dimanche 4 février 2018

விருத்த மேடை - 14

விருத்த மேடை - 14
  
அறுசீர் விருத்தம் - 14
[முதல் நான்கு சீர் வெண்டளை + மா + தேமா ]
  
தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய்
   மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும்
   மால்மகன்போல் வருதிர் ஐய!
வீங்கோதம் தந்து விளங்கொளிய
   வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல்
   மீளும் புகாரே எம்மூர்!
         [சிலம்பு, புகார். கானல் - 28]
  
ஓரடியில் முதல் நான்கு சீர்கள் இருவகை வெண்டளைகளாலும் அமையும். மாச்சீர் ஐந்தாம் சீராக வரும். ஈற்றுச்சீர் தேமாவாகும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
ஒற்றுமை வலிமையாம்!
  
விரல்களின் ஒற்றுமை வென்றிடும் வன்மையை
   விளைக்கும்! மீட்டும்
நிரல்களின் ஒற்றுமை நெஞ்சுள் மகிழ்வினை
   நிறைக்கும்! கொள்கைக்
குரல்களின் ஒற்றுமை கோல வழியினைக்
   கூட்டும்! காக்கும்
திரள்களின் ஒற்றுமை சீருற நாட்டினைச்
   செய்யும் நன்றே!
  
ஒற்றுமை வேண்டும்! உயிரோங்கி மின்ன
   ஒழுக்கம் வேண்டும்!
நற்றுணை யாக நறுந்தமிழ் நுால்கள்
   நாளும் வேண்டும்!
கற்பனை ஓங்கிக் கருத்தைக் கவரும்
   கவிதை வேண்டும்!
பொற்புடை வாழ்வும் புகமுடன் மேவிப்
   பொலிய வேண்டும்!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.02.2018

samedi 3 février 2018

விருத்த மேடை - 12   

விருத்த மேடை - 12
  
அறுசீர் விருத்தம் - 12
[காய் + மா + தேமா + விளம் + மா + தேமா]
  
விருத்த மேடை - 1 [விளம் + மா + தேமா + விளம் + மா + தேமா] என்ற வாய்பாட்டில் அமைந்த விருத்தத்தைக் கண்டோம். 'விளம் ஒக்கும் காய்' என்ற இலக்கணத்தின் படி ஒரோவழி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
  
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி
   மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னை
   பெருவரு மருதம் ஆக்கி
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடைதடு மாறும் நீரால்
செல்லுறு கதியின் செல்லும்
   வினைஎனச் சென்ற தன்றே
         [கம்பன் பால. ஆற்று. 17]
  
இவ்விருத்தத்தில் ஓரிடத்தில் மட்டும் 'மருதத்தை' என மாங்காய்ச்சீர் வருவது காண்க. சில பாடல்களில் நான்கடிகளிலும் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு.
  
தோள்கண்டார் தோளே கண்டார்!
   தொடுகழற் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்!
   தடக்கைகண் டாரும் அஃதே!
வாள்கொண்ட கண்ணார் யாரே
   வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
   உருவுகண் டாரை ஒத்தார்!
         [கம்பன் பால. உலாவியல். 17]
  
சொல்ஒக்கும் கடிய வேகச்
   சுடுசரம் கரிய செம்மல்
அல்ஒக்கும் நிறத்தி னாள்மேல்
   விடுதலும் வயிரக் குன்றக்
கல்ஒக்கம் நெஞ்சில் தங்கா[து]
   அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
   பொருளெனப் போயிற் றன்றே!
         [கம்பன் பால. தாடகை. 50]
  
காய் + மா + தேமா + விளம் + மா + தேமா என இதன் வாய்பாட்டை வரையறுக்கலாம். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.
  
குன்றென நிமிர்ந்து நில்!
  
கோலஞ்சேர் தமிழைக் காக்கக்
   குன்றென நிமிர்ந்து நிற்பாய்!
காலஞ்சேர் புகழைக் காணக்
   கமழ்கவிக் கலையைக் கற்பாய்!
ஞாலஞ்சேர் நுாலை யாத்து
   நம்மின மேன்மை காப்பாய்!
ஆலஞ்சேர் உறுதி யாக
   அன்புசேர் வாழ்வை ஏற்பாய்!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.02.2018

jeudi 1 février 2018

விருத்த மேடை - 11

விருத்த மேடை - 11
  
அறுசீர் விருத்தம் - 11
[கட்டளை அறுசீர் விருத்தம்]
  
எழுத்தெண்ணிப் பாடுவது கட்டளை யாகும். [கட்டளை வெண்பா. கட்டளைக் கலிப்பா. கட்டளைக் கலித்துறை...] கட்டளைக் கலித்துறை ஓரடிக்கு ஐந்து சீர்களைப் பெற்று நேர் 16. நிரை 17 எழுத்துகளைப் பெற்று வரும். கட்டளைக் கலித்துறையின் இலக்கணத்தைப் பெற்று ஓரடிக்கு ஆறு சீர்களை உற்று நேரில் தொடங்கினால் 19 எழுத்துகளையும். நிரையில் தொடங்கினால் 20 எழுத்துகளையும் பெற்று வருவது கட்டளை அறுசீர் விருத்தமாகும். பெரியாழ்வரின் திருப்பல்லாண்டு இவ்வகையைச் சார்ந்ததாகும்.
  
நேரசையால் தொடங்கி 19 எழுத்துகளால் அமைந்த விருத்தம்
  
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்[து]
   எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி
   வந்தொல்லைக் கூடுமினோ!
நாடு நகரமும் நன்கறி யநமோ
   நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து
   பல்லாண்டு கூறுமினே!
  
[பெரியாழ்வார் திருப்பல்லாண்டு - 4]
  
நிரையசையால் தொடங்கி 20 எழுத்துகளால் அமைந்த விருத்தம்
  
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை
   உடுத்துக் கலந்ததுண்டு!
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன
   சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு
   வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப்
   பல்லாண்டு கூறுதுமே!
  
[பெரியாழ்வார் திருப்பல்லாண்டு - 9]
  
இலக்கண விளக்கம்
  
ஓரடி ஆறு சீர்களைப் பெற்றிருக்கும். அடியின் ஈற்றுச் சீர் விளங்காயாக இருக்கும். முதல் ஐந்து சீர்களில் விளங்காய் வராது. வெண்டளை பெற்றிருக்கும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரும்.
  
அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை.
  
ஒன்று, ஐந்தாம் சீர்களிலில் மோனை அமையும். ஏகாரத்தில் முடிய வேண்டும்.
  
ஒற்றுகளை நீக்கி எழுத்தினை எண்ணுதல் வேண்டும்.
  
கற்ற தொழுகு!
  
நன்றே பயின்று நறுநெறி ஆய்ந்து
நலமுற வாழ்ந்திடுவாய்!
ஒன்றே குலமாம் ஒருவனே தேவாம்
உலகுக் குணர்த்திடுவாய்!
வென்றே புகழை விளைத்து மகிழ
விரைந்து செயல்படுவாய்!
குன்றே வலிமை கொடுத்திடும் கல்வியைக்
கூடி ஒழுகுகவே!
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.02.2018

விருத்த மேடை - 10



விருத்த மேடை - 10

அறுசீர் விருத்தம்  - 10
[ ஐந்து ஈரசைச் சீர்கள் + ஈற்றில் காய், இயற்சீர் வெண்டளையில் அமைய வேண்டும்]

ஐம்பொறி ஆட்சி செய்!

மெய்,வாய், செவி,கண், விரிமண மூக்கு
   விளைத்த வினையாவும்!
பொய்வாய் நுழைந்து புழுபோல் நெளிந்து
   புரிந்த செயல்யாவும்
செய்வாய் அடங்க! சிறுமை ஒடுங்க!
   செழுமை ஒளிமேவும்!
நெய்வாய் நெறியை! நிறைவாய் அருளை!
   நிலைத்த புகழ்கூடும்!

ஐம்பொறி ஆடிடும் ஆட்டம் அடக்கியே
   ஆட்சி புரிந்திடுவாய்!
செம்மறி யாகத் திரிந்திடும் போக்கைத்
   திருத்தி நடந்திடுவாய்!
நம்வழி என்ன? நலவழி என்ன?
   நயக்க உணர்ந்திடுவாய்!
செம்மொழி யாகச் செழித்திடும் வண்ணம்
   சிறப்பை அணிந்திடுவாய்!

ஐந்து ஈரசைச் சீர்களும், ஈற்றில் காய்ச்சீரும் ஓரடியில் வரவேண்டும். இயற்சீர் வெண்டளையில் அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.01.2018

சந்தக் குறட்டாழிசை

வெண்பா மேடை - 62
  
சந்தக் குறட்டாழிசை
  
ஒரு பாடலின் எல்லா அடிகளிலும் ஒரே வகையான சந்தம் அமைந்திருந்தால் அதனைச் சந்தப் பாடல் என்பார்கள்.
  
சந்த மாத்திரை
  
குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கும், குறில் ஒற்றுக்கும், நெடில் ஒற்றுக்கும் இரண்டு மாத்திரை [ அ - ஒரு மாத்திரை] [ஆ, அன், ஆண் - இரண்டு மாத்திரை]
  
அருமை யானனடை! அமுத மானதொடை!
அழகி லாடுமுடை ஒளிருதே!
பெருமை யானகவி! உரிமை யானமொழி!
ஒருமை யாகவெனை இணையுதே!
  
தனன தானதன தனன தானதன
தனன தானதன தனதனா
  
என்ற சந்தத்துடன் மேலுள்ள பாடல் அமைதுள்ளமையால் இது சந்தக் குறட்டாழிசை யாகும்.
  
ஓர் எதுகையில் அமைந்த சமமான இரண்டடிகள் வரவேண்டும். ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். மேலுள்ள பாடலில் அடிக்கு ஏழு சீர்கள் உள்ளன. முதல் சீரும், மூன்றாம் சீரும், ஐந்தாம் சீரும் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இரண்டாம் சீரும், நான்காம் சீரும், ஆறாம் சீரும் ஐந்து சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளன. இறுதியில் உள்ள சீர் வேறு வகைத் தாளத்துடன் ஐந்து சந்த மாத்திரைகள் பெற்றுள்ளது. [தனன - முன்று மாத்திரை, தானதன - ஐந்து மாத்திரை, தனதனா - ஐந்து மாத்திரை]
  
ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். மேற்கண்ட அமைப்பில் எங்கும் ஒற்றுகள் வாராமை நோக்கத் தக்கது.
  
சந்த மாத்திரைக் கணக்கில் பல்வேறு சந்தங்களில் இப்பாடலை அமைத்துப் பாடலாம்.
  
வருக செம்மையுற! உழுக நன்மையுற!
வரைக மென்மையுற அன்பாலே!
தருக வன்மையுற! தமிழி[ன்] இன்பமுற!
தனிமை தண்மையுற என்தாயே!
  
தனன தந்ததன தனன தந்ததன
தனன தந்ததன தந்தானா
  
என்ற சந்தத்தில் அமைந்துள்ள குறட்டாழிசை. 1, 3, 5 ஆகிய சீர்கள் மூன்று சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தன. 2, 4, 6, ஆகிய சீர்கள் ஐந்து மாத்திரைகளைப் பெற்று வந்தன. 7 ஆம் சீர் ஆறு சந்த மாத்திரைகளைப் பெற்று வந்தது.
  
மேற்கண்ட அமைப்பில் எழுசீர்ச் சந்தக் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.01.2018