கேட்டலும் கிளத்தலும்
வெண்பாவின் ஈற்றில் தனிக்குறில் வரலாம். ஆனால் சிறப்பில்லை என்று விளக்கமளித்தீர். நன்றி. செய்யுள் அடிகளில் தனிக்குறில் நேரசையாக ஆகும் இடங்கள் உண்டா?
மணியன், புதுவை
---------------------------------------------------------------------------------------------------------------------------
தனிக்குறிலானது தற்சுட்டு, ஏவல், குறிப்பு, சுட்டு, வினா என்ற ஐந்தும் தவிர ஏனைய இடங்களில் நேரசையாக வாராது.
'அ.ஆ. இழந்தானென் றெண்ணப் படும்' [நாலடியார் - 9]
அ ஆ - அந்தோ என்னும் பொருளது. ஈண்டுக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழி முதற்கண் விட்டிசைத்து நேரசை யாயிற்று. அ ஆ - நேர் நேர் என்க.
'நொஅலையல் நின்ஆட்டை நீ'
நொ என ஏவற்கண் தனிக்குறில் மொழி முதற்கண் விட்டிசைத்து நேரசையாயிற்று. நொஅலையல் - நேர் நிரை நேர்
'அஉ அறியா அறிவில் இடைமகனே'
அஉ - எழுத்துக்களைச் சுட்டியமையின் தற்சுட்டாய் இரண்டு குற்றுயிர்களும் விட்டிசைத்து நேர் நேர் ஆயின.
அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால்
எஎவனும் வெல்லார் இல்
அ அவன், இ இவன், உ உவன், - சுட்டு
எ எவன் - வினா
அ அவனும் முதலிய நான்கும், சுட்டு வினா இடைச்சொற்களாகிய குற்றுயிரெழுத்துக்கள் விட்டிசைத்தலின் நேர் நிரை நேர் ஆம்.
விட்டிசைக்காமல் மற்றொன்றனோடு இயைந்து இனியவாய் நடப்பின் முதற்கண் நேரசை யாகா.
'யரல வழள இடையினமாம்'
'து மருந்து துாயனவே கொண்டு'
யரல வழள என்பன தற்சுட்டின்கண்ணும் விட்டிசையாமையின் யரள - நிரை நேர், வழள - நிரை நேர் என்க.
துமருந்து - ஏவல் ஆயினபோதும் விட்டிசையாமையின் நிரை நேர் நேர் என்க [து - உண்]
'அஇ உஎஒ இவை குறிய மற்றை
ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே'
'அஇ உஎஒ' விட்டிசைத்துத் தற்சுட்டின்கண் முதலிலும் இடையிலும் இறுதியிலும் தனிக்குறில்கள் நேரசையாயின.
வல்ல புகழ்வாணர் வ.சு. மணியரின்
நல்ல கவிகளை நாளும் படித்திடுவோம்!
பாவளம் கூடும்! பயன்விளையும்! மேடையிலே
நாவளம் கூடும் நமக்கு! [பாட்டரசர்]
வ.சு - நேர் நேர் - தேமா.
வ. சு என விட்டிசைப்பதால் நிரையாகக் கணக்கிடக் கூடாது.
செய்யுளிசை நிறைத்தற்கு வரும் உயிரளபெடையாகிய செயற்கையளபெடைக்கண் வரும் குற்றுயிர்களின் மாத்திரையிசை சீர்களின் அசையுறுப்பாய் அலகு நிலை பெறுதலும் உரியது. அசைநிலையாய் அலகு பெறாமையும் உரியது.
அலகுபெறும் இடத்தில் குற்றுயிரை நேரசையாய்க் கொள்ள வேண்டும். அளபெடையில் வரும் குற்றுயிரைத் தொடர்ந்துவரும் குறிலுடனோ நெடிலுடனோ சேர்த்து நிரையசையாகக் கணக்கிடக்கூடாது.
தேஎவே காத்திடுவாய்! தேன்போல் கவிதைகளை
நாஅவே பாட நலந்தருவாய்! - காஅவாய்ச்
சீர்காண வேண்டும்! செழுந்தமிழின் ஆட்சியினால்
பார்காண வேண்டும் பயன்! [பாட்டரசர்]
மேலுள்ள வெண்பாவில் தேஎவே, நாஅவே, காஅவாய் ஆகிய சீர்கள் நேர் நேர் நேர் எனத் தேமாங்காயாகும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
07.01.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire