dimanche 10 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 26]





காதல் ஆயிரம் [பகுதி - 26]
 
251.
வேர்வை மழைகுளித்து வேகும் நிலையெல்லாம்
பார்வை கிடைக்கப் பறந்தகலும்! - சேர்ந்திருந்த
போர்வை அழைக்குதடி! போதை பெருகுதடி!
மார்பைத் தழுவும் மணம்!

252.
பூமழை மெல்லப் பொழியும்! அரும்சந்தப்
பாமழை ஓசை படர்சுகமே! - தாமரையே!
தேமழை உன்னெழில் தேகமடி! என்னுடன்
ஆ..மழை என்றேநீ ஆடு!

253.
வாடி எனைத்தேடி! வண்ண மலர்சூடி!
ஆடி அழகுத் தமிழ்பாடி! - கூடிமனம்
கோடி நலம்தாடி! கோகுலத்தை நாடிக்கண்
மூடி விளையாடி முந்து!

254.
தேமா இனிக்கும்! தினைமாவும் செங்கரும்பும்
ஆமா இனிக்கும்! அதிரசமும் - பூமதுவும்
தாமா இனிக்கும்! தளிர்க்கொடியே நீநடந்து
வாமா இனிக்கும்! மனம்!

255.
உருவம் ஒளிருதடி! உள்ளுணர்வு பெருகிப்
பருவம் படருதடி! ஆசை - அரும்பி
மருவும் மனத்தை மலரே அடக்க
பெருகும் சுமையோ பெரிது!

256.
அத்தான் எனநீ அழைக்கும் பொழுதெல்லாம்
பொத்தான் அறுந்தோடும்! மார்புடைக்கும்! - முத்தழகே!
கொத்தாய் மணம்சூடும் கொல்லழகால் என்னுயிர் 
சத்தாய்த துடிக்கும் தழைத்து!

257.
எத்தனை சென்மம் எடுத்தாலும் என்னவளின்
முத்தனை அன்பில் முழுகிடுவேன்! - முத்தமிழே!
சித்திரைச் சீர்திரு நாள்போல் இரவுகளை
நித்திரை இன்றியே நீட்டு!

258.
கண்டதும் காதல் கடலெனப் பொங்குதடி!
தென்றலும் வந்து திகைக்குதடி! - நன்றாடும்
கெண்டை விழிகள் கிறுக்கும் தமிழ்க்கவிதை
தொண்டைக் குழிகிடக்கும் தோய்ந்து!

259.
எனைக்காண வந்தவளே! இன்பத் தமிழ்போல்
துணைசேர வந்தவளே! தூண்டும் - கணைதந்(து)
அணைமீற வந்தவளே! அன்பமுதாய் என்னுள்
சுனையூற வந்தவளே! சொல்லு!

260.
அருங்கொடி யாளே! அழகொளிர்பூக் காடே!
பெருங்குடிச் சீரே!என் பேறே! - அருளாய்!
ஒருநொடி உன்னுருவை உற்றுநான் பார்த்தால்
அருங்கவி ஊறும் அகத்து!

(தொடரும்)

3 commentaires:


  1. பூமழை மெல்லப் பொழியும்! அரும்சந்தப்
    பாமழை ஓசை படர்சுகமே!

    அழகான வரிகள்..பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
  2. வணக்கம்
    கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)

    உருவம் ஒளிருதடி! உள்ளுணர்வு பெருகிப்
    பருவம் படருதடி! ஆசை - அரும்பி
    மருவும் மனத்தை மலரே அடக்க
    பெருகும் சுமையோ பெரிது!

    அருமையான வரிகள் ஒவ்வொரு வரியிலும் காதல் சந்தம் பாடுது ஐயா,,,
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. தமிழே தாயே எங்களெல்லோர் உளத்திலும் நீயே
    அமிழ்தேயன்னமே உன்புகழெம் கவிக்குக் காதலாயிரமே
    பொழுதே போதுமோ உனதெழில் இங்குகாணவே - பொழிலே
    தொழுவோமுனையும் கவியையையும் ஒன்றுசேர்த்தே...

    RépondreSupprimer