dimanche 14 janvier 2018

தமிழர் புத்தாண்டே வருக!


தமிழர் புத்தாண்டே வருக!
  
எடுப்பு
புத்தாண்டே வருக! - தமிழர்
புகழ்..ஆண்டே வருக!
            [புத்தாண்டே]
  
தொடுப்பு

முத்தாண்டே வருக! - உலக
முதலாண்டே வருக!
            [புத்தாண்டே]
  
முடிப்பு
செழித்தோங்கும் தையெனும் பெயர்கொண்டு - ஆற்றும்
செயலோங்கும் அறமெனும் நலங்கண்டு!
விழித்தோங்கும் திறமெனும் உரமுண்டு - நன்றே
விளைந்தோங்கும் உழவெனும் வரம்தந்து!
            [புத்தாண்டே]
  
வன்மையொளிர் புலி..பறக்கும் கொடிபிடித்து - பொன்
வண்ணமொளிர் மீன்..பறக்கும் புகழ்விரித்து!
நன்மையொளிர் வில்..பறக்கும் எழில்வடித்து - இறை
ஞானமொளிர் தமிழ்மணக்கும் கவிபடைத்து!
            [புத்தாண்டே]
  
பொற்புடைய பெருங்குறளின் பேரேந்தி - நற்
கற்புடைய நறுஞ்சிலம்பின் சீரேந்தி!
பற்றுடைய திருமுறையின் தாரேந்தி - தேன்
முற்றுடைய அருங்கம்பன் தேரேந்தி!
            [புத்தாண்டே]
  
அன்பேந்தி! அருளேந்தி! அழகேந்தி! - நல்
அறமேந்தி! அறிவேந்தி! அணியேந்தி!
இன்பேந்தி! இயலேந்தி! இசையேந்தி! - பஞ்சு
இளமேந்தி! இனிப்பேந்தி! இனமேந்தி!
            [புத்தாண்டே]
  
மொழிகாக்கும் தமிழ்த்தலைவன் ஆட்சியுற - பூத்த
பொழில்காக்கும் மதுநுால்கள் மாட்சியுற!
வழிகாக்கும் படைவீரம் மீட்சியுற - பே
ரெழில்காக்கும் கொடையீரம் காட்சியுற!
            [புத்தாண்டே]
  
உலகெலாம் தமிழ்நெறி உலவிடவும் - நம்
உளமெலாம் குறள்நெறி குலவிடவும்
நிலமெலாம் சமநெறி நிலவிடவும்
நிறைவெலாம் தரும்நெறி வலமிடவும்
            [புத்தாண்டே]
  
வயலாடும் மண்ணோங்கித் திகழ்ந்திடவும் - கண்ணில்
கயலாடும் பெண்ணோங்கி மகிழ்ந்திடவும்
உயிர்பாடும் பண்ணோங்கி உவந்திடவும் - எம்
செயல்யாவும் தண்ணோங்கித் தவழ்ந்திடவும்
            [புத்தாண்டே]
  
காளையுடன் காளையர்கள் விளையாட - உயர்
காதலுடன் கன்னியர்கள் கவிபாட!
சோலையுடன் பெரும்புலமை உறவாட - உயிர்ச்
சொந்தமுடன் இவ்வுலகே சுவைசூட!
            [புத்தாண்டே]
  
தோப்பழகு பூத்தாடும் வண்ணத்தில் - என்
யாப்பழகு பூத்தாடும் எண்ணத்தில்!
காப்பழகு பூத்தாடும் உள்ளத்தில் - தமிழை
நாப்..பழகு பூத்தாடும் இன்பத்தில்!
            [புத்தாண்டே]
  
பணியொளிரும் தைம்மகளே! பண்பொளியே! - குளிர்
பனியொளிரும் தைம்மகளே! விண்ணொளியே!
அணியொளிரும் தைம்மகளே! பொன்னொளியே! - என்
அகமொளிரும் தைம்மகளே! தமிழொளியே!
            [புத்தாண்டே]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.01.2018

2 commentaires:


  1. வணக்கம் ஐயா!

    இனிய தமிழிசைப்பாவால் தமிழர் புத்தாண்டாம் தைத் திருநாளை வரவேற்றீர்கள்!
    மிக மிக அருமையாக இருக்கிறது!
    மிக்க நன்றி ஐயா!

    பொங்கும் மகிழ்வோடு பூத்தூவி வாழ்த்துகிறேன்!
    சங்கத் தமிழ்த்தாயின் தாள்தொட்டு! - எங்கணும்
    தங்கட்டும் நன்மை! தளிர்க்கட்டும் நல்லுறவு!
    மங்கலம் காணட்டும் வாழ்வு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பம், சுற்றம், நண்பர்களுக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    RépondreSupprimer