dimanche 2 janvier 2022

விருத்த மேடை - 62

 


விருத்த மேடை - 62

 

எண்சீர் விருத்தம் - 15

 

அரையடி வெண்டளை விருத்தம்

 

அடுத்தவர்க் கெல்லாம் அருள்புரி வானை

   அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்

தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்

   சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்

கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்

   கண்ணுத லானைஎம் கண்ணக லானை

எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை

   இன்றை இரவில் எதிர்ந்துகொள் வேனே!

 

[வள்ளலார், திருவருட்பா - 1079] 

 

சோம்பர் கெடுக்கும் துணிவேஎ சக்தி!

   சொல்லில் விளங்கும் சுடரேஎ சக்தி!

தீம்பழந் தன்னில் சுவையேஎ சக்தி

   தெய்வத்தை யெண்ணு நினைவேஎ சக்தி!

பாம்பை யடிக்கும் படையேஎ சக்தி!

   பாட்டினில் வந்த களியேஎ சக்தி!

சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்

   சங்கர னன்புத் தழலேஎ சக்தி!

 

[மகாகவி பாரதியார்]         

 

கல்வியொளி

 

அகத்துள் விளக்காய் ஒளிருமே கல்வி!

   அணியுள் மணியாய் மிளிருமே கல்வி!

பகுத்துஉள் தெளிவைப் பகருமே கல்வி!

   பணியில் புகழைப் பதியுமே கல்வி!

தொகுத்துஉள்  உயர்வை மொழியுமே கல்வி!

   தொண்டின் சிறப்பைப் பொழியுமே கல்வி!

வகுத்துஉள் வெளியை வரையுமே கல்வி!

   வள்ளலாய் இன்பம் வழங்குமே கல்வி!

 

[பாட்டரசர்]

 

ஒவ்வோர் அரையடியும் வெண்டளையைப் பெற்றுவரும். அரையடிதோறும் ஈற்றுச்சீர் மாச்சீராகும். நேரசையால் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்களும், நிரையசையால் தொடங்கும் அரையடியில் 12 எழுத்துக்களும் இருக்கும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும். விளங்காய்ச் சீர்கள் இப்பாடலில் வாரா.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.01.2022

1 commentaire: