mercredi 6 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 22]




காதல் ஆயிரம் [பகுதி - 22]

211.
பார்வைக்குள் சிக்கிப் படும்பாடும்! காதலெனும்
போர்வைக்குள் சிக்கிப் புழுங்குவதும்! - நேரிழையாள்
கூர்மை விழியிரண்டால் கொல்வினை கொண்டதுவும்
நேர்மை செயலோ நிலத்து!

212.
அழகின் சிரிப்பே! அமுத சுரப்பே!
ஒழுகும் மதுவே! உயிரே! - பழகப்
பழக இனிக்கும் பழந்தமிழ்ப் பெண்ணே!
எழுதும் கவிக்குள் இரு

213.
பேசாதே என்னிடம் என்றுரைத்துப் பேரிடியை
வீசாதே என்னிடம் கூர்விழியே! - ஏசாதே!
பூசாதே என்னிடம் பொல்லாத் துயரத்தை!
பீசாதே நெஞ்சைப் பிழிந்து!

214.
காலைக் குளிரினில் கன்னியின் முத்தங்கள்!
காளை மனத்தைக் கலக்குதடி - சேலையிலே
சோலை மணக்குதடி! சொக்கி உனைத்தழுவ
வேளை வந்தது வே!

215.
சல்..சல் ஒளிக்கும் சலங்கை ஒலியோசை!
சில்..சில் சிலிர்க்கும் குளிர்காற்று! -நல்லுறவைச்
சொல்.. சொல் சுரக்கும் சுகவூற்று! தூயவளே!
வெல்..வெல் இளமை மிளிர்ந்து!

216.
சிந்தை மயக்கும் சிரிப்பழகி! என்னுயிரைக்
கந்தை எனக்கிழிக்கும் கைக்காரி! - விந்தையோ?
மந்தை விலங்கென என்மனம் போகுதே!
நிந்தை முழுவதும் நீக்கு!

217.
அன்னத்தின் மென்மையும்! அந்தமிழின் சீர்நடையும்!
கன்னத்தின் தேன்சுவையும் காப்பவளே! - என்னவளே!
துன்பத்தின் எல்லையைத் தூளாக்கி, என்கை,கோர்த்(து)
இன்பத்தின் எல்லையை எட்டு!

218.
காவளம் போன்றும்! கனிவளம் போன்றும்!என்
நாவளம் மேவி நலமுறவே! - ஆவலாய்ப்
பாவலன் பாடிடும் பாட்டின் கருசெழிக்க
மாவளம் சூடிடும் மாது!

219.
மறந்துவிடு என்றாள்! இருண்டுவிடும் நெஞ்சம்!
துறந்துவிடு என்றாள்! துயரம் - நிறைய
பிரிந்துவிடு என்றாள் பிறவியேன்? என்னைத்
தெரிந்துவிடு என்றேன் தெளிந்து!

220.
அழுவதேன் அன்பே! அழுதழுது நெஞ்சம்
விழுவதேன் அன்பே! விழிநீர் - ஒழுகி
உழுவதேன் மெய்மை! உறைவதேன் வாழ்வு!
தொழுவதேன் நாமும் தொடர்ந்து!

(தொடரும்)

3 commentaires:

  1. சிந்தை மயக்கும் நின் வரிகள்
    விந்தை அல்லவே உண்மையென்றுரைப்பது.

    RépondreSupprimer
  2. அழகின் சிரிப்பே! அமுத சுரப்பே!
    ஒழுகும் மதுவே! உயிரே! - பழகப்
    பழக இனிக்கும் பழந்தமிழ்ப் பெண்ணே!
    எழுதும் கவிக்குள் இரு!.....

    மனம் தொட்ட இக் கவிதை வரிகள்
    தரும் சுவை என்றும் அற்புதம் !............
    மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  3. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    காலைக் குளிரினில் கன்னியின் முத்தங்கள்!
    காளை மனத்தைக் கலக்குதடி - சேலையிலே
    சோலை மணக்குதடி! சொக்கி உனைத்தழுவ
    வேளை வந்தது வே!

    இந்த வரிகளின் வார்தைகளை விளக்க என்னிடம் சொற்கள் இல்லை,ஐயா அருமையான படைப்பு வாழ்க உங்கள் பணி,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer