கல்விச்செம்மல் பார்வதி தனகாந்தராசர்
அமுத
விழா வாழ்த்து
புதுவை நகரின்
புகழைக் காக்கும்
பூந்தேன் மனத்துப் பார்வதியார்!
மதுவைக் குழைத்து
வழங்கும் மொழியார்!
மலராய் மணக்கும் பொன்விழியார்!
இது..வை அது..வை
இயம்பும் முன்னே
எடுத்து வழங்குங் கொடைமதியார்!
பொதுமை புனையும்
புலவன் யானும்
போற்றிப் பாடி வாழ்த்துகிறேன்!
கடலுார் மண்ணின்
கருணை யாலே
காலம் வென்ற பார்வதியார்!
உடலுார் உணர்வில் உண்மை ஒழுக்கம்
உற்ற இருகண் போல்கொண்டார்!
இடரூர் வாழ்வை
எதிர்த்து நின்றே
இறைவன் அருளால் தினம்வென்றார்!
மடலுார் பாட்டின்
மன்னன் யானும்
மாட்சி பாடி வாழ்த்துகிறேன்!
அன்பே வாழ்க்கை
அறமே ஆக்கம்
அகத்துள் கொண்ட பார்வதியார்!
துன்பே யோடத்
துணிவே யேற்றுத்
தொடர்ந்து கல்விப் பணிசெய்தார்!
இன்பே தமிழ்தான்
என்றே சொல்லி
நன்றே நாட்டுக் கரணானார்!
நன்பே நல்கும்
நல்ல புலவன்
நயமே பாடி வாழ்த்துகிறேன்!
வேலன் கோயில்
வேண்டி யமைத்து
விழாக்கள் செய்யும் பார்வதியார்!
மாலன் மார்பின்
மங்கை போன்று
வாரி வழங்கும் உளமுற்றார்!
ஞாலன் ஒளிபோல்
நன்மை பொழிந்து
நல்லோர் வாழ்த்தும் சீர்பெற்றார்!
மூலன் தமிழால்
முகிழ்த்த அமுதை
முன்னே பாடி வாழ்த்துகிறேன்!
பண்பிஃ தென்றும்
பணிவிஃ தென்றும்
பற்றி வாழும் பார்வதியார்!
நண்பிஃ தென்றும்
நலமிஃ தென்றும்
நாடிப் போற்றுங் குறள்வழியார்!
கண்டிஃ தென்றும்
குண்டிஃ தென்றும்
தொண்டிஃ தென்றும் தெளிவுடையார்!
எண்ப தகவை ஏற்ற
அன்னை
எழிலைப் பாடி வாழ்த்துகிறேன்!
பாட்டரசர் கி.
பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம்,
பிரான்சு
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச்
சிறகம்
பாவலர் பயிலரங்கம்,
பிரான்சு
02.08.2026
.jpeg)
Aucun commentaire:
Enregistrer un commentaire