mardi 28 avril 2015

அருண்மிகு சீனிவாசப் பதிகம்



முதலியார்பேட்டைச் 
சீனிவாசப் பெருமாள் பதிகம்

1.
சீர்மேவும் வன்னியரின் செல்வத் திருமாலே!
கார்மேனி வண்ணனே! கண்ணனே! - பார்மேவும்
திங்கள் திகழொளியே! செம்பொருளே! வாழ்வினில்
தங்கும் நலங்களைத் தா!

2.
தாமோ தரனே! தனிப்புகழ் பெற்றிலங்கும்
மாமோ கனனே! மலர்முகனே! - காமோதும்
தென்றல் தருஞ்சுகமே! தென்னவனே! என்றெனுக்கு
உன்றன் உறவே உறவு!

3.
உறவானாய்! கொண்ட உயிரானாய்! என்றும்
அறமானாய்! அன்பானாய்! ஆக்கும் - திறமானாய்!
தீட்டும் தமிழானாய்! தேடிவரும் நீரானாய்!
சூட்டுமணி யானாய்ச் சுடர்ந்து!

4.
சுடராழி கண்டேன்! திருச்சங்கம் கண்டேன்!
இடராழி நீக்குமெழில் கண்டேன்! - தொடராழி
என்னும் பிறப்பகலக் கண்டேன்! இன்மையெலாம்
ஒன்னும் நிலைகண்டேன் ஓர்ந்து!

5.
ஓது மறையே! உலகளந்த பெம்மானே!
மாதுறை மார்பனே! மாயவனே! - சூதுமனம்
ஏன்எனக்குச் சொல்லரசே! எந்நாளும் துாயமனத்
தேன்எனக்கு ஈவாய்த் தெளிந்து!

6.
தெளிந்த இசையோடு தேன்தமிழில் பாட!
விளைந்த பசுமைவளம் மேவ! - வளைந்தாடும்
வேய்க்குழல் மாமணியே! வெல்லும் திறனுடைய
தாய்த்தமிழ் ஊட்டும் தழைத்து!

7.
ஊட்டும் குவிமுலைபோல் ஊறும் அருளாளா!
வாட்டும் துயர்போக்கும் மாண்பாளா! - காட்டு
மலர்மணமாய் வீசும் மணவாளா! என்றன்
உளம்நிறைந்த சொல்லாய் ஒளிர்!

8.
சொற்சிறக்க என்றும் சுடர்பனுவல் சீர்நுாலைக்
கற்றுக் களித்திடக் கண்காட்டு! - நற்றவனே!
நாரா யணனே! நறுஞ்சீனி வாசனே!
தீராய் வினைகளைத் தீய்த்து!

9.
வினைகளைத் தீய்த்து விழைந்தெனைக் காத்து
நினைவினை மேலுயர்த்தி நிற்பாய்! - பினைந்துள்ள
பொல்லாப் பிணிநீங்கப் பொன்னொளிர் தாள்காட்டும்!
எல்லாமும் ஆனாய் எனக்கு!

10.
எல்லா உயிர்க்கும் இனிமை தருகின்ற
வெல்லும் திருமாலே வேண்டுகிறேன்! - நல்லுயா்
அப்பனும் அம்மையும் ஆனவனே! உன்புகழைச்
செப்பச் சிறக்குமாம் சீர்!

30.01.2015

16 commentaires:


  1. காக்கும் பரம்பொருள்மேல் கட்டிய வெண்பாக்கள்
    போக்கும் துயரை! தொடர்வினையை! - பூக்குமெழில்
    சோலை மலரழகாய்த் துாய தமிழாலே
    மாலைப் பணிந்தீர் மகிழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிந்தைச் செழிப்பீந்து சேர்ந்தென்னுள் வாழ்கின்றான்
      விந்தை அருளாளன் வேங்கடவன்! - செந்தமிழால்
      மாலை படைக்கின்றேன்! மாலைத் தொழுகின்றேன்!
      காலை விடியலாய்க் கண்டு!

      Supprimer
  2. சிந்தையிலே வாழ்கின்ற சீனிவாசர் நற்புகழை
    அந்தாதிப் பாவில் அளித்திட்டீர் - அந்தமிலான்
    என்றும் அருள்தரட்டும் ஏக்கம் அறுக்கட்டும்
    பொன்னெழில் பூக்கட்டும் வாழ்வு !

    அருமை அருமை கவிஞர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 5

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தாதிப் பாமணக்க அத்தன் அருண்மணக்க
      வந்தோதி தந்த வளர்வெண்பா! - சிந்தாடி
      ஓங்கும் கவிமனத்துள் தேங்கும் சுவையூட்டும்!
      தாங்கும் தமிழைத் தழைத்து!

      Supprimer
  3. வணக்கம் !

    எம்பெருமான் நல்லாசி என்றென்றும் கிட்டவே
    தம்கருணை உள்ளமதால் தந்திட்ட!- இம்மாங்
    கனிச்சீர்கண் டால்போதும் காதல்தான் கொள்வான்!
    இனித்துயரும் இங்கே எதற்கு !

    வாழ்த்துக்கள் ஐயா அற்புதமான வெண்பா மாலை கண்டு
    மகிழ்ந்தேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அளித்த அழகு தமிழ்வெண்பா
      எம்மான் சிறப்பை இசைத்ததுவே! - செம்மலைவாழ்
      வேங்கடவன் நல்லருளை மேவிச் செழுந்தமிழைத்
      தேங்குடமாய் நாளும் திரட்டு!

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா

    அகிலத்தை ஆளும் எம் பெருமான் பற்றி.
    நற்கீர்த்தனை நாஊற நற்தமிழில்
    நன்றே ஓதினாய்.. நாம் கண்டு
    மகிழ்ந்தது மனம்.

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா. த.ம8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. அற்புதமான வரிகள் ஐயா...

    வாழ்க நலம்...

    RépondreSupprimer
  6. செந்தமிழ்ப் பாவாலே சீனுவாசன் சீர்பாடி
    சிந்தை மகிழும் செழித்து.

    RépondreSupprimer
  7. அனத்தும் அருமை! நலமா?!

    RépondreSupprimer
  8. உறவானாய்! கொண்ட உயிரானாய்! என்றும் அறமானாய்! அன்பானாய்! உண்மையானாய்! மனிதனானாய்! அருமையான கடவுள் பாடல், புதுவை வேலு அவர்கள் அறிமுக படுத்திய வலை சரத்தின் மூலம் முதல் முறை வரும்போதே பக்தி பாடலின் அருமையை தெரிந்து கொண்டேன். நன்றி கவிஞரே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  9. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    RépondreSupprimer
  10. பெருமாளைத் தங்களின் பாணியில் வணங்கியவிதம் அருமை.

    RépondreSupprimer

  11. Renugadevi Velusamy இனிய வணக்கம் கவிஞர்.

    நெடியோனை
    பச்சைமா மலையோனை
    பாற்கடல்வாசனை
    பள்ளிகொண்ட பெருமாளை
    திருமகள் உறை மார்பனை
    கார்மேக வண்ணனைப்
    பாடிப்பணியும்
    பாப்புணை கவிஞர்
    வையத்துள் வாழ்வாங்கு
    வாழ்க வாழ்கவே!!

    RépondreSupprimer

  12. Asokan Radjou பத்து மலர்கொத்தாக பதித்தீர் பொற்கவிதை ! படித்தேன் சுவைத்தேன் பணிந்தேன் ! வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer