samedi 14 novembre 2015

அடிமுதல் கண்ட குறள்!




 அடிமுதல் கண்ட குறள்!

குறளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக இருக்க வேண்டும்! இரண்டும் வெவ்வேறு பொருளில் வரவேண்டும்!

1.
படித்தேன் அளிக்கின்ற பாவையின் பாட்டைப்
படித்தேன் பறந்த படி!

2.
கண்டுமொழி கொண்டவளே! காதல் கொழிக்குதடி!
வண்டுவிழி வண்ணங்கள் கண்டு!

3.
அடியழகு பெண்ணே! அருந்தமிழ் மின்ன
அடியழகு தந்தா யடி!

4.
கொடியேற்றி ஆடுமவள் கூரழகு! போதை
குடியேற்றி ஆடும் கொடி!

5.
துடியிடைப் பெண்ணின் சுவைநடை பாடிச்
சுடர்கவி நெஞ்சே துடி!

6.
கட்டுமலர் சூடிவரும் காரிகையைக் கண்டே..நீ
மெட்டுமலர் இட்டுகவி கட்டு!

7.
கலையழகே! கண்மணியே! காலம் உணர்ந்து
சிலையழகே! சீற்றம் கலை!

8.
அணையினை மீறி அகத்தாசை பொங்கும்!
இணையெனை ஏந்தி அணை!

9.
அணியொளிர் பெண்ணே! அருஞ்சுவையே! என்னை
மணியொளிர் மார்பில் அணி!

10.
கழையழகு தோள்கள்! கனிமொழியே உன்றன்
குழையழகு கூட்டும் கழை! 

14.11.2015
 

11 commentaires:


  1. அடிமுதல் கண்ட அருங்குறள் கண்டேன்!
    கொடிமணம் உற்றவளம் கொண்டேன்! - கடிகமழ்
    கன்னல் கவியரசே! கட்டிய பாட்டழகில்
    மின்னல் ஔரும் விளைந்து

    RépondreSupprimer
  2. அருமை. அருமை..... கவிஞர்.

    RépondreSupprimer
  3. தங்களது பாணியில் எழுதுவதோ, சிந்திப்பதோ எங்களுக்குச் சிரமமே. ஆனால் நன்கு ரசிப்போம். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    RépondreSupprimer
  4. சிந்திக்கச் சிறந்த பதிவு
    அடி முதலா அந்தாதியா
    அருமை

    RépondreSupprimer
  5. வணக்கம் ஐயா !

    மதிமுக மூட்டும் மயக்கம் தவிர்த்தால்
    விதியினை வெல்லும் மதி !

    பத்தும் முத்தான பாக்கள் நானும் முயன்று பதிவிடுகிறேன் இங்கே
    மிக்க நன்றி ஐயா நல்ல வழிகாட்டல் வாழ்க வளமுடன் !
    தம +1

    RépondreSupprimer
  6. வணக்கம் ஐயா!

    மறைந்திடக் கூடுமோ மாண்புகள் சேர்க்கும்
    நிறைகுறளாய் நிற்கும் மறை!

    அடிமுதலாய்த் தந்த பாக்கள் அத்தனையும் சிறப்பு ஐயா!
    படி படியென்று என்னையும் எழுதத் தூண்டிற்று!
    அருமையான பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  7. "கலையழகே! கண்மணியே! காலம் உணர்ந்து
    சிலையழகே! சீற்றம் கலை!"-

    என்ற வரிகளை நான் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் அல்லவா நண்பரே?

    RépondreSupprimer
  8. மிகப்புதுமையான சிந்தனை....ரசனையான வரிகள்

    RépondreSupprimer
  9. வெண்பா விற்கு அழகு பொழிப்பு மோனை.....பொழிப்பு மோனை தொடுக்கச் சிரமமான இவ்வகையிலும் முதல் மற்றும் மூன்றாம் பாக்களில் பொழிப்பு மோனை கொண்டு வந்தமை தங்களது பாத்திறத்தினைப் பறைசாற்றுகிறது ஐயா...

    RépondreSupprimer
  10. ஐயா வணக்கம்.

    இப்பொழுதே காண நேர்ந்தது.

    அடைசொல்லில் சேரும் அழகுதமி ழாடப்
    படைக்குமும் பாதேன் அடை ( அடைசொல் – வினைத்தொகை )

    ஆறுகடல் சேரமகிழ்ந் தாறுதல்போல் நாடலுமை
    தேறுமர பேபயிலும் ஆறு(வழி)

    இலையென்று சொல்லா இலக்கணத்தேன் தும்பீஇ!
    வலைப்பூவின் வாடா இலை.

    ஈடுசொல வொண்ணா எழிலார் கவிபடைத்துப்
    பீடுமொழிக் கானீரே ஈடு!(கவசம்)

    உடுபூத்த வானின் உயர்வெண்ணி லாவாய்ப்
    படுநெஞ்சம்! உம்சொல் உடு!(அம்பு)

    ஊறுமர பெல்லார்க்கும் ஊட்டுமும் ஆற்றலினால்
    மாறுவிதி! போம்தமிழின் ஊறு!( ஊறுமரபு - வினைத்தொகை)

    எண்ணெழுத்துப் போற்றும் எழிலார் தமிழ்பரப்பிக்
    கண்திறந்தா ரின்சேவை எண்.

    ஏறுபடி யாய்இருந்தீர்! எங்குந் தமிழ்ச்சுவைத்தேன்
    சாறளித்தீர்! நீர்மரபி னேறு!

    ஐவகைப் பட்ட அமுதத் தமிழ்ப்பரப்பின்
    மெய்தொட்(டு) அளிக்கின்றீர்! ஐ!! (வியப்பு)

    ஒளிமடமை தேடியழி ஒட்பமதி கொண்டீர்
    துளியிருளும் தீய்க்கும் ஒளி!( ஒளிமடமை - வினைத்தொகை)

    ஓர்கழகம் கம்பனில்மற் றொன்றுதொல் காப்பியனில்
    சீர்தமிழ்க்காய்ச் சேர்த்தமையை ஓர்!
    ( ஓர் - சிந்தித்துப்பார்த்தல்; ஓர்கழகம் செய்யுள் வழுவமைதி)

    ‘ஔ’வை உயிரிறுதி ஆள்தமிழில் நீங்களுமிவ்
    வையம்வாழ் ஆண்பாலௌ வை!

    சிறியேனின் முயற்சி.

    தாமதம் பொறுத்தாற்றுங்கள்.

    நேரமின்மையாலும் நேரே தட்டச்சுவதாலும் மீளப்பார்க்கவில்லை.

    தவறிருப்பின் சுட்ட வேண்டுகிறேன்.

    நன்றி.

    RépondreSupprimer