jeudi 14 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 27]




261.
உன்னோ(டு) இருந்தஅவ் ஒவ்வொரு நன்னொடியும்
கண்ணோ(டு) இருந்து கமழுதடி! - வெண்ணிலவே!
பொன்னோ(டு) இருந்தும், பொருளோ(டு) இருந்தும்நீ
என்னோ(டு) இருந்தாய் இனிது!

262.
நேற்றுக்; களித்த நினைவுகளை எண்ணிமனம்
ஆற்றும் அளவின்றி ஏங்குதடி! - சாற்றுஞ்சொல்
ஏற்றும் நரம்பில் இளமை முறுக்குகளை!
காற்றும் கொதிக்கும் கனன்று

263.
மெல்ல உனைத்தொட்டு மெவும் நிலையாவும்
சொல்லச் சுரக்கும் மதவூற்றே! - செல்லமாய்
வெல்ல விளையாடி விளைத்த கவிதைகள்
அள்ளக் குறையா  அமுது!

264.
அல்லும் பகலும் அவளழகு என்னுயிரைக்
கொல்லும்! குவிமலைகள் மோதியெனைத் - தள்ளும்!மீன்
துள்ளும்! விளையாடித் தூண்டிலினைப் போட்டென்னை
அள்ளும்! அமுதை அளித்து!

265.
நாளும் மலர்க்குழலை நாடும் சிறுவண்டே!
கூறும்!நீ பெற்ற குளிர்ச்சியினை! - ஊறும்!தேன்
ஏறும் நெடியால் இசைக்கும்உன் மெல்லிசை
கீறும் மனத்தைக் கிழித்து

266.;
இந்தக் குலத்தில் இளையவள் நீராட
வந்த பொழுது வசந்தமே! - சந்தமுடன்
சிந்துக் கவிதீட்டும்! சின்ன சிறுமீன்கள்!
எந்தம் நிலையை ஏற்று!

267.
புதிய இருமீன்கள் வந்து புகுந்து
பதிய விளையாடப் பார்த்தே - புதுமையாம்
என்றே மயங்கி!இன் காதலை நன்கயல்கள்
நன்றே உரைக்கும் நயந்து!

268.
நித்திரை பேச்சி! நினைவலையோ உன்னித்தில்!
எத்திரை போட்டும் பயனில்லை! – இத்தரையில்  
வித்திடும் எண்ணங்கள் வீறுகொண்(டு) ஆடுதடி!
முத்திடும் ஆசையில் முந்து!

269.
தொற்றிக் கிடக்கும்உன் நெற்றி அழகினில்
முற்றிக் கிடக்கும் முழுக்காதல்! - நற்றவத்தைச்
சுற்றிக் கிடக்கும் அடியார் தொடர்பைப்போல்
பற்றிக் கிடக்கும் பற்று!

270.
வில்லென மின்னும் விழிகாக்கும் பேரழகை
வெல்லென நாளும் விரும்புகிறாய்! - வல்ல
நிறைகொண்(டு) ஒளிர்கின்ற நீள்புருவப் பேரழகை
பிறையென்று சொல்லல் பிழை!

(தொடரும்)

3 commentaires:

  1. தினம்தினம் ஒவ்வொரு புதுக்கவிதை எம்
    மனங்களில் தருகுது நல் உவகை தமிழ்
    மொழியினில் உள்ள அழகுதனை காதல்
    வரியினில் தருவது மிகுபோதை...

    ஐயா! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  2. வணக்கம்
    கவிஞர்,கி,பாரதிதாசன்(ஐயா)

    நித்திரை பேச்சி! நினைவலையோ உன்னித்தில்!
    எத்திரை போட்டும் பயனில்லை! – இத்தரையில்
    வித்திடும் எண்ணங்கள் வீறுகொண்(டு) ஆடுதடி!
    முத்திடும் ஆசையில் முந்து!

    அருமையான கவி வரிகள் இன்று காதலர் தினம் தினத்துக்கு ஏற்றால்போல் கவிநயம் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. அய்யா தங்கள் கவிதைகளைப் படிக்கப் படிக்க வயது குறைந்து கொண்டே போகின்றது.

    RépondreSupprimer