..''

    எதை எழுத தமிழமுதம் முழு வரிகளும். ஆசிரியரே.
    இன்று எனது ஆக்கத்தில் ஓரு கேள்வி- நீர்பால்
    இது நீர்ப்பால் என்று வரவேண்டுமா?
    இதில் எனக்கக் குளப்பம்.
    தீர்த்துவிடுங்கள் ஆசிரியரே...
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2013/02/18/48-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/


    RépondreSupprimer
  8. வணக்கம்
    கவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)

    அருமையான கவிதை உருக்கமான வரிகள் ஒவ்வொரு வரியிலும் செந்தமிழ் அனல் பறக்கும் வார்தைகள் வாசிக்கும் நெஞ்சங்களில் உறங்கி கிடக்கும்காதல் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer