mercredi 5 janvier 2022

ஓசூர் மணிமேகலை

 


பாவலர் பட்டம் பெற்ற

ஓசூர் மணிமேகலை ஓங்குபுகழ் காண்க!

 

பற்றுடனே பைந்தமிழைப் பாடிப் பாடிப்

   பயிலரங்கில் பெயர்பெற்றார்! பண்டை யாப்பை

முற்றுடனே தெளிவுற்று முன்னோர் போற்ற
   முழுமதியாய் மிளிர்கின்றார்! மேடைச் சீரை

உற்றுடனே உளமேந்தி ஓதி ஓதி
   உயர்நெறியைப் படைக்கின்றார்! சான்றோ ராகக்

கற்றுடனே புகழ்சூட வாழ்த்து கின்றேன்!

   கனகமணி மேகலையார் காலம் வெல்க!

 

சந்தமிகு செந்தமிழைத் தலைமேல் பூண்டார்!

   சாந்தமிகு குறளறத்தை நெஞ்சுள் ஆண்டார்!

சொந்தமிகு உறவுகளைப் போற்றிக் காத்தார்!

   துாய்மைமிகு நட்புகளை ஏத்திச் சேர்த்தார்!

கந்தமிகு சொற்களையே எங்கும் பூத்தார்!

   காந்தமிகு ஈர்ப்புடனே கவிதை யாத்தார்!

பந்தமிகு பாட்டரசன் வாழ்த்து கின்றேன்!

   பாசமணி மேகலையார் பாக்கள் வெல்க!

 

கண்ணுக்கே இமைகாவல்! கன்னல் ஊறும்

   கவிதைக்கே இவர்காவல்! சுற்றும் இந்த

மண்ணுக்கே மலைகாவல்! வாழும் வல்ல

   மாண்புக்கே இவர்காவல்! எல்லை யில்லா

விண்ணுக்கே கதிர்காவல்! மேலோர் சொன்ன  

   மேன்மைக்கே இவர்காவல்! சந்தங் கொஞ்சும்

பண்ணுக்கே யான்காவல் வாழ்த்து கின்றேன்!

   பாடுமணி மேகலையார் பாதை வெல்க!

 

இல்லறத்துப் பண்பெல்லாம் இனிக்கும் வண்ணம்

   எந்நாளும் வாழ்கின்ற ஏற்றங் கொண்டார்!

நல்லறத்து நுால்படித்து நன்றே பற்றி

   நற்றவத்து நாயகியாய் உயர்வைக் கண்டார்!

வில்லறத்துப் பேரழகன் சீதை யோடு

   விரைந்தேடி இணைந்ததுபோல் அன்பை யுற்றார்!

சொல்லறத்துப் பாட்டரசன் வாழ்த்து கின்றேன்!

   சோதிமணி மேகலையார்  பணிகள் வெல்க!

 

பொங்கிவரும் ஆற்றலினால் புதுமை பொங்கப்

   பொழில்விருத்தம் ஐந்நுாறு படைத்தார் வாழி!

சுங்கிவரும் தாயமென இன்பங் கொள்ளக்

   தொண்டுள்ளம் கொண்டுதினம் உழைத்தார் வாழி!

தங்கிவரும் அணைநீராய் நன்மை நல்கித்

   தரணியுளம் மகிழ்ந்திடவே வாழ்ந்தார் வாழி!

தொங்கிவரும் வன்விழுதன் வாழ்த்து கின்றேன்!

   துாயமணி மேகலையார் தொடர்ந்து வெல்க!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

05.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire