பாவலர் பட்டம் பெற்ற
திருமிகு ஆற்றலரசு வாழியவே!
இனமோங்கி வாழ்ந்திடவும், கொள்கை தந்த
இடமோங்கிக் கமழ்ந்திடவும், அறனும் அன்பும்
மனமோங்கி ஆண்டிடவும், முன்னோர் கண்ட
மரபோங்கி மணந்திடவும், வண்ணம் சந்தம்
தினமோங்கி யிசைத்திடவும், மொழியைக் காக்கும்
திறமோங்கிச் சிறந்திடவும், மண்ணில் எங்கும்
வனமோங்கிச் செழித்திடவும் முழக்கம் செய்து
வளமோங்கும் கவியாற்ற லரசே வாழி!
பாவாணர் நெறியேற்று வாழும் நெஞ்சம்!
பண்பெல்லாம் வந்தேகிப் பற்றிக் கொஞ்சும்!
நாவாணர் நடைவாணர் மொழிப்போர் வீரர்
நல்லபெருஞ் சித்திரனார் போற்றும் சிந்தை!
மாவாணர் மாண்புகளை வாழ்த்தும் நல்..வாய்!
நம்மீழக் கொடியேந்தி ஓங்கும் கைகள்!
கோவாணர் போல்பணிகள் நன்றே செய்து
கொழித்தோங்கும் தமிழாற்ற லரசே வாழி!
தென்மொழியாம் இதழ்படித்து வன்மை பெற்றுத்
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் நன்றே இட்டு,
நன்மொழியாம் குறள்படித்து நடையே போட்டு
நல்லோர்தம் நட்புறவை நாளும் சேர்த்து,
பொன்மொழியாம் நுால்படித்து வாழ்வைக் கற்றுப்
புகழாளர் பண்புகளைத் தலைமே லுற்று,
தொன்மொழியாம் பாட்டரங்கில் பட்டம் ஏற்றுத்
தொண்டாற்றும் பேராற்ற லரசே வாழி!
வாழ்வியலை அறிவியலை வானின் ஆய்வை
மனமூன்றித் கவிதீட்டிப் புதுமை கூட்டி,
தாழ்வியலை எண்ணாத தகைமை சூட்டி,
தந்திரம்செய் பகைவர்களைப் பாய்ந்தே ஓட்டி,
ஊழ்நிலையைத் தானெண்ணி உழலும் மக்கள்
உயர்நிலையை யடைந்திடவே உரிமை மூட்டி,
பாழ்நிலையைப் போக்கிடவே பாதை காட்டிப்
பயனளிக்கும் வல்லாற்ற லரசே வாழி!
காலமெலாம் கற்றிடவே வேண்டும் என்று
கவித்தமிழின் யாப்பியலை உள்ளம் சூடி,
ஞாலமெலாம் போற்றிடவே வேண்டும் என்று
நம்மொழியின் பெருமைகளை ஏத்திப் பாடி,
கோலமெலாம் ஏற்றிடவே வேண்டும் என்று
கொண்டாடிக் கூத்தாடித் துடிக்கம் நாடி,
மூலமெலாம் ஆய்ந்திடவே வேண்டும் என்று
முன்னிற்கும் வியனாற்ற லரசே வாழி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
06.01.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire