கலித்துறை மேடை - 8
கலிநிலைத்துறை - 3
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம்
கிண்ண வண்ணம லருங்கிளர் தாமரை தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும்வ லஞ்சுழி
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே!
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1482]
கள்ளல் இன்றியே கவிதைகள் பாடுவோம்! வேற்றுமை
எள்ளல் இன்றியே இணைந்துநாம் ஆடுவோம்! நாவினால்
கிள்ளல் இன்றியே கீர்த்தியை நாடுவோம்! வந்துபின்
தள்ளல் இன்றியே தார்பல சூடுவோம் தோழியே!
[பாட்டரசர்] 28.01.2024
நகலில் பாடுதல் நற்றிறம் ஆகுமோ? கண்டவர்
நகலில் பாடுதல் நன்மதி யாகுமோ? அயன்மொழி
மிகலில் பாடுதல் மேன்மைதான் ஆகுமோ? தன்னிலை
புகழில் பாடுதல் போற்றுதல் ஆகுமோ? தோழனே!
[பாட்டரசர்] 28.01.2024
இக்கலிநிலைத்துறையில் விளம் வருமிடங்களில் தேமாங்காயும் புளிமாவும் அருகிவரும். மேலுள்ள தேவாரப்பாடலில் 'வைகும்வ' தேமாங்காய் வந்தது.
ஓரடியில்
ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும்.
1.3 ஆம் சீர்களில் மோனை யமையும்.
மேற்கண்ட கலிநிலைத்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
04.02.2024

Aucun commentaire:
Enregistrer un commentaire