samedi 3 janvier 2015

தயக்கம் ஏனடி?
தயக்கம் ஏனடி?

1.
கோடிமலர் முத்தங்கள் கொட்டிக் கொடுத்திடவே
வாடி அருகே வளைந்து!

2.
பாடிக் களிக்கும் பறவைபோல் இன்பத்தைச்
சூடிக் களிப்போம் சுவைத்து!

3.
தேடியெனை வந்தவளைத் தேனுண்டும் வண்டாக
நாடி பெறுவேன் நலம்!

4.
ஓடி விளையாடி ஒன்றாய் உயிர்கலந்து  
ஆடிக் குடிப்போம் அமுது!

5.
சூடிவரும் மல்லிகை சொக்குப் பொடிபோட்டுக்
கூடியுறச் செய்யும் குளிர்ந்து!

6.
மாடி அறைதேடி வந்தவளே! வானமுதைத்
தாடி எனக்குத் தழைத்து!

7.
நாடி துடிக்குதடி! நண்ணும் உணா்வலைக்கு
மூடி உளதோ மொழி!

8.
மோடி எடுப்பதுபோல் முற்றுமெனைச் சாய்த்தவளே!
வாடி வதங்குகிறேன் வா!

9.
ஆடி வருகுதடி! ஆசை பெருகுதடி!
ஏடி தயக்கம் இனி!

10.
சாடி மதுவருந்தத் தத்தி மனம்ஏங்கித்
தாடி வளரும் தழைத்து!

02.01.2015

32 commentaires:


 1. பத்துக் குறள்களும் முத்துச் சரமென்பேன்!
  கொத்துக் கனிகளின் கூட்டென்பேன்! - கத்துகடல்
  சூழுலகம் சூடும் சுவையென்பேன்! கற்பனைகள்
  ஆழுலகம் உன்றன் அகம்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   ஓரெதுகை பெற்றே ஒளிரும் குறட்பத்தின்
   சீரெழுதி என்னைச் சிறப்பித்தீர்! - ஏரெழுதிச்
   சென்ற இடமாய்ச் செழிக்கும் கவிச்சோலை!
   உன்றன் கருத்தே உரம்!

   Supprimer
 2. ஓசை சிறக்குதடி ஓங்கி ஒலிக்குதடி
  திசையெட்டும் உம்புகழ் எட்டும்

  புதுவை வேலு

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஓசை சிறந்தொளிரும் ஓங்குதமிழ்ப் பா..படித்தால்
   ஆசை பெருகும் அகத்து!

   திசையெட்டும் செந்தமிழைச் செப்புகின்ற நெஞ்சுள்
   இசைகொட்டும் என்றும் இனித்து!

   Supprimer
 3. இதுவும் இரண்டடி குறள்களோ என்று பார்த்தேன்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இரண்டடி பெற்றே இனிக்கும் குறள்தான்
   வரமென வந்த வடிவு!

   Supprimer
 4. Réponses

  1. வணக்கம்!

   அழகிய செந்தமிழை ஆழ்ந்து சுவைத்துப்
   பழகிட ஓங்குமே பாட்டு!

   Supprimer
 5. வணக்கம் !
  முத்துப் பரலென முன்னே தவழ்கின்ற
  சொத்தைத்தான் கண்டுளம் சொக்குதே !-வித்தகா !
  தத்தையிவள் போற்றும் தமிழன்நீ! வாழியவே !
  பத்துத் தலைமுறை பாத்து!

  பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் ஐயா நாமும்
  தங்களுடன் சேர்ந்து பயணிப்பது ! வணங்குகின்றேன்
  வாழ்க ¨வளமுடன் !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   முத்துத் தமிழ்தரித்து மூளை கவிபடைத்தால்
   பத்துத் தலைமுறை பார்த்துய்யும்! - கொத்துக்
   கனியாகக் கோலக் கவியளித்த அம்பாள்
   நனியாகக் காண்க நலம்!

   Supprimer
 6. குறள் கவிதைகள் அருமை ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   குறள்கவி பத்தும் கொடுக்கும் இனிமையை
   நிறைகவி ஆற்றல் நிறைத்து!

   Supprimer
 7. குறள் போன்றே தங்களின் குரல் அருமை கவிஞரே...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   குரலும் அருமை! குறளும் அருமை!
   திரளும் இனிமை! தெளிந்து!

   Supprimer
 8. தயக்கமேன் இன்பத் தமிழ்க்கடலுள் மூழ்கும்
  மயக்கமு மோடியென் மாதே ? - முயக்கில்‘உன்
  கண்டுகளி வண்டுவிழி அண்டியிதழ் கொண்டுதமிழ்
  உண்டிருக்கும் என்றோ உனை!

  அருமைக் குறட்பாக்கள் அய்யா!

  த ம 5

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   முயக்கும் உணர்வுகள் மூண்டு முறுக்க
   வியக்கும் குறட்பா விளைத்தேன்! - பயனாக
   உன்றன் உயா்வெண்பா என்றன் வலைமின்னும்!
   அன்பாம் அமுதை அளித்து!

   Supprimer
 9. வெகு ரசனையாக உள்ளது. கோடிமலர் முத்தங்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கோடிமலர் முத்தங்கள் கொட்டும் அமுதருந்திப்
   பாடிமனம் துள்ளும் பறந்து!

   Supprimer
 10. Réponses

  1. வணக்கம்!

   திண்டுக்கல் செல்வாிவர்! கண்டுச்சொல் தான்கொடுப்பார்
   கொண்டுசெல் இன்பம் குவித்து!

   Supprimer
 11. வணக்கம் ஐயா!

  தேடித் தருகின்றீர் தெள்ளமுதத் தேன்பாகாய்
  ஓடிவந்து பெற்றுநாம் உய்வோமே! - நாடியுமைக்
  கோடியாய்ச் சீர்கள் கொடுத்துள்ளாள் பைந்தமிழாள்!
  கூடியே கொள்வோம் குவிந்து!

  குறட்பாவின் வேந்தே! குவித்தேன்கை! உன்போற்
  பிறக்கவில்லை யாருமே பின்பு! - பறந்தே
  உறக்கமின்றி ஆற்றுகின்ற உன்பணி யாற்றான்
  சிறக்கிறது செந்தமிழும் சேர்ந்து!

  அருமையான குறட்பாக்கள் ஐயா!
  உடல்நலக் குன்றல் ஓடிவந்து கருத்திடத் தாமதமாகினேன்!..
  இத்தனைபேர் கூறிய அதே கூற்றுத்தான் என்னிடமும்!..
  மிகச் சிறப்பு! உங்களாற்தான் தமிழன்னை உயர்வு காண்கின்றாள்!.

  உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தன்னை அளித்துத் தமிழ்காக்கும் விண்மதியே!
   என்னை நிகா்த்த எழில்பெறுக! - அன்னையின்
   பொற்கருணை பூத்துப் பொலியட்டும்! உம்முடைய
   நற்பெருமை ஓங்கட்டும் நன்கு!

   Supprimer
 12. காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.ரசித்தோம் ஐயா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காதல் கவிவெள்ளம் கற்பனையில் பாய்ந்தெனக்குள்
   மோதும் தமிழை மொழிந்து!

   Supprimer
 13. கன்னிமொழி மீதுகாதல் கொண்டீரோ களிப்போடு
  குன்றா விளக்கே நீர்!
  இன்பத் தமிழதனை அள்ளி இறைக்கின்றீர்
  எண்ணி மகிழவே நாம்!
  வண்ணம் குறையாமல் வெல்லம்போல் வடிக்கின்றீர்
  நன்மை பயக்கும் உலகு!

  அத்தனையும் தேன்சுவையே உண்டு களித்தேன் உவந்து!

  கூடி வருகுதென்று கொண்டாடி மகிழ்வேனோ
  வேடிக்கை என்றெண்ணி விளையாடிப் பார்ப்பேனோ
  ஆடி வருகுதென்று அல்லல் படுவேனோ
  ஓடியொழி வேனோ பயந்து!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஓடி ஒளியாமல் ஒண்டமிழை எந்நாளும்
   பாடிக் களித்துப் பறந்திடுக! - கோடிமலர்
   கொட்டி வரவேற்பேன்! கோலமிகு சந்தங்கள்
   சுட்டி உரஞ்சேர்ப்பேன் சூழ்ந்து!

   Supprimer
 14. தேடியிங்கே வந்தேனே தேனமுதப் பாவடிவைத்
  நாடிப் பருகிடவே நன்று.
  அழகான பாக்கள் . ஆணியடித்தார் போன்று அமர்ந்தது மனதில்

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம்!

   செந்தேன் குறள்வடித்த தென்றலே! இன்னன்றி
   தந்தேன் உளமே தழைத்து!

   Supprimer
 15. மனதை வருடுவதைப் போல் உள்ளது. அருமையான கவிதை. நன்றி.

  RépondreSupprimer
 16. ஐயா வணக்கம்,பத்துக்குறளும் முத்தாகத்தந்தீர்.

  RépondreSupprimer
 17. தயக்கத்தினைத் துறக்க வேண்டுகோள் விடுக்கும் கவிதையை ரசித்தேன்.

  RépondreSupprimer
 18. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer