jeudi 25 août 2016

வினா விடை வெண்பா




வினா விடை வெண்பா -1

நீதி யறிந்த நெடுங்கவியே! வாழ்வழிக்கும்
சாதிப் பிரிவுமேன் சாற்றுகவே? - ஆதியிலே
உண்டு கொழுத்திடவே நண்டுத் தமிழர்களைக்
கண்டு பிரிதார் கணித்து!

வெண்பாவின் முதல் ஏழு சீர்களில் வினாவைத் தொடுக்க வேண்டும். எட்டாம் சீரிலிருந்து பதினைந்தாம் சீருக்குள் விடை அமையவேண்டும்.
மகடூஉ முன்னிலை சிறப்புடையது.

வினா விடை வெண்பா -2

நான்குவகை யென்பார்! நறும்பூ வினையென்பார்!
ஊன்றுபுகழ் வாணர் உயிரென்பார்! - தோன்றுமெழில்
மேவிடத் தேயும்!விண் பேர்!புலவர் கூடுமிடம்!
பாவலர் பாவரங்கம் பார்!

வெண்பாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் பதில்களைச் சேர்த்தால் இறுதி வினாவிற்கு விடையாக வரவேண்டும்.

நான்கு வகை - பா
நறும்பூ வினை - அலர்
கவிவாணரின் உயிர் - பா
தேயும் கருவி - அரம்
விண்ணின் பேர் - கம்

பா + அலர் + பா + அரம்  + கம்

புலவர் கூடும் இடம் - பாவலர் பாவரங்கம்
வினா விடை வெண்பா - 3

கக்கக்கக் கக்கக்கக் கக்கு!

ஈற்றில் விழியின்பேர்! ஏற்றசளி செய்யும்பேர்!
மாற்றிப் பலதுண்டை வார்க்கும்பேர்  - சாற்றிடுமே
இக்கூட் டெலும்பின்பேர்! ஏந்துசிரிப் புற்றபேர்!
கக்கக்கக் கக்கக்கக் கக்கு!

கக்க்க்(கு)அக்(கு) அக்கக் கக்(கு) அக்கு!

ஈற்றில் உள்ள அக்கு - விழியை அக்கு என்றுரைப்பர்
கக்கு - கக்குதல், இருமுதல்
அக்கக் - அக்கக்காய்ப் பிரித்தல்
அக்கு - எலும்பு
கக்கக்கு - கக்கக்கெனும் சிரித்தற்குறிப்பு

வினா விடை வெண்பா - 4

கண்ணே! கனிமொழியே! கண்கவரும் தேவதையே!
பெண்ணே! பெயரென்ன? பெற்றநகர் என்ன?
பழமைக் கெதிராகும்! ஈறுகெடும்! பாய்ந்து
செழுமைச் சிறப்பூட்டும் கையாற்றின் முன்னெழுத்து!
சாதிப் பெயராம்! தமிழில் வினாவாகும்!
ஓதும் புறநகரை! உண்மைப் பெயரொளிரத்
தங்கத்தில் சேரும்! சரமாகக் கோத்தாடும்!
தங்கு நலம்நல்கும் தாமரையாள்! நம்நாட்டில்
வார இதழாய் வருகின்ற பெண்ணவள்!
ஊரும் பெயரும் உணர்!

பழமைக் கெதிராகும் ஈறுகெடும் - புதுமை - புது
கையற்றின் முன்னெழுத்து - வைகை - வை
சாதிப் பெயராகும் - முதலி
தமிழில் வினாவாகும் - யார்
ஓதும் புறநகரை - பேட்டை
சரமாகக் கோத்தாடும் - முத்து
தாமரையாள் - லட்சுமி
வார இதழ் - தேவி

விடையாக வந்த சொற்களைச் சோத்தால் காதலன் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும்.

புதுவை முதலியார்பேட்டை முத்துலட்சுமி தேவி

பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016

2 commentaires:

  1. அப்பப்பா.
    அய்யா , அடிபணிகிறேன் தங்களின் அருந்தமிழுக்கு

    RépondreSupprimer
  2. சிறப்பான பகிர்வு ஐயா....

    RépondreSupprimer