samedi 3 mars 2018

கலிப்பா மேடை - 12

கலிப்பா மேடை - 12

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா!
 
ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,
ஓங்கு பெருஞ்செந்நெ லுாடு கயலுகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதோ புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
 
       [திருப்பாவை 3]
 
கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்றும் இலலாத கோவிந்தா, உன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது,
அறியாத பிள்ளைகளோம் அன்பினாய் உன்றன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!
 
      [திருப்பாவை 28]
 
திருப்பாவை, திருவெம்பாவை இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பட்டவையாகும்.
 
நாற்சீரடிகள் எட்டு ஒரே எதுகையில் வரவேண்டும். வெண்டளையில் அமைய வேண்டும் 1, 3 ஆம் சீர்களில் மோனை வர வேண்டும். அடி இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் [வெண்பாவைபோல்] வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் அவ்விடத்தில் மா முன் நேர் மட்டும் வராது.
 
மேலுள்ள இரண்டாம் பாடலில் அடியின் இறுதியில் மாச்சீர் வர அடியின் தொடக்கம் நிரையில் உள்ளதைக் கண்டுணர்க.
 
முகநுால் குழுமங்களில் இப்பாடலின் இலக்கணத்தை உரைத்தவர்கள், அடி இறுதிக்கும் அடுத்த அடி முதலுக்கும் மா முன் நேர் மட்டும் வராது என்பதைச் சொல்லாமல் விடுத்தனர். பயிற்சிபெறும் அன்பர்கள் பலர் பிழையாக இப்பாடலை எழுதியுள்ளனர்.
 
நீங்கள் விரும்பிய பொருளில் இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
 
காலைக் குளிர்காற்றுக் காதல் மணம்வீசும்!
சோலை மலர்கள் சுடர்கண்டு வாய்மலரும்!
மேலைத் திருக்கோயில் மீட்டோசை நன்கொலிக்கும்!
மாலை பலசாற்றி மாலை வணங்கிடவே
மாலை உரைத்தமொழி மாதே மறந்தனையோ?
ஓலைக் குடிலுக்குள் இன்னும் உறங்குதியோ?
ஆலைத் தெருமுனையில் அன்பே..நான் காத்துள்ளேன்!
பாலை நிகர்த்தவளே! பாங்காய் எழுவாயே!
 
தெருக்கள் குளித்தனவே! சிங்காரம் மின்னத்
திருக்கோலம் கொண்டனவே! செங்கொண்டைச் சேவல்
அருங்குரல் மீட்டி அழைத்ததுவே காலையினை!
பெருங்குரல் இட்டுப் பிழைக்கின்ற பால்வண்டி!
கருநிறக் கண்ணனைக் கண்டு தொழுதிடவே
வரும்மனம் இன்றி மறந்து கிடப்பதுவோ?
ஒருமனங் கொண்டுநான் ஓதும் மொழிகேட்டுச்
சுருள்கோரை விட்டுத் திருக்கண் மலர்வாயே!
 
      [பாட்டரசரின் காதற்பாவை]
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.03.2018


1 commentaire: