samedi 4 avril 2015

முதலடி முதல் மடக்குக் குறள்




முதலடி முதல் மடக்குக் குறள்கள்

1.
மரைபோல் மரைபோல் மலர்ந்தவிழி! முன்னோர்
உரைபோல் இனிக்கும் உளத்து!

மரை =  தாமரை, மான்

2.
கண்டுமலர் கண்டுமலர் ஏங்குகிறாள்! கற்பனையில்
கொண்டுலாக் காணுகிறாள் கூத்து!

கண்டுமலர் = தேன்மலர், காணும்பெண்

3.
பாவாடை பாவாடை வீசுதடி! உன்மேனி
பூவாடை வீசுதடி பூத்து!

பாவாடை - உடை, பாடல்

4.
மடலும் மடலும் மணம்வீசும்! மங்கை
உடலும் மணம்வீசும் ஓது!

மடல் = தாழை, கடிதம்

5.
மாலையவள்! மாலையவள்! மஞ்சம் விளைகின்ற
சோலையவள் என்பேன் சுவைத்து!

மாலை = பூமாலை, மாலைப்பொழுது

6.
அணையே! அணையே! அமுதுாறும் அன்பே!
இணையே இலையுனக்[கு] இங்கு!

அணை = படுக்கை, அணைத்தல்

7.
கண்ணமுதைக் கண்ணமுதைக் கண்டு கதைக்கின்றேன்!
பெண்ணமுதை வெல்லல் பெரிது!

கண்ணமுதம் = பாயாசம், கண்ணழகு

8.
பாடியாள்! பாடியாள் கின்றாள்என் நெஞ்சத்தை!
கோடி..ஆள் வன்மை கொடுத்து!

பாடியாள் = பாடி ஊரைச் சோ்ந்தவள், 
பாடி ஆள்கின்றவள்

9.
மலைத்தேன்! மலைத்தேன்! பருகத் துடித்தேன்!
கலைத்தேன் அவளெனக் கண்டு!

மலைத்தேன் = தேன், வியப்பு

10.
மெய்யறிந்து மெய்யறிந்து சொல்கின்றேன்! உன்மேனி
செய்யவள் கொண்ட சிறப்பு!

மெய் = உடல், உண்மை

இலக்கண விளக்கம்

முதலடியில் முதல் சீரும் இரண்டாம் சீரும் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்விரு சீரும் வேறுவேறு பொருளில் வரவேண்டும். இதனை முதலடி முதல் மடக்கு என்பர்.

04.04.2015
 

22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.... பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தோப்பு மணக்கின்ற துாய தமிழேந்தி
      யாப்பு மணக்குமே இங்கு!

      Supprimer
  2. அருமை ஐயா! ஒரு புதிய வகையை அறிந்தேன்.திருக்குறளில் இந்த வகை உள்ளதா?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மரபு வகையுரைத்தேன்! வண்டமிழ் ஓங்கிப்
      பரவும் வகையுரைத்தேன் பார்!

      திருக்குறளில் முதலடி முதல் மடக்கு இல்லை
      முதலடியில் முதல் சீரும் இரண்டாம் சீரும் ஒன்றாக வந்து ஒரே பொருளைக் குறிக்கின்ற குறள்கள் உள்ளன.

      பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
      செய்யாமை செய்யாமை நன்று - 297

      இறந்தார் இறந்தார் அணையர்! சினத்தைத்
      துறந்தார் துறந்தார் துணை - 310

      காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
      ஏதில எதிலார் நுால் - 440


      Supprimer
  3. அனைத்தும் அருமை ஐயா... ரசித்துப் படித்தேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தமிழின்
      பெருமைக்குக் கொண்டோம் பிறப்பு!

      Supprimer
  4. எத்தனை அற்புதமான இலக்கண நுட்பம் நிறைந்த குறள். ஆச்சரியமாக இருக்கிறதுங்க ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விஞ்சம் சுவையுடைய கொஞ்சும் தமிழழகை
      நெஞ்சம் முழுதும் நிரப்பு!

      Supprimer
  5. மிக நுட்பமாகத் தாங்கள் எழுதியுள்ள விதம் அருமை. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நுட்பமுடன் பாடிய நோக்கை உணர்ந்திங்கு
      நட்புடன் செய்தீர் நலம்!

      Supprimer

  6. வல்ல முறையில் வருகின்ற சொல்லாட்சி!
    நல்ல முறையில் நவின்றுள்ளீர்! - சொல்லாிய
    இன்பத்துள் என்னை இறக்கிவிட்டீர்! வாழ்த்துகிறேன்
    என்னகத்து நன்றியை ஈந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்றி மலர்கண்டேன்! நற்றமிழ் வெண்பாவில்
      ஒன்றி நலங்கண்டேன்! என்நண்பா! - என்றென்றும்
      உன்றன் கருத்துக்கள் ஊக்கம் எனக்களிக்கும்!
      என்றன் பணியை இசைத்து!

      Supprimer
  7. மலைத்தேன்! மலைத்தேன்! பருகத் துடித்தேன்!
    கலைத்தேன் அவளெனக் கண்டு!///
    ஆஹா...அற்புதம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவியாழி வந்தார்! கவித்தேன் உண்டார்!
      சுவை..கோடி என்றார் சுகந்து!

      Supprimer
  8. மடக்குஅணி கண்டு மனம்மகிழ்ந்தேன் யாவும்
    தடக்கு மணியெனக்கென் றெண்ணி தளர்ந்தேன்
    சுடக்குபோடும் நேரத்தே சுடர்ந்தீர் சுவையாய்
    தொடரும் பணியைசிறப் பாய்!

    ஆச்சரியமாகவே உள்ளது செந்தமிழின் சிறப்பை எண்ண. அருமை அருமை !அனைத்தும் பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தடுக்கும் தடையில்லை! தண்டமிழ்ப் பாக்கள்
      சொடுக்கும் ஒலிமுன் சுரக்கும்! - படுத்துறங்கும்
      வேளையிலும் சந்தம் விளையாடும்! அந்தமிழின்
      தாளைத் தொழும்என் தலை!

      Supprimer
  9. அய்யா வணக்கம்.
    காலையில் பணி செல்லும் அவசரத்தில் பின்னூட்டத்தில் நேரே தட்டச்சியதால் இரண்டாம் பாடலில், ஆ…மென்றோள் என்றிருக்க வேண்டியது ஆ..மேன்றோள் என்று ஆனது. பொருள் விளக்கமும் இன்னும் கொஞ்சம் சரியாக இருந்திருக்க வேண்டுமோ என்ற ஐயத்தில் முன் இட்ட பின்னூட்டத்தை நீக்கிப் பின்வருமாறு திருத்தி இடுகிறேன்.
    “காலைவா என்றேனைக் ‘காலை..வா‘ என்றுரைப்பின்
    காலைகொள்வாள் வேண்டீரோ என்றாளைச் - சேல்விழியே
    கொள்வாள்வேண் டும்வெட்டிக் கொள்‘வாள் ‘அன் றென்பேனைக்
    கொள்வாளை யாள்போனாள் கொண்டு!
    = ‘காலையில் வா‘ என்று அவளிடம் சொல்லக் கருதி ‘காலை வா’ என்றேன். அவளோ ‘காலை மட்டும் வரச் சொன்னால், கால் மட்டும் வந்தால் போதுமா? அந்தக் காலைக் கொண்டிருக்கும் நான் வேண்டாமா?‘ (காலை கொள்வாள் வேண்டீரோ?) எனக் கூறி ஊடினாள்.
    (நான் பதறிப்போய்) மீன் போன்ற கண்ணினை உடையவளே… கால் மட்டும் வந்தால் எப்படி ? அந்தக் காலை உடையவளும்தான் எனக்கு வேண்டும். (கொள்வாள் வேண்டும்) நான் கொள்வாள் என்று சொன்னதை நீ இனியும் வெட்டிக் கொண்டு வரும் வாள் என்று வேறு பொருளில் நினைத்து விடாதே! நான் சொல்வது அதனை அன்று‘ ( வெட்டிக் கொள் வாள் அன்று ) எனச் சொன்னேன்.
    என் சொற்கேட்டு மகிழ்ந்து, வாளை மீனினைப் போலத் துள்ளும் விழிகளை உடைய அவள் போகும் பொழுது என்னையும் அவளுடன் எடுத்துக் கொண்டு போனாள். ( கொள் வாளையாள் போனாள் கொண்டு )

    காலைவா – காலையில் வா
    காலைவா – நடக்கும் காலை வா என்றழைத்தல்
    காலைகொள்வாள் – காலைக் கொண்டிருப்பவள்
    கொள்வாள் – கொண்டிருப்பவள்
    வெட்டிக் கொள் வாள் – வெட்டியறுத்துக் கொண்டுவரும் வாள்
    கொள்வாளை யாள் – வாளை மீனைப் போன்ற கண்களைக் கொண்டிருப்பவள்.

    “‘சாம்பிராணி‘ என்றேன்‘நாம் எல்லோரும் சாம்..பிராணி
    ஆமெ‘ன்றோள். என்றாளுக்(கு) ஆ..மென்றோள்! – ‘தேம்பா
    ரதிதாசர் பாபடித்தேன் பா..படித்..தேன்‘ என்றாள்
    மதிகொண்ட என்வெண் மதி!“

    = ‘காலை வா‘ என்று நான் சொன்னதைப் புரிந்தும் புரியாதது போல என்னுடன் ஊடிய காரணத்தால் அவளை நான் செல்லமாய்ச் ‘சாம்பிராணி என்றேன். ( மடச் சாம்பிராணி எனக் கிண்டல் செய்யும் வழக்குப் போல )
    அதற்கு அவளோ நாம் எல்லோருமே ஒரு காலத்தில் சாகும் பிராணிகள் தானே! (சாம்..பிராணி) நீங்கள் சொல்வது சரிதான். ஆமாம் என்று சொன்னாள்.(ஆமென்றோள்). அப்படி அவள் சொன்னபோதுதான் அவளது தோள்களை நன்கு கவனித்தேன். என்னை அறியாமல் வியந்து, ‘ஆ.. மென் தோள்‘ ( ஆ…..மென்றோள்). என்று கூறிவிட்டேன்.
    நானுற்ற வியப்பைக் கண்டு, என் வியப்புத் தன் சொல் நயத்தால் விளைந்தது என்று எண்ணி அதற்குக் காரணம் சொல்லுவாளாய் , ‘இனிய பாரதிதாசர் எழுதிய பாடல்களைப் படித்தேன்‘ என்றாள்.( தேம் பாரதிதாசர் பா படித்தேன்).
    மேலும் அவளே அப்பாடல்களின் தன்மையையும் கூறுபவளாய், அந்தப் பாடல்கள் ‘படித் தேனை அப்படியே பருகியவாறு இருந்தன‘ என்னும் பொருளில் மீண்டும் ‘பா…படித் தேன்‘ என்றாள்.
    அப்படிப்பட்ட அவள், எனது அறிவைக் கொள்ளை கொண்ட ( மதி கொண்ட ), அறிவினைக் கொண்ட ( மதி கொண்ட ) என் இருள் படிந்த மனத்திற்கு ஒளி ஏற்றும் தூய வெள்ளை நிலவினைப் போன்றவள். ( என் வெண் மதி )


    சாம்பிராணி - புகையும் பொருள்.. (அறிவீனத்தின் அடை)
    சாம்..பிராணி.- இறக்கும் உயிர்கள்.
    ஆமென்றோள்- ஆமாம் என்று சொன்னவள்
    ஆ..மென்றோள் -- ஆ.. இவளுக்கு என்ன மென்மையான தோள்கள்
    பா படித்தேன் - பாடலைப் படித்தேன்
    பா...படித் தேன் - பாடல் படியளவு உள்ள தேன்
    மதி கொண்டாள் – என் அறிவினைக் கொள்ளை கொண்டவள் / அறிவை உடையாள்.
    வெண்மதி - வெண் நிலவு. அன்மொழித்தொகையாய்ப் பெண்ணை உணர்த்திற்று.
    உங்கள் குறள் முதலடி மடக்கு வெண்பா அத்துணையும் அருமை அய்யா.

    இது புலிகண்டு பூனை இட்டுக் கொண்ட சூடு.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      பாவை பகர்வதாய்ப் பாடிப் படைத்தவெண்
      பாவைப் படித்துப் பயனுற்றேன்! - பூவையெழில்
      கண்டு மலைத்தேன்! களிப்புற்றேன்! இன்மலைத்தேன்
      உண்டு குதித்தேன் உருண்டு!

      அவையடக்க மாக அளித்திட்ட சொற்கள்
      சுவைபெருக்கும்! சொக்கிவிழச் செய்யும்! - எவையடக்கும்
      என்னை? இனியதமிழ்ப் பாட்டால் அடக்கியவா!
      உன்னை வணங்கும் உயிர்!

      ஐயா வருகைக்கும், இனிக்கின்ற மடக்கணி வெண்பாவுக்கும் நன்றி!

      புலிகண்டு பூனை இட்டுக் கொண்ட சூடு. இவ்வடி உங்களின் அவையடக்கத்தைக் காட்டுகிறது. கம்பர் பாடுவார்

      ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
      பூசை முற்றவும் நக்குபு புக்கென
      ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
      காசில் கொற்றத்து இராமன் கதையரோ!

      கம்பரும் தம்மைப் பூனையென்று பாடியிருப்பதை எண்ணி இன்புற்றேன்

      உங்களின் கவிதைகளையும், உரைகளையும் கற்றும் தெளிந்தும் என் தமிழ் ஆற்றலை விாிவு செய்து கொள்கிறேன் என்பதுதான் உண்மை!

      Supprimer
  10. அருமை ஐயா....இப்பதிவிற்குக் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக் கொள்கிறேன்...மிக இன்பமான உணர்வினைப் பெற்றேன் என்பதை மட்டும் இப்பொழுது பதிவு செய்கிறேன்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பத் தமிழை இயம்பும் பொழுதெல்லாம்
      அன்பால் கமழும் அகம்!

      Supprimer

  11. Balasubramanium Somasuntharabharathy

    நன்று நண்பரே!

    பாரதியே பாரதியே கப்பட்டோர் வாழ்த்தினரே
    பாரதியின் அருளன்றோ அருள்

    பாரதியே – பாரதிதாசனே
    பாரதியே கப்பட்டோர் - பார் அதி ஏகப்பட்டோர்
    பாரதியின் அருளன்றோ அருள் - சரசுவதியின் அருள் அன்றோ அருள்!

    “பாரதியே பாரதியே தந்திட்ட அருள்கொண்டு
    பாரதிகம் பாராட்டப் பாடு !”

    பாரதியே – பாரதிதாசனே
    பாரதியே தந்திட்ட – சரசுவதியே அருளிய
    பாரதிகம் - பார் (உலகம்) அதிகம் பாராட்டப் பாடுவாயாக

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாரதியே! பா..ரதியே என்றினிக்கச் சீருரைத்தீர்
      பாரதியே தந்த பயன்

      Supprimer