lundi 10 avril 2017

வெண்பா மேடை - 44


குறளொளிர் வெண்பா
  
காத்துக் களிக்கின்றான்! காலம் சுழன்றுவரப்
பூத்துக் களிக்கின்றான்! பொற்புடையான்! - மூத்த
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்!
  
என்மேனி சொக்கிடுமே! இன்பக் கலைபயின்று
பொன்மேனி யாகிப் பொலிந்திடுமே! - என்றென்றும்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
  
இன்னல் வராமல் இனிதுறவே காத்திடுவாள்!
கன்னல்மொழி கேட்டுக் களித்திடுவாள்! - மன்னுலகில்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்!
    
வெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் ஒருகுறளின் சிறு விளக்கமும் பின்னிரண்டு அடிகளில் குறட்பாவும் அமைந்திருப்பதுபோல் ஒரு வெண்பா இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.04.2017

mercredi 5 avril 2017

வஞ்சிப்பா - 1

வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சிப்பாவின் பொதுவிலக்கணம்
  
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா. இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா.
  
வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களே இப்பாட்டில் பெரும்பாலும் வரும். நிரையீற்று நாலசைச் சீர்களும் அருகி வரும், சிறுபான்மை மற்றச் சீர்களும் வரும்.
  
வஞ்சிப்பா துாங்கலோசையைப் பெற்று வரும். கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்த ஏந்திசைத் துாங்கலோசை யாகும். கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித் தளையால் அமைந்த அகவல் துாங்கலோசை யாகும். ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகள் கலந்து வருவதும், அவைகளுடன் மற்றத் தளைகள் கலந்து வருவதும் பிரிந்திசைத் துாங்கலோசையாகும். [பெரும்பான்மை ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் வரும்] [அருகியே மற்றத் தளைகள் வரும்]
  
வஞ்சியடிகளுக்குச் சிற்றெல்லை மூன்று அடிகள். பேரெல்லை அளவில்லை. [பாடுவோர் எண்ணப்படி எத்தனை அடிகளையும் பெற்று வரும்]
  
வஞ்சியடிகள் இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற்று வரும்.
  
குறளடி வஞ்சிப்பாவில் மோனை கட்டாயமில்லை. சிந்தடி வஞ்சிப்பாவில் மூன்றாம் சீரில் மோனை அமைதல் மேண்டும் [அல்லது இரண்டாம் சீரில் அமைதல் வேண்டும்]
  
தனிச்சொல், ஈரசையில் அமைவது சிறப்பாகும். [சிறுபான்மை குற்றியலுகரத்தைப் பெற்ற மூவசையும் வரும்]
  
ஆசிரியச் சுரிதகம் என்பது ஆசிரியப்பாவாகும். ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்று அடிகளாகும். வஞ்சிப்பாவில் வரும் ஆசிரியச் சுரிதகம் இரண்டு அடிகளைப் பெறுவதும் உண்டு. பெரும்பான்மை நேரிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [ஈற்றயல் அடி மூன்று சீர்களைப் பெறுவது]. சிறுபான்மை இன்னிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெறுவது]. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும். [இப்பாவில் வெண்பாச் சுரிதகம் வராது]
  
ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா
  
கண்ணன்தரும் கவிதைப்பொழில்
எண்ணந்தனில் இடுமேநலம்!
கண்ணில்தினம் கனவேவரும்!
மண்ணின்மணம் வளமேதரும்!
அண்ணல்மொழி அருளின்மழை!
உண்ணுஞ்சுவை உறையும்நடை!
தமிழேஅவன்! தவமேஅவன்!
அமுதேஅவன்! அணியேஅவன்!
  
என்று [தனிச்சொல்]
  
நெஞ்சம் பாடும்! கொஞ்சி யாடும்!
வஞ்சிப் பாட்டின் வாசம் சூடும்!
மன்னன் தோளை மங்கை
பின்னும் நாளே பிறப்பின் பேறே!
  
மேலுள்ள வஞ்சிப்பா, கனி முன் நிரை வந்த ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்தது. அனைத்து அடிகளிலும் மோனை வரும் வண்ணம் பாடியுள்ளேன். [மோனை கட்டாயமில்லை] [இவ்வஞ்சியடிகளில் இரண்டாம் சீர் கனிச்சீராகவே வந்துள்ளன, அவ்விடங்களில் புளிமாங்காயும், கருவிளங்காயும் வரலாம்] [ நிரையை முதலாக உடைய மற்றச் சீர்களும் அருகி வரலாம்] [அனைத்துச் சீர்களும் புளிமாங்கனியாகவும் கருவிளங்கனியாகவும் இருக்கும் வஞ்சியடிகளே சிறப்புடைய ஏந்திசைத் துாங்கலோலையை நல்கும்]
  
தனிச்சொல் [என்று] ஈரசையைப் பெற்றுள்ளது.
இப்பாடல் நான்கடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்துள்ளது.
  
கண்ணே!
[சிறப்புடைய ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா]
  
குழலுறும்எழில் குளிர்தருமடி!
ஒழுகிடும்நடை உயிர்புகுமடி!
கயலுறுவிழி கவிதருமடி!
மயலுறுமொழி மதுதருமடி!
தினமொருவுடை திகைதருமடி!
வனமெனவுடல் மணந்தருமடி!
கனிதருஞ்சுவை கரம்தருமடி!
நனிபுகழ்பணி நலந்தருமடி!
மலருறுபதம் மகிழ்தருமடி!
கலையொளிர்உருக் கனவுறுமடி!
நாளும்
உன்னை எண்ணி உருகும்
என்னை அணைத்தே இன்பம் தருகவே!
  
விரும்பிய பொருளில் குறளடி வஞ்சிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
[வஞ்சியடிகள் ஆறு அமையவேண்டும்] [நேரிசைச் சுரிதகம் மூன்றடியில் இருக்க வேண்டும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வஞ்சித்தாழிசை



வஞ்சித் தாழிசை
  
[ஒரே பொருளைப் பற்றி மூன்று வஞ்சித்துறைகள் பாடினால் வஞ்சித்தாழிசை ஆகும்]
  
ஈசன் திருவடி! [ தேமா + காய்]
  
1.
தில்லைத் திருக்கூத்தன்
முல்லை அடி..தொழுவாய்!
எல்லை இலாத்துயரம்
இல்லை இனியென்பாய்!
  
2.
சூடும் அரும்வாழ்வை
ஆடும் திருத்தாள்கள்!
பாடும் மனமோங்கி
நாடும் பெரும்வீடே!
  
3.
தேங்கும் வினைதீர்க்கும்
ஓங்கும் திருப்பாதம்!
ஏங்கும் மனமேவ
நீங்கும் தொடர்பிறவி!

---------------------------------------------------------------------------------------------
  
அடிமறி வஞ்சித்தாழிசை!
  
[ஒரு பாட்டின் நான்கு அடிகளை இடம் மாற்றி வைத்தாலும் பொருள் வரும் வண்ணம் அமையவேண்டும்]
  
என்னெஞ்சே! [ தேமா + புளிமாங்காய்]
  
1.
பித்தம் தெளியாதோ?
நித்தம் துயர்ஏனோ?
சித்தம் அறியாதோ?
கத்தும் வலியேனோ?
  
2.
துன்பம் விலகாதோ?
இன்பம் படராதோ?
அன்பும் மலராதோ?
மன்னும் வலியேனோ?
  
3.
நாட்டும் பழியேனோ?
கூட்டும் பகையேனோ?
மூட்டும் வெறியேனோ?
வாட்டும் வலியேனோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

lundi 3 avril 2017

வஞ்சித்துறை - 3

திருமகள்
வஞ்சித்துறை [தேமா + கருவிளம்]
  
1.
பொற்றார் புகழ்மகள்
நற்றார் நறுமனம்
சொற்றார் கவியெனைப்
பற்றா[து] இருப்பதோ?
  
2.
தேனார் திருமகள்
மீனார் வியன்விழி
கானார் கவியெனை
ஏனோ வெறுப்பதோ?
  
3.
மின்னும் மலர்மகள்
மன்னும் பெருவளம்
கன்னல் கவியெனக்[கு]
இன்னல் அளிப்பதோ?
  
4.
சீர்சேர் செழுமகள்
தார்சேர் திருவடி!
பேர்சேர் கவியெனைக்
கார்சேர் விடுப்பதோ?
  
5.
கண்ணன் மனத்தினில்
நண்ணும் நலமகள்!
பண்ணன் எனக்கருள்
ஒண்ண மறுப்பதோ?
  
6.
பூவார் பொழின்மகள்
துாவார் அணிவகை
பாவார் கவியெனை
மேவா[து] இருப்பதோ?
  
7.
எந்தை இறையிடம்
விந்தை பொழிமகள்!
முந்தை வினையனென்
சிந்தை தொழுதிடும்!
  
8.
ஊழின் துயர்பல
சூழும் நிலையிலும்
தாழும் எனதுயிர்
ஆழும் திருவையே!
  
9.
அன்னை நினைவினில்
என்னைக் கரைக்கிறேன்!
பொன்னை நிகர்மனந்
தன்னை அடைகிறேன்!
  
10.
எண்ணம் இனித்திடும்
வண்ணம் வடித்திடும்!
விண்ணின் வியன்மகள்
கண்ணுள் கமழ்கிறாள்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.04.2017

samedi 1 avril 2017

வஞ்சித்துறை - 3


கலைமகள்
வஞ்சித்துறை [தேமா + புளிமா]
  
1.
பூவில் இருந்தென்
பாவில் அமர்ந்தாய்!
கோவில் எனவென்
நாவில் அமர்ந்தாய்!
  
2.
வெள்ளை மலர்சேர்
கொள்ளை அழகே!
பிள்ளை மனஞ்சேர்
வள்ளை வளமே!
  
3.
தேடும் பொருளை
நாடும் உளத்துள்
பாடும் பொருளைச்
சூடும் அருளே!
  
4.
மீட்டும் இசையை
ஊட்டும் வடிவே!
பாட்டும் நடமும்
கூட்டும் ஒளியே!
  
5.
ஞானம் அளிக்கும்
மோனத் திருவே!
கானம் அளிக்கும்
வானத் தமுதே!
  
6.
ஓங்கும் தவத்துள்
தேங்கும் சுவையே!
ஏங்கும் எனையும்
தாங்கும் அறிவே!
  
7.
புற்கள் படரும்
கற்கள் சுடரும்
சொற்கள் பிறந்து
நற்கள் பொழியும்!
  
8.
எண்மை அளிப்பாய்!
ஒண்மை அளிப்பாய்!
தண்மை அளிப்பாய்!
வண்மை அளிப்பாய்!
  
9.
அண்மை இருந்து
நுண்மை கொடுப்பாய்!
உண்மை சிறக்கும்
திண்மை கொடுப்பாய்!
  
10.
நன்மை வடிக்கும்
தன்மை அளிப்பாய்!
தொன்மைத் தமிழால்
வன்மை அளிப்பாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்