dimanche 25 avril 2021

ஈழக் கொலைச்சிந்து

 
ஈழக் படுகொலைச்சிந்து

 1.

வேழம் போன்ற ஈழ நாடு

வீரம் பாயும் வேங்கை நாடு

சோழர் மேன்மை சொல்லும் நாடு

துாய பாதை சூடும் நாடு

புலிபறக்கும் பாரு - அதன்

புகழ்சிறக்கும் கூறு

 2.

வீரம் விளையும் விந்தை நாடு

வெற்றி விளையும் மேன்மை நாடு

காரம் விளையும் கவிதை நாடு

கடமை விளையும் கன்னல் நாடு

ஈழம் என்று போற்று - மனம்

ஏந்திச் சேவை யாற்று

 3.

அன்னைத் தமிழ் ஆளும் நாடு

ஆற்றல் படை ஆளும் நாடு

முன்னை நெறி மூளும் நாடு

முற்றிப் புகழ் ஆளும் நாடு

எங்கள் ஈழ நிலமே - அது

ஈடில் வீரக் களமே

 4.

தாக்கும் பகையைப் போக்கும் நாடு

சங்கத் தமிழை ஆக்கும் நாடு

வாக்கும் செயலும் பூக்கும் நாடு

வல்ல மறவர் காக்கும் நாடு

ஈழம் என்றே சொல்லு - தலைவன்

இட்ட பாதை செல்லு!

5.

கார்த்திப் பூக்கள் காணு நாடு

கவிதைப் பூக்கள் பேணு நாடு

கீர்த்தி பூக்கள் கட்டு நாடு

கேள்விப் பூக்கள் கொட்டு நாடு

மேன்மைத் தொடர் ஈழம் - அதன்

ஆண்மைக் கடல் ஆழம்

 6.

மண்ணைக் காக்கும் மறவர் கூட்டம்

மாண்பைக் காக்கும் அறிஞர் கூட்டம்

பண்ணைக் காக்கும் புலவர் கூட்டம்

பண்பைக் காக்கும் மகளிர் கூட்டம்

ஈடு சொல்ல ஏது - ஈழ

எழிலை எங்கும் ஓது

 7.

ஓங்கு பனைகள் உள்ள மக்கள் 

ஓய்வு மின்றி ஓடும் மக்கள் 

தேங்கு புகழைத் தாங்கும் மக்கள் 

தீவை யாண்ட திண்மை மக்கள் 

வாடும் நிலை யுற்றார் - தமிழ்

வாழும் வழி கற்றார்

 8.

அண்டை நாடு  கொண்ட சதியே

அல்லும் பகலும் கண்ட சதியே

மண்டைக் குள்ளே மனித மின்றிச்

வஞ்சம் பொங்கி வார்த்த சதியே

சதியால் சாய்ந்த ஈழம் - புகழ்

சமைத்து மண்ணில் வாழும்

 9.

செம்மை கொண்ட சிந்து நாடு

செய்த தீமை செப்பும் ஏடு!

எம்மண் எங்கும் இரத்த ஆறு

ஈசன் இல்லை என்றே கூறு

கோல இந்து தேசம் - படு

கொலையைக் காலம் பேசும்

 10.

புத்தன் இல்லை புனிதன் இல்லை

கத்தன் இல்லை கருணை இல்லை

சித்தன் இல்லை செம்மை இல்லை

முத்தன் இல்லை முற்றன் இல்லை

சிங்கக் கொலைச் சிந்து - கண்ணீர்

சிந்தும்  உலகப் பந்து!

 

 [தொடரும்]

 பாட்டரசர் கி. பாரதிதாசன்

25.04.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire