vendredi 1 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 17]





காதல் ஆயிரம் [பகுதி - 17]

161.
ஈக்கள் பலவும் எழில்மலர் என்றெண்ணும்!
பூக்கள் பலவும் மனம்புழுங்கும்! – ஆக்கிடும்
பாக்கள் பலவும் படைத்த பயன்மேவும்!
ஏக்கம் பெருக்கும் எழில்

162.
என்னுள் இருக்கிறாய்! உன்னுள் இருக்கிறேன்!
இன்னும் எனையேன் வெறுக்கிறாய்! - கண்களால்
இன்னூல் மொழிகிறாய்! பொன்னூல் புனைகிறேன்!
மண்ணில் மணக்கும்நம் வாழ்வு!

163.
இறவா திருக்க இளைப்பார்! உலகில்
பிறவா திருக்கப் பிடிப்பார்! – மறையே
மறவா திருக்க மதி..தா. அவளின்
உறவோ டிருக்க உதவு!

164.
குறையாத செல்வம் கொடுவென்று கேட்பார்
மறையோதும் மாந்தர் மகிழ்ந்தே! – இறைவா!
நிறைவாக என்னவளை நெஞ்சுள் நிறுத்தி  
உறவாட வைப்பாய் உவந்து!

165.
ஒருபாகம் ஆளும் உமையாள்! மனமாம்
அரும்பாகம் ஆளும் மலராள்! – பெருமை
தரும்பாகம் ஆளும் தளிர்கொடியே! நீ..என்
பெரும்பாகம் ஆளும் பிறப்பு!

166.
காதி நிறத்துள்ளம்! கன்னல் மொழிவெல்லும்!
மோதிக் கயல்துள்ளும்! முத்தொளிரும்! - தூதெனச்
சோதி கவிதைகள் சொல்லும்!உன் பேரழகு
போதி மரமெனப் பூத்து!

167.
சாதி சமயங்கள் சாற்றும் தடைகளை
மோதி மிதித்து முறித்திடுவோம்! – நீதியொளிர்
ஆதித் தமிழ்நெறியில் ஆழ்ந்திடுவோம்! வாழ்வினில்
பாதி.நீ! பாதி...நான்! பாடு!

168.
பந்தாடும் வேளையிலே என்னுயிரைப் பந்தாடிச்
சிந்தாடும் சின்னவளே! சிந்தையை - உந்தியே
தந்தாடும் ஆசைகளைக் கொண்டாடத் தேன்குடமே!
வந்தாடு பக்கம் மகிழ்ந்து!

169.
மலராடும் சோலையில் மஞ்சள் வெயிலில்
நிலவாடும் வண்ண நினைவில் - நிலைமை 
தளராத மார்பில் தலைசாய்ந்து கண்ணே!
உளமார உண்பேன் உனை!

170.
பின்னிய மல்லிகை பேசுதே என்னிடம்!
மின்னிய மெல்லிடை மீட்டுதே! – கண்விசை
பன்னிய கூத்துக்கள் பற்றிப் படருதே!
புண்ணிய காதல் புனைந்து!


(தொடரும்) 

12 commentaires:

  1. சொல்லாடும் பாவினிலே
    சுழன்றாடிப் போகுதிங்கே மதியுந்தான்.... ஐயா அடிக்க வந்துடாதிங்க ஏதோ சும்மா கிறுக்கினேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பல்லாடும் தாத்தாவும் பட்ட கிழவியும்
      சொல்லாடும் என்கவியைச் சூடினால்! - நல்லின்பம்!
      தாள்ளாடும் மேனி தழைத்தோங்கும்! காலத்தின்
      முள்ளாடும் வேகம் முளைத்து!

      Supprimer
  2. ஐயா...

    எண்ணம் அது ஈடேறும் உங்களின் விடா முயற்சியால்
    வண்ணமாக மிளிர்ந்து பல கவிஞர் உமைத்தொடர்ந்து
    திண்ணமாகத் திகழுவர் தீந்தமிழைத் தீர ஓதி
    அண்ணன் அவன் ஆவலைத் தீர்ப்பரே விரைந்து...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எண்ணம் தமிழ்என்பேன்! என்விழிகள் பார்க்கின்ற
      வண்ணம் தமிழ்என்பேன்! இன்மதியே! - திண்ணமுடன்
      நண்ணும் தமிழ்என்பேன்! நான்போற்றிப் பாடுகின்ற
      கண்ணன் தமிழ்என்பேன் காத்து!

      Supprimer

  3. காதல்! காதல்! காதல்!
    காதல் போயின்
    சாதல்! சாதல்! சாதல்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாரதி பாடிய பாட்டடியை இங்குரைத்துச்
      சீரதிகம் செய்தீா் செழிப்புடனே! - பாரதிபோல்
      நானும் படைக்கின்றேன் நல்ல கவிதைகளை!
      தேனும் இனிக்கும் திரண்டு!

      Supprimer

  4. காதலுக்கு வெண்பா மாலை!

    உலகம் இருக்கும்வரை காதல் இருக்கும்
    இந்த வெண்பா மாலையும் இருக்கும்

    RépondreSupprimer
    Réponses

    1. காதலுக்கு வெண்பாவில் கட்டுகிறேன் பொன்மாலை!
      மாதவளே சொற்கள் வழங்கிடுக!- வேதமெனப்
      போற்றிப் புகழ்கின்ற பொற்புடைய ஆயிரமும்
      ஆற்றின் பெருகென ஆடு!

      Supprimer

  5. நீ..பாதி! நான்..பாதி! என்றே நெகிழ்ந்தாடத்
    தா..மீதி பாக்களையும் தாம்சுவைக்க! - வா..சோதி
    ஏற்றி வணங்குவோம்! இன்பூறும் காதலைப்
    போற்றி வணங்குவோம் பூத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூத்து மணங்கமழும் பூங்கொடியை எந்நாளும்
      பார்த்து மணங்கமழும் என்பார்வை! - சோ்த்திறுக்கிக்
      கட்டி அணைக்கின்ற கற்பனைகள் இன்பத்தைக்
      கொட்டிக் கொடுக்குமெனக் கூறு

      Supprimer
  6. சுவை சுவை தமிழ் சுவை.
    இவை படிக்கத் தூரமாய் - எமக்கு
    அவைக்களம் தேவையில்லை இங்கே கணனியில்
    கவை(கோட்டை) பாரதிதாசன் கவிதைகள் போதும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  7. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    பின்னிய மல்லிகை பேசுதே என்னிடம்!
    மின்னிய மெல்லிடை மீட்டுதே! – கண்விசை
    பன்னிய கூத்துக்கள் பற்றிப் படருதே!
    புண்ணிய காதல் புனைந்து!

    ஆழ்ந்த கருத்துஇந்த 4 வரியிலும் பெண்களின் அங்கமேஅமைந்துள்ளது ஒரு பெண்னைப் பற்றிய வர்ணனை மிக அருமையாக உள்ளது (ஐயா) வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer