வணக்கம்
திருவள்ளுவர் ஆண்டு 2054
தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
நேரிசை வெண்பா!
குலமோங்க, கொள்கைக் குணமோங்க, வாழ்க்கை
நலமோங்க வேண்டுகிறேன் நாளும்! - வளமோங்கப்
வண்ணமிகு புத்தாண்டு வந்ததுவே! வாழ்த்துகிறேன்
எண்ணமிகு அன்பால் இனித்து!
அறுசீர் விருத்தம்!
உலகத் தமிழர் புத்தாண்டாம்
..........உயர்ந்த தைந்நாள் போற்றிடுவோம்!
திலக மிட்டு மலரிட்டுச்
..........சேர்ந்து தொழுகை புரிந்திடுவோம்!
இலகு தமிழில் கவிபாடி
..........இன்றேன் வாழ்த்தை யிசைத்திடுவோம்!
அலகில் புகழ்சேர் தாய்மொழியின்
..........அமுதைப் பருகிக் களித்திடுவோம்!
அகமும் புறமும் கற்றிடுவோம்!
..........அறமும் அருளும் பெற்றிடுவோம்!
புகழும் பணிகள் செய்திடுவோம்!
..........புவியே போற்ற நடையிடுவோம்!
முகமும் மலரும் ஒப்பென்று
..........மொழியும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
திகழும் தமிழர் புத்தாண்டுச்
..........சீரைப் பாடி மகிழ்ந்திடுவோம்!
தொன்மை மிக்க தமிழ்நாடு!
..........துணிவே மிக்க தமிழ்நாடு!
நன்மை மிக்க தமிழ்நாடு!
..........நறுமை மிக்க தமிழ்நாடு!
வன்மை மிக்க தமிழ்நாடு!
..........வாய்மை மிக்க தமிழ்நாடு!
முன்மைத் தமிழின் புத்தாண்டை
..........முழங்கி ஒளிரும் தமிழ்நாடு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
15.01.2023

Aucun commentaire:
Enregistrer un commentaire