dimanche 28 août 2022

தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்

 


தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்

 

நெல்விளைந்து செழிப்பதுபோல், வளஞ்சேர் ஆற்றில்

      நீர்நிறைந்து பாய்வதுபோல், மறவன் எய்தும்

வில்விரைந்து செல்வதுபோல், உலகம் வாழ

      விண்பொழிந்து குளிர்வதுபோல், பகைவர் முன்னே

மல்விளைந்து புடைப்பதுபோல், சோலைக் குள்ளே

      மலர்மணந்து மணப்பதுபோல், மேடை தோறும்

சொல்விளைந்து  கொழித்திடுமே! நெல்லைக் கண்ணன்

      சுவைத்தமிழில் மயங்காதார் உலகில் உண்டோ?

 

கோடையிலே கிடைத்திட்ட நிழலோ? கொண்ட

      கொள்கையிலே மாறாத குன்றோ? சான்றோர்

ஆடையிலே வெண்மையுறும் அழகோ? அஞ்சா

      அகத்தினிலே பெருந்தலைவர் உருவோ? வண்ணக்

கூடையிலே குவிந்துள்ள கனியோ? எங்கள்

      கோவிலிலே தமிழ்வார்த்த கோவோ? கம்பன்

மேடையிலே வீற்றிருக்கும் நெல்லைக் கண்ணன்

      வியனழகை யெடுத்தோதச் சொற்கள் உண்டோ?

 

பொய்யாடும் அரசியலை மாற்ற வேண்டிப்

      புறப்பட்ட புயலென்பேன்! ஊழல் தன்னை

நொய்யாகும் வண்ணத்தில் குத்திக் குத்தி

      நோய்போக்கும்  மருந்தேன்பேன்! வாழும் இந்தச்

செய்வாடும் கொடுமைகளைப் புரிவோர் தம்மைச்

      சிதைத்தோட்டும் அறமென்பேன்! கேட்போர் தம்மின்

மெய்யாடும் மொழியுடைய நெல்லைக் கண்ணன்

      வெல்லுதமிழ்க் கடலென்பேன்! ஈடும் உண்டோ?

 

அஞ்சாத நெஞ்சுரமும், எதிலும் எங்கும்

      அசையாத வன்றிறமும், குழந்தை யாகப்

பஞ்சாக மென்மனமும், தேனே யூறும்

      பழமாக நற்குணமும், கற்கு மாசை

துஞ்சாத நல்விழியும், மக்கள் தொண்டில்

      துவளாத சிந்தனையும், பதவிக் காகக்

கெஞ்சாத நன்னெறியும் நெல்லைக் கண்ணன்

      கீர்த்திமிகு வாழ்வாகும்! ஈடும் உண்டோ?

 

ஏடுபுகழ் கவியரசர் கண்ண தாசன்

      எழுத்தெல்லாம் தன்மனத்துள் பதியம் போட்டு,

நாடுபுகழ் பெருந்தலைவர் காம ராசர்

      நல்வழியில் நடைபோட்டு, நற்பேர் சேர்த்துக்,

காடுகமழ் தமிழ்க்கம்பன் கவிகள் தம்மைக்

      கண்ணுக்குள் கருத்துக்குள் அடையே காத்து

நீடுபுகழ் மணக்கின்ற நெல்லை கண்ணன்

      நிறைஞானத் தமிழாழி!  ஈடும் உண்டோ?

 

ஊற்றாகச் சுரக்கின்ற சொற்கள், உற்ற

      உயிராகத் திகழ்கின்ற கொள்கை, பச்சை

நாற்றாக விளைகின்ற வாழ்க்கை, இன்ப

      நயமாக மொழிகின்ற நுட்பம், யாப்பில்
ஈற்றாகச் சிறக்கின்ற வெண்பா போன்றே

      இதயத்தைக் கவர்கின்ற பேச்சு, மூச்சுக்

காற்றாகத் தமிழ்கொண்ட நெல்லைக் கண்ணன்

      கற்காத நுாலுண்டோ? ஈடும் உண்டோ?

 

அனல்பறக்கும் என்றிடுவார்! வாழ்வைக் காக்கும்

      அணையளிக்கும் என்றிடுவார்! வேகங் கொண்டு

புனல்நடக்கும் என்றிடுவார்! எட்டுத் திக்கும்

      புகழ்படைக்கும் என்றிடுவார்! கேட்டுக் கேட்டு

மனஞ்செழிக்கும் என்றிடுவார்! கல்வி யாளர்

      மதிகொழிக்கும் என்றிடுவார்! பிறந்து வந்த

இனஞ்செழிக்கும் என்றிடுவார்! நெல்லைக் கண்ணன்

      இடத்தினிலே எழுந்ததமிழ்! ஈடும் உண்டோ?

 

வள்ளுவத்தை வாழ்வுயரப் பேசிப் பேசி

      வளமளித்த வாயெங்கே? வாடும் மாந்தன்

உள்ளகத்தை ஒளிமேவ வேண்டு மென்றே

      ஊரெங்கும் நடந்திட்ட கால்கள் எங்கே?

கல்லகத்தை யுற்றவர்கள் மாற வேண்டிக்

      கருத்துகளை உதித்திட்ட சிந்தை யெங்கே?

நல்லகத்தைக் கொண்டொளிர்ந்த நெல்லைக் கண்ணன்

      சொல்லறத்தை என்னென்பேன்? ஈடும் உண்டோ?

 

பாரதியின் விழிகாட்டிப், புதுவை தந்த

      பாவேந்தன் மொழிகூட்டிப், பொதுமைச் சீவா

பாரதிரும் நடைசூட்டிப், புதுமை தீட்டிப்,

      பண்ணமுத வடலுாரார் சீர்மை யூட்டிச்,

சாரதியின் அருணொளியை யெங்கு மேற்றித்,

      தண்டமிழின் பேரழகை நன்றே சாற்றிச்,

சீரொளிரும் செயலுடைய நெல்லைக் கண்ணன்

      பேரொளிரும் இவ்வுலகில்! ஈடும் உண்டோ?

 

நானடத்தும் கவிக்கம்பன் விழாவில் நெல்லை

      நல்குதமிழ் ஒலிக்கலையே! யெண்ணி யெண்ணி

வானடத்தும் இடிமின்னல் போராய்க் கண்ணீர்

      வந்தொழுகும் நிற்கலையே!  இறைவ னென்ற

கோனடத்தும் ஆட்டத்தை யறிவார் யாரோ?

      கொள்ளையிடல் முறையோ? பாடு மென்றன்

ஊனடத்தும் எண்ணத்துள் நிலையாய் நின்றே

      ஒளிர்கின்ற தமிழ்க்கண்ணன்! ஈடும் உண்டோ?

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

27.08.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire