பாவலர் பட்டம் பெற்ற
பத்மினி கேசவகுமார் பல்லாண்டு வாழ்க!
கண்ணன் அழகில் கட்டுண்டு
கவிதை பாடும் பத்மினியார்
எண்ணம் யாவும் தேனுாறும்!
இன்னேழ் இசையே ஊனுா’றும்!
வண்ணம் மிளிருஞ் சோலையென
வானம் ஒளிருங் காலையென
எண்ணும் எழுத்தும் படைகின்றார்!
எங்கும் புகழை விளைக்கின்றார்!
கொஞ்சும் தமிழை எந்நாளும்
குழைத்துப் பாடும் பத்மினியார்
விஞ்சும் மாட்சி மனமுடையார்!
வியக்கும் ஆட்சி மதியுடையார்!
பஞ்சும் பட்டும் போல்மென்மை
படர்ந்து தழைக்குங் குணமுடையார்!
இஞ்சி மருந்தாம்! இவர்தும்பல்
இசைக்கு விருந்தாம்! வாழ்த்துகிறேன்!
பாவாய் மொழியும், பண்ணிசையும்
பருகி வாழும் பத்மினியார்
பூவாய் முகமும், பொலிகின்ற
பொன்னாய் அகமும் பெற்றவராம்!
நாவாய் சுமக்கும்! நன்னெறியை
நா..வாய் சுமக்கும்! சீர்பாடிக்
கூவாய் குயிலே! குலமோங்கிக்
கொழிக்கத் தமிழால் வாழ்த்துகிறேன்!
பால்போல் வெண்மை, பொழிகின்ற
பனிபோல் தண்மைப் பத்மினியார்
வேல்போல் வன்மைச் சிந்தனையும்
வில்போல் கூர்மை நல்லுரையும்
ஆல்போல்
செம்மை படர்செயலும்
அணிபோல் ஒண்மை உடைநலமும்
மால்போல் அருளுங் கொடைவளமும்
வாய்த்தார் வாழ்க பல்லாண்டே!
சந்து பொந்துக் களமெங்கும்
தமிழைப் பாடும் பத்மினியார்
சிந்து சந்தம் வண்ணங்கள்
சிந்தைக் குள்ளே விளையாடும்!
வந்து வந்து தாளங்கள்
வார்த்தைக் குள்ளே நடமாடும்!
முந்து முந்து பாட்டுலகில்
முன்னைத் தமிழால் வாழ்த்துகிறேன்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
29.01.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire