vendredi 27 novembre 2020

விருத்த மேடை - 48

 


விருத்த மேடை - 48

 

எண்சீர் விருத்தம் - 1

 

காய் +  காய் + மா + தேமா
   காய் +  காய் + மா + தேமா

 

வயலுக்குப் பெருமையதன் விளைவி னாலே

   மரத்திற்குப் பெருமையதன் கனிக ளாலே

குயிலுக்குப் பெருமையதன் குரலி னாலே

   குறளுக்குப் பெருமையதன்  பொருளி னாலே

மயிலுக்குப் பெருமையதன் தோகை யாலே

   மலருக்குப் பெருமையதன் மணத்தி னாலே

செயலுக்குப் பெருமைநன் னெறிக ளாலே!

   செல்வர்க்குப் பெருமையவர் கொடையி னாலே!

 

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை - 4


மோனம் போற்று [பாரதியின் புதிய ஆத்திசூடி]

[மோனம் - மௌனம்]

 

சீரொளியைச் சூட்டுகின்ற குறளைக் கற்பாய்!

   சிந்தனையைச் தீட்டுகின்ற தமிழைக் காப்பாய்!

பாரொளியை மூட்டுகின்ற பருதி யாகப்

   பண்பொளியை ஊட்டுகின்ற அறிவைச் சேர்ப்பாய்!

பேரொளியைக் காட்டுகின்ற மோனம் ஏற்பாய்!

   பெருவெளியைக் கூட்டுகின்ற ஞானம் நுாற்பாய்!

மார்பொளியை நாட்டுகின்ற அருளும் அன்பும்

   மறையொலியை மீட்டுகின்ற வழியாம் காண்பாய்!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

காய் வருகின்ற இடங்களில் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் கருவிளங்காய் என எந்தக் காய்ச்சீரும் வரலாம். மா வருகின்ற இடங்களில் தேமாவும் புளிமாவும் வரலாம். 4, 8 ஆம் சீர்களில் தேமா மட்டுமே வரவேண்டும்.  நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

இலக்கணக் குறிப்பு

 

காயிரண்டு மாவொன்று தேமா வொன்று

கலந்தவடி யிரட்டுமதன் விகற்பங் காணே!

 

[விருத்தப்பாவியல் பக்கம் 18]

         
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.11.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire