தொழிலாளர்
திருநாள் சிந்தனை?
காடும் மேடும் வயலாக்கிக்
கடமை
புரிந்த நல்லுழவர்
பாடு பட்டும் பசியேனோ?
பஞ்சம்
வாட்டும் நிலையேனோ?
வீடு காட்டும் மனையாக
விளையும்
வயலை யாக்குவதோ?
நாடும் நாளை உணவின்றி
நலிந்து
குன்றும் உணருகவே!
ஒருநாள் கூலிப் பணிசெய்ய
ஊரில்
இல்லை தொழிலாளர்!
வருநாள் தோறும் ஏமாற்றி
வருவாய்
ஈட்டிப் பொய்பேசித்
திருநாள் போலே வாழ்கின்றார்!
திருடர்
வெள்ளை உடைகொண்டார்!
தெருநாய் கூட உணவிற்குத்
திரிந்து
திரிந்து வந்திடுமே!
ஊரை நன்றே ஏமாற்றி
உருவை
வளர்க்கும் மனிதர்கள்!
யாரை நாடி நான்சொல்ல
இனிய
மே..நாள் வாழ்த்துக்கள்“!
பாரை மாற்ற யார்வருவார்?
பசுமை
வாழ்வை யார்தருவார்?
கூரை பிய்த்துக் கொட்டுவதாய்க்
குந்தி
வானம் பார்க்கின்றார்!
வேலை செய்ய ஆளில்லை!
வேர்வை
சிந்த மனமில்லை!
காலை யாட்டி வீட்டுக்குள்
கனவு
காணும் சோம்பேறி!
சாலை யெங்கும் தரகர்கள்
சாயம்
பூசி நடித்திடுவார்!
காலை யென்ன? இரவென்ன?
காசே கடவுள் ஆனதடா!
காலம் முழுதும் உழைக்காமல்
கள்ளர்
நன்றே வாழ்கின்றார்!
ஞாலம் உழைப்பை மறுப்பதுமேன்?
நல்லோர்
நெறியை வெறுப்பதுமேன்?
பாலம் போடப் பத்தாண்டு!
பாதை
போடப் பத்தாண்டு!
சாலஞ் காட்டித் திரிகின்றார்!
தமிழர்
விழித்தல் எந்நாளோ?
ஈயும் உழைக்கும் பூமேலே!
எறும்பும்
உழைக்கும் மண்மேலே!
மேயுங் காளை நன்றாக
விரைந்தே
உழைக்கும் வயல்மேலே!
வாயும் பேசா வாற்குரங்கு
வந்து
வித்தை செய்கிறது!
நாயும் உழைக்கும் வீட்டுக்கு
நாமேன்
உழைக்க மறுக்கின்றோம்?
கைக்கண் மாற்றுங் தொழில்பெருகிக்
காலங்
கோல மாறியதே!
மைக்கண் உள்ள கருப்பாக
மண்டை
யிருண்டு போனதுவே!
பைக்கண் பணத்தைக் கண்டவுடன்
பற்கள்
இளித்து வாலாட்டும்!
தைக்கண் கண்ட பசுமையினைத்
தரணி
பெறுதல் எந்நாளோ?
கடனே வங்கி உண்ணுவதோ?
கால்கை
பிடித்து வாழுவதோ?
திடமே யின்றிக் கொழுப்பேறித்
திருத்த
மின்றிக் கிடப்பதுவோ?
முடமே யுள்ளம் அடைவதுவோ?
முடங்கி
முடங்கி இருப்பதுவோ?
புடமே போட்டால் பொன்னொளிரும்!
புவியே
உழைப்பால் பொலிவுபெறும்!
உழைப்பே யின்றி உயர்வடைய
உறங்கிக்
கிடக்கும் உலகம்..கேள்!
அழைப்பே யின்றிக் காற்றுவரும்!
அழகாய்
முளைத்து நாற்றுவரும்!
பிழைப்பே யின்றிக் கல்லாகப்
பிறப்பைக்
கழித்தல் பேரிழிவு!
விழைப்பே யின்றித் துாங்காதே!
வீணே
யாகி ஏங்காதே!
பணத்தை யீட்டும் தொழிலாகப்
பாரில்
ஆகும் அரசியலே!
மணத்தை வீசி வலையிடுவார்!
வாக்குக்
கேட்டுப் பொருள்தருவார்!
குணத்தை இழந்த மனிதர்கள்
கொள்கை
யின்றித் தாவிடுவார்!
பிணத்தை யெரிக்கும் சுடுகாட்டில்
பெருகிச்
சுழலும் கையூட்டே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
01.5.2024