samedi 13 janvier 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
வணக்கம் ஐயா
  
பல் +கலை = பல்கலை என்று இயல்பாய் வரும் என்றுரைத்தீர். பல்+திறம் = பஃறிறம் என்று புணரும் என்றுரைத்தீர். பல்+பொடி = பற்பொடி என்று வருகிறது. விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
திருமதி பத்மனி கேசவகுமார். சேலம்
-----------------------------------------------------------------------------------------------
  
பல்கலை, பல்திறம் என்பது, பலவகைக் கலைகளையும், பலவகைத் திறமைகளைக் குறிக்கும். இங்குப் பல் என்பது பல என்ற பன்மையைக் குறிக்கும் சொல்லாகும். பல் முன் ககர இனமும், சகர இனமும், பகர இனமும் ஆகிய வல்லின எழுத்துக்கள் இயல்பாகப் புணரும், தகர இனமாகிய வல்லின எழுத்துகள் வர 'ல்' என்ற ஒற்று ஆய்தமாக [ஃ] மாறும்.
  
பற்பொடி என்பது பல்லை விளக்கப் பயன்படும் துாள் என்ற பொருளைத் தரும். இவ்விடத்தில் பல்+பொடி = பற்பொடி என்றே வரும்.
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்! மெலி
மேவின் ன.ண.வும், இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப! [நன்னுால் - 227]
  
1.
கல்+சிலை = கற்சிலை
முள்+செடி = முட்செடி
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் வேற்றுமையில் ற், ட் ஆயின.
  
2.
கல்+தீது = கற்றீது
வில்+புருவம் = விற்புருவம்
முள்+தீது = முட்டீது
முள்+பல் = முட்பல்
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ற், ட், ஆயின.
  
3.
கல்+சிறிது = கல்சிறிது, கற்சிறிது
முள்+சிறிது = முள்சிறிது, முட்சிறிது
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ஒருகால் இயல்பாகியும், ஒருகால் திரிந்தும் உழழ்ந்தன.
  
4.
நெல்+மலிந்தது = நென்மலிந்தது [அல்வழி]
முள்+மாய்ந்தது = முண்மாய்ந்தது [அல்வழி]
  
நெல்+மலிவு = நென்மலிவு [வேற்றுமை]
முள்+முனை = முண்முனை [வேற்றுமை]
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி மெல்லினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் ன், ண், ஆகத் திரிந்தன.
  
5.
நெல்+விளைந்தது = நெல் விளைந்தது [அல்வழி]
முள்+வளர்ந்தது = முள் வளர்ந்தது [அல்வழி]
  
நெல்+வளம் = நெல் வளம் [வேற்றுமை]
முள்+வன்மை = முள் வன்மை [வேற்றுமை]
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி இடையினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் இயல்பாயின.
  
ஒப்புமை நுாற்பாக்கள்
  
லகார இறுதி னகார இயற்றே [தொல் - 367]
  
மெல்லெழுத்து இயையின் னகார மாகும் [தொல் - 368]
  
அல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 369]
  
ளகார இறுதி ணகார இயற்றே [தொல் - 397]
  
மெல்லெழுத்து இயையின் ணகார மாகும் [தொல் - 398]
  
அல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 399]
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்! மெலி
மேவின் ன.ண.வும், இடைவரின் இயல்கும்
ஆகும் இருவழி யானும் என்ப! [இலக்கண விளக்கம் - 137]
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின், தவ்வரின்
இயல்பும் திரிந்தபின் கெடுதலும் ஆகும்
லளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்
திரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப
லளமுன் மெலிவரின் இருவழி னணஆம்
அவற்றுள் ணத்திரிந்து அழிவாம், தனிக்குறில்
நண்ணிய லளமுன் ணவ்வும் னண ஆம். [தொன்னுால் விளக்கம் - 26]
  
லகாரம் வேற்றுமைக்கண் றகர மாகும் [முத்து வீரியம் - 350]
  
மெல்லெழுத்து இயையின் னகர மாகும் [முத்து வீரியம் - 351]
  
அல்வழி யெல்லாம் உறழும் என்ப [முத்து வீரியம் - 354]
  
-----------------------------------------------------------------------------------------------
  
அல்வழியில் தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற ல், ள் என்னும் மெய்கள் முன் தகரவினம் வருமானால் ஆய்தமாகத் திரிதலையும் ஏற்கும்.
  
கல்+தீது = கஃறீது
முள்+தீது = முஃடீது
  
குறில்வழி 'லள' த் த அணையின், ஆய்தம்
ஆகவும் பெறுாஉம் அல்வழி யானே [நன்னுால் - 228]
  
ஒப்புமை நுாற்பாக்கள்
  
தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின்று என்மனார் புலமையோரே [தொல் - 370]
  
ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉம் காலை யான [தொல் - 400]
  
குறில்வழி 'லள'த்தவ்வு அணையின் ஆய்தம்
ஆகவும் பெறுாஉம் அல்வழி யணானே [இ.வி - 138]
  
தகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 358]
  
தகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 382]
  
லளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்
திரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப [தொ.வி. - 26. 4 - 5]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2018

2 commentaires:

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    RépondreSupprimer