திருமிகு வ. இராமதாசு அவர்களின் மண்பற்றையும்
பண்பற்றறையும் கண்டு அவரின் ஊரின் பெயரைப் அவருக்கே புனைபெயராய்ச் சூட்டுகிறேன்.
தென்பசியார் வாழியவே!
பகுத்தறிவுப் பகலவராம் தந்தைப் பெரியார்
பாசறையில் வாழ்ந்திட்ட கலைஞர் தம்மின்
தொகுத்தறிவுக் கொள்கையிலே நெஞ்ச மொன்றித்
தொண்டாற்றிக் கவிபாடும் இராம தாசு
மிகுத்தறிவுத் தமிழ்ப்பற்றும் இனத்தின் பற்றும்
விரிந்தோங்கி வாழ்கின்றார்! ஊரின் பேரை
வகுத்தறிவு வாணருக்குச் சூட்டு கின்றேன்
வளமோங்கித் தென்பசியார் வாழி! வாழி!!
ஓடிவந்து துணைநிற்கும் உள்ளங் கொண்டார்!
உயர்ந்தோரின் நெறியேற்று வாழ்வைக் கண்டார்!
தேடிவந்து நன்குதவும் சிந்தை யுற்றார்!
தேன்றமிழின் யாப்பழகை நன்றே கற்றார்!
பாடிவந்து தருகின்ற ஆக்கம் யாவும்
பைந்தமிழின் சீர்போற்றும்! பண்பைச் சாற்றும்!
கோடிதந்து நின்றாலும் கொள்கை மாறாக்
குணக்குன்றாம் தென்பசியார் வாழி! வாழி!!
எதிர்கொண்டு போராடும் வன்மை நெஞ்சர்!
இமைப்பொழுதும் அஞ்சாத உண்மைத் தொண்டா்!
புதிர்கொண்டு திரிகின்ற பொய்யா் தம்மின்
புரட்டுகளை எரிக்கின்ற அரிமா நோக்கர்!
கதிர்கொண்டு நிலவுலகு விழித்தல் போன்று
கவிகொண்டு வாழ்கின்ற கடமைச் செல்வர்!
குதிர்கொண்டு மனத்துக்குள் பாக்கள் சேர்க்கும்
கூரறிவுத்
தென்பசியார் வாழி! வாழி!!
உழுதொழிலை உயிர்த்தொழிலாய்ச் செய்யும் மேன்மை,
ஓட்டுநராய்ப் பணியாற்றும் ஒப்பில் வன்மை,
தொழுதொழிலைச் செய்கின்ற கோவில் தன்னில்
துாயதமிழ் மணந்திடவே ஆற்றும் வாய்மை,
அழுதொழிலைத் தினங்காணும் வறியோர் துன்பை
அகற்றுகின்ற நெறித்திண்மை, முகநுால் என்ற
குழுத்தொழிலைக் கொள்ளைகளை எடுத்தே கூறிக்
கொதிக்கின்ற தென்பசியார் வாழி! வாழி!!
தென்பசியார் குடியோங்கி வாழி! வாழி!!
திக்கெட்டும் புகழோங்கி வாழி! வாழி!!
நன்மொழியார் தமிழோங்கி வாழி! வாழி!!
நலமளிக்கும் கொடையோங்கி வாழி! வாழி!!
பொன்மொழியார் தொண்டோங்கி வாழி! வாழி!!
புலமையொளிர் நுாலோங்கி வாழி! வாழி!!
இன்னிசையார் திறமோங்கி வாழி! வாழி!!
இன்னுமொரு
நுாற்றாண்டு வாழி! வாழி!!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
10.09.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire