jeudi 1 mai 2025

தொழிலாளர் திருநாள்

 


தொழிலாளர் திருநாள்

[குறள் வெண்செந்துறை]

 

ஏரோட்டி எருவூட்டி இளைத்தோர்கள் இசைக்கும் திருநாள்!

சீரூட்டிச் செழிப்பூட்டித் திகைப்பூட்டிச் சிறக்கும் பெருநாள்!

 

உழைப்பாளி குறன்முழக்கம் உலகமெலாம் ஒலித்த திருநாள்!

கழைக்கூலி யாளர்களின் கண்ணீர்நீர் இனித்த பெருநாள்!

 

நெசவாளி நெஞ்சத்துள் நேசமலர் பூத்த திருநாள்!

வசைபாடி வதைத்தவரை வாயடக்கி வைத்த பெருநாள்!

 

பாட்டாளி யனைவரையும் கூட்டாளி யாக்கும் திருநாள்!

காட்டேறி யாட்டத்தைக் காலெடித்துப் போக்கும் பெருநாள்!

 

தொழிலாளர் ஒற்றுமையின் தோளோங்கி வென்ற திருநாள்!

பொழிலாக இவ்வுலகைப் புனைந்தோரின் இன்பப் பெருநாள்!

 

தொழிலுற்றும் துன்புற்றும் துடித்தவரின் எழுச்சித் திருநாள்!

இழிவுற்றும் இருளுற்றும் இருந்தவரின் வெற்றிப் பெருநாள்!

 

உழைக்கின்ற மக்கள்தம் உரிமையினை மீட்ட திருநாள்!

அழைக்கின்ற விருந்தாக அருஞ்சுவையை யிட்ட பெருநாள்!

 

ஆலைகளின் அதிகாரம் அடங்கிடவே செய்த திருநாள்!

சோலைகளின் வண்டாகச் சுழன்றாட வைத்த பெருநாள்!

 

இரும்புருக்கும் பட்டறையுள் கரும்பினிப்புத்  தந்த திருநாள்!

எலும்புருக்கும் கொடியவர்க்கு மருந்தளிப்புக் கண்ட பெருநாள்!

 

தொழுகின்ற திருக்கோயில் தொழிற்கூடம் என்றே போற்று!

பொழிகின்ற மழையின்பம் பொதுவுடைமை என்றே சாற்று!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.05.2025

samedi 12 avril 2025

 

பாவலர் வில்லூர்ப் பாரதி

 

     ஆசான் மீதும் தமிழ்மீதும்

ஆழி யளவுப் பற்றுடையார்

பேசா துள்ள கருவாய்ந்து

பேணி யெழுதுந் திறனுடையார்!

வாசா.. பாசா.. பெயர்சூடி

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

ஈசா வுன்னை வேண்டுகிறேன்

இவர்க்கே யாவும் நல்குகவே!

 

அஞ்சா நெஞ்சும் அகத்தெளிவும்

அமைந்த கவிஞர்! வரும்பகையைப்

பஞ்சா பறக்க விடுகின்ற

பாட்டுக் கணையைச் செய்மறவர்!

மஞ்சா போட்ட வன்மையென

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

துஞ்சா துலகுக்[கு] உணர்வூட்டித்

தொடர்ந்து பாடி வெல்லுகவே!

 

வீட்டில் உள்ள அனைவர்க்கும்

வெற்றி வழியைக் காட்டிடுவார்!

நாட்டில் உள்ள அனைவர்க்கும்

நல்ல தமிழை யூட்டிடுவார்!

ஏட்டில் உள்ள அனைவர்க்கும்

இனியர் வில்லூர்ப் பாரதியார்!

காட்டில் உள்ள தேனடையாய்க்

கவிதை பாடி ஓங்குகவே!

 

 
அன்பும் பண்பும் நிறைந்தவராம்!

அருளும் அறனும் உடையவராம்!

இன்பும் துன்பும் ஒன்றென்ற

ஈடில் குறளை உரைப்பவராம்!

அன்றும் இன்றும் நன்னெறியை

ஆளும் வில்லூர்ப் பாரதியார்!

என்றும் வாழ்க புகழுடனே!

இளமைத் தமிழின் அழகுடனே!

 

அகநூல் புறநூல் கற்றவராம்!

அருணூல் பொருணூல் பெற்றவராம்!

புகழ்நூல் குறளின் வழியேற்றுப்

புதுநூல் புனைந்து களித்தவராம்!

முகநூல் வழியே முத்தமிழை

முழங்கும் வில்லூர்ப் பாரதியார்!

தொகைநூல் புலவர் திருமரபில்

தொடர்ந்து பாடி  வாழியவே!      

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

12.04.2025