samedi 2 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 18]




காதல் ஆயிரம் [பகுதி - 18]

171.
தேரோடும் வீதியிலே தேவியுனைக் கண்டமுதல்
போராடும் என்னுயிர் போதையிலே! - நீரோடும்
ஏரோடும் என்னுள்ளே தேனோடும்! நெஞ்சத்தை
வேரோடு கவ்வும் விழி!

172.
முத்தொளிரும் பல்லாக்கு முன்வரும்! நற்காதல்
பித்தொளிரும் பல்லாக்குப் பின்வரும்! - முத்தமிழே!
கற்றொளிரும் காரிகையே! எப்பிறப்பும் உன்மேலே
பற்றொளிரும் நன்றே படர்ந்து!

173.
பாதை மணக்கும்!கைப் பட்ட இடம்செழிக்கும்!
போதை கொடுக்கும்! புலமைதரும்! – கோதையவள்
கீதை எனக்கு! கிடைத்தற் கரியவள்!
சீதை நிகர்த்த சிறப்பு!

174.
நடந்தால் நடனம்! நறுமலர்த் தோப்பில்
கிடந்தால் சிலையொளிர் கீர்த்தி! – கொடிபோல்
படர்ந்தால் தமிழ்ப்பாக்கள்! பாவையவள் கைபிடித்துத்
தொடர்ந்தால் சுரக்கும் சுகம்!

175.
புலியாட்டம் போட்டுப் புகழ்ஈட்டும் வீரன்
எலியாட்டம் போடல் இனிதா? – கிளியே!
மயிலாட்டம் கண்டு மனதாட்டம் காணும்!
குயிற்றோட்டம் நம்மனக் கூடு!

176.
நொண்டி விளையாட்டில் நோக்கம் செலுத்தாமல்
சண்டி புரியும் சதியென்ன? – கன்னியே!
உண்டி சுருங்க உயர்மார்(பு) அழகினிலே
ஒன்றிக் கிடக்கும் உயிர்!

176.
மலரோடு சேர்த்தென் மனங்கட்டும் பெண்ணே!
வளமோடு வாழ வழிசெய்! – நிலவே
நிலமோடு சேரும் நெகிழ்யொளி போல
உளமோடு சேரும் உறவு!

177.
முன்னே நடைநடந்து பின்னே கணைதொடுக்கும்
என்னே எழிற்பெருக்கு! ஏங்குகிறேன்! - இன்மழைசேர்
விண்ணே! மதன்நூல் விரிவுரையே! அன்பமுதக்
கண்ணே! கருணையைக் காட்டு!

178.
ஓர விழிப்பார்வை ஓதும்! சுகவுணர்வு
ஆர இறங்க அமுதூறும்! - ஈரவிழி
ஏற இறங்கக்கூர் மூக்கிசைக்கும்! வாய்பார்க்கும்!
மாறன் கலையை மகிழ்ந்து!

179.
செவியில் செழுந்தமிழைச் செப்புகின்ற உன்றன்
கவியில் கரைந்தான் கவிஞன்! - குவிந்த
மணியாடும் காதழகில் என்மனம் ஆடும்
அணியாடும் மார்பழகில் ஆழ்ந்து!

180.
கொதித்த மனத்தைக் குளிரூட்டும் வண்ணம்
பதித்த கனிமுத்தப் பாவாய்! - உதித்த
மதியென மின்னும் மலர்முகம் கண்டால்
கதியென மின்னும் கவி! 


(தொடரும்)

3 commentaires:

  1. //கிடைத்தற் கரியவள்!
    சீதை நிகர்த்த சிறப்பு!//

    சீதை
    அதனாலேயே சிறப்பு ...
    அதனாலேயே அரியது....

    தொடர்க .... வாழ்க ....

    RépondreSupprimer
  2. ஆசிரியரே ரசிக்கிறேன் தமிழை.
    மிக்க நன்றி.
    அதற்கு மேல் கூற தமிழ் போதவில்லை.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  3. கோதையாய்ச் சீதையாய் என்றுமே எமக்கு நல்ல
    பாதையைக் காட்டிடும் கீதையானவள் கவிஞர்
    பாரதி தாசனின் கவியானவள் காதல் ஆயிரம் கருவானவள்
    எங்கள் உயிரானவள் தாய் ஆனவள் தங்கத்தமிழ்தான் அவள்!

    அருமையாக உங்கள் கவி இருக்குதையா!
    மனதார உங்களுக்கு நன்றி சொன்னேனையா!

    RépondreSupprimer