சுவிற்சர்லாந்து கம்பன் விழாக் கவியுரை
அன்பின் பெருமையை அகிலம் உணர
இன்பத் தமிழில் எழிலார் காவியம்
எழுதிய கம்பனின் இணையடி மலரைப்
பொழுதெலாம் போற்றும் புலவன் யானே!
முன்னைப் பிறந்த முத்தமிழ் மொழியை
அன்னையாய் அடைந்தது அடியேன் தவப்பயன்!
சந்தத் தமிழில் எந்தை மயங்கி
இந்த உலகுக்(கு) என்னை அளித்ததால்
செந்தமிழ் மணக்கும் சிந்தை பெற்றேன்!
சொந்தம் எனக்குச் சுடர்த்தமிழ் காக்கும்
நெஞ்சம் கொண்ட நேயர் அனைவரும்!
தஞ்சம் என்னிடம் தண்டமிழ்க் காரிகை!
தமிழே உயிராய்த் தமிழே உடலாய்த்
தமிழே உணவாய்த் தமிழே உணர்வாய்
அடியேன் உற்றதால் கம்பன் அவையில்
தொடக்க உரைதரும் தொண்டினைப் பெற்றேன்!
கம்பன் அரங்கம் கனிச்சுவை தருமென
நம்பி வந்தவர் நறுமணம் காண்க!
அகில உலகக் கம்பன் அமைப்பை
மகிழ்வுடன் அமைத்த மைந்தர் வாழ்க!
பொழியும் பனிபோல் மொழியும் சொற்களால்
வழிதரும் சத்திய சீலனார், வாழ்வில்
மேவு புகழ்சேர் மென்றமிழ் வாணர்!
நாவுக்கரசர்! நல்லடி பணிந்தேன்!
அன்னைத் தமிழுக்கு அணியாய் விளங்கும்
சென்னைக் கம்பன் கழகச் செயலர்
இலக்கியச் செல்வர் இராம லிங்கர்
கலக்கிய மேடைகள் கணக்கில் அடங்கா!
கண்ண தாசனைக், கவிபாரதியை,
வண்ணக் கவிதை வழங்கிய கம்பனை,
இம்மென்(று) என்றே இயம்பும் முன்னே
நம்முன் படைத்து நல்லுரை மொழிவார்!
புதுவைக் கம்பன் கழகம் பொலிய
புதுமை நாடும் புகழ்முருகேசர்
கடமை வீரர் கல்யாண சுந்தரர்
சுடர்த்தமிழ் வளர்க்கும் துயவர் ஆவார்!
அன்னவர் ஆற்றிய அரிய பணியால்
பொன்னிகர் மேன்மையைப் புதுவை பெற்றது!
எளிய தோற்றம்! இனிக்கும் பேச்சு!
தெளிந்த உள்ளம்! தீந்தமிழ்த் தேனை
அளிக்கும் ஆற்றல்! அருந்தமிழ்க் கடலில்
குளித்துக் களிக்கும் கொள்கை வாணர்!
இலங்கைச் செயராசர் உளத்துள் கம்பன்
வளமுடன் வாழ்வதை நலமுடன் நவின்றேன்!
செல்வ வடிவேல் சொல்லும் சொற்கள்
நல்லார் மனத்தை வெல்லும் என்பேன்!
வண்ணத் தமிழ்பால் எண்ணம் முழுதும்
பின்னி ஒளிரும் பிரசாந்தன் வளர்க!
பெருங்கவி கம்பனின் பெருமை பரவ
அரும்பணி ஆற்றும் குருக்கள் வாழி!
அறிஞர் பல்லோர் அமர்ந்த அவையில்
சிறியேன் என்னைச் சிறப்புற வைத்த
கம்பன் வாழ்க! கண்ணன் வாழ்க!
நம்மின் தமிழை நன்றே காத்துப்
பண்புளம் மணக்கும் அன்பர் அனைவரும்
இன்புளம் சூடிப் பொன்னுளம் காண்க!
அலைமகள் அமர்ந்தே ஆளும் நாட்டில்
கலைத்தமிழ்க் கம்பனுக்கு இரண்டாம் ஆண்டு
விழாவைத் தொடங்க அழைத்த நண்பரைத்
தொழுதே தொடக்க உரையைக் கவிதையில்
தந்து மகிழ்ந்தேன்! இந்த அரங்கில்
வந்தவர் வாழ்க! கம்பன் சீரைத்
தந்தவர் வாழ்க! தண்டமிழ் வாழ்க!
சந்தக் கம்பனைச் சாற்றும் இவ்விழாச்
சிந்துக் கவிபோல் சீரினைப் பெற்று
முந்து புகழினை முழங்கி வெல்கவே!
27-12-2003