mardi 14 septembre 2021

வெண்பா மேடை - 212


 வெண்பா மேடை - 212

 

முன் பின் வெண்பா!

 

காதல் கனி

1.

மனமூறும் பாடல் மதுவூறும் சோலை!

புனலுாறும் ஆசை புரண்டு! - தினமும்

வனமூரும் வாசம்! வளமூறும் நேசம்!

கனவூறும் காதல் கனிந்து!

2.

வனமூரும் வாசம்! வளமூறும் நேசம்!

கனவூறும் காதல் கனிந்து! - தினமும்

மனமூறும் பாடல் மதுவூறும் சோலை!

புனலுாறும் ஆசை புரண்டு!

 

மின்னும் தமிழ்மொழி

 

1.

கன்னல் சுரந்திடுமே! காதல் அளித்திடுமே!

இன்னல் அகற்றிடு மே!இங்கு - மின்றமிழே!

முன்னே உதித்ததுவாம்! மூன்றாய்ச் செழித்ததுவாம்!

தன்னேர் இலாததுவாம் சாற்று!  

2.

முன்னே உதித்ததுவாம்! மூன்றாய்ச் செழித்ததுவாம்!

தன்னேர் இலாதது வாம்சாற்று! - மின்றமிழே!
கன்னல் சுரந்திடுமே! காதல் அளித்திடுமே!

இன்னல் அகற்றிடுமே இங்கு!


முதல் வெண்பாவின் முன் வந்த ஏழு சீர்கள், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரவேண்டும். முதல் வெண்பாவின்  பின் வந்த ஏழு சீர்கள், இரண்டாம் வெண்பாவில் முன்னே வரவேண்டும்.

 

'முன் பின் வெண்பா' எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

14.09.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire