பாவலர் பட்டம் பெற்ற
நெய்தல் நாடன் வாழியவே!
பாடு மரங்கை உயிராகப்
பயில்வோர் தம்மை உறவாக,
ஆடு மயிலின் அழகாக,
அரிமா கொண்ட நடையாக,
ஓடு நதியின் நிலையாக,
உரிமை பொங்கும் அலையாக,
நீடு புகழ்சேர் கவிசெய்தான்!
நெய்தல் நாடன் வாழியவே!
வஞ்சப் படையை விரட்டுகிற
வல்ல தலைவன் சீர்மீட்டி,
தஞ்சம் என்று வந்தவரைத்
தாங்கிப் பிடித்து வழிகாட்டி,
கொஞ்சக் கொஞ்ச இசைகூட்டிக்
கொண்ட கொள்கை நிலைநாட்டி,
நெஞ்சக் கூட்டில் தமிழாளும்
நெய்தல் நாடன் வாழியவே!
கம்பன் கழகச் செயல்வீரன்!
கற்கச் துடிக்கும் கவிமாறன்!
இம்மண் முழுதும் செந்தமிழை
இசைக்க வுழைக்கும் நெறியாளன்!
செம்மண் சேர்ந்த மழைநீராய்ச்
சிறப்பில் இணைந்த புகழாளன்!
நெம்புக் கோல்போல் கவிசெய்தான்!
நெய்தல் நாடன் வாழியவே!
சாதிப் பெயர்கள் அகன்றிடவும்,
சமயப் பொதுமை மலர்ந்திடவும்,
மோதி
மிதிக்கும் கொடுமைகளை
முற்றும் போக்கி உயர்ந்திடவும்,
ஆதிக் குறளின் அழகணியை
அகத்துள் சூடி மகிழ்ந்திடவும்,
நீதி நெறியைப் பறைசாற்றும்
நெய்தல் நாடன் வாழியவே!
ஈழம் தந்த பாவலனாம்!
இன்பத் தமிழின் நாவலனாம்!
வேழக் காட்டில் விளையாடும்
வேங்கை நிகர்த்த வன்மகனாம்!
சோழர் கொண்ட படையாகத்
துணிந்து செல்லும் தென்னவனாம்!
நீழல் நல்கும் மனத்தவனாம்!
நெய்தல் நாடன் வாழியவே!
நீழல் - ஒளி, நிழல்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.01.2022.
Aucun commentaire:
Enregistrer un commentaire