mardi 11 janvier 2022

காதணி

 


தொங்கும் காதணி

வண்ணச் சோலையின்

வாயில் கோபுரம்!

 

மூக்கு

சறுக்கு மரமாம்!

காது

ஊஞ்சல் இடுமாம்!

 

கருணைத் தேரில்

கட்டிய சுங்கு!

 

பேரழகி

காலடியில் மகுடம்!

கதையில் கண்டேன்!

இவள்

காதடியில் மகுடம்!
நேரில் கண்டேன்!

 

காதோடும் கழுத்தோடும்

உறவாடும் அணியே!

உண்மை சொல்வாய்!

அவள் அங்கம்

பட்டுத் தன்மையா?
மொட்டு மென்மையா?

 

அமுதே!

உன்னழகால் - என்

மனம் ஆடுமே!

தொங்கும் காதணி

தினம் ஆடுமே!

 

பெண்ணே!

காதில் தொங்குவது

பொன்னணியா?  

என்னுயிரா?

 

நீ அழகா?

காது அழகா?

காதில் ஆடும் அணியழகா?

 

காதணி

ஆடு்ம் எழில்! - இன்பஞ்

சூடும் பொழில்! - எனக்கு
அதைப்

பாடும் தொழில்!

 

கோதையே!  
தொங்கல் சுற்றும்!

எனக்குப்
போதையே முற்றும்!

 

கண்ணே!

உன்னைத் தொட்டுத் தொட்டுக்

காதணிகள் கூத்தாடும்!

என்னைத் தொட்டுத் தொட்டுக்

கவியணிகள் பூத்தாடும்!

 

அன்பே!

உன் சொல்லே

வேதமெனத் தலையாட்டுவோம்!

நானும் காதணியும்!

 

அழகே!

இங்கும் அங்கும்

காதணி

மின்னி அசையும் - என்னைப்

பின்னிப் பிசையும்!

தேவதையே!

அடுத்த பிறப்பில் - யான்

காதணியாய்ப் பிறப்பேன்!

உன் செவியோடு

உறவாடிக் களிப்பேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

11.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire