samedi 27 septembre 2014

மணமக்கள் வாழ்க! வாழ்க!!




மணமக்கள் வாழ்க! வாழ்க!!

எழிற்சார நாயகி இன்பால கந்தன்
பொழிலாக வாழ்வைப் புனைக! - மொழியழகு
மின்னும் வியன்தமிழாய் இன்பத்தை மீட்டுக!
என்றும் உயிர்கள் இணைந்து!

எந்நாளும் புகழாளும் தலைவர்! எங்கள்
     எம்.சி.ஆர் நெறிபோற்றும் பத்ம நாபர்
அந்நாளும் இந்நாளும் காக்கும் மாண்பை
     அகங்கொண்ட பூங்குழலி இணையர் பெற்ற
செந்நாவு தமிழ்மறவன் பால கந்தன்
     சீர்சார நாயகியின் இதயம் சேர்ந்தார்!
வந்தாளும் செல்வங்கள் யாவும் ஏற்றுத்
     தந்ததன தமிழாக வாழ்க! வாழ்க!!

அடுக்குமொழி யழகர்!நல் லன்பின் செல்வர்!
     அழகுதமிழ்க் கோபால கிருஷ்ணர்! மேன்மை
தொடுக்குமொழி யரசி!நற் சாந்த செல்வி!
     தூயமனக் கலைவாணி இணையர் பெற்ற
மிடுக்குவிழி பேசுகின்ற ஆடல் நங்கை
     வியன்சார நாயகியைப் பால கந்தன்
கொடுக்கும்கைப் பற்றிவாழ்க! கிளிகள் கொஞ்சும்
     கோலமெலாம் குளிர்ந்தேற்று வாழ்க! வாழ்க!!

கற்கண்டு மலைகாண்க! காதல் பொங்கும்
     கலைகண்டு மனம்மகிழ்க! தமிழ்த்தாய் ஓங்க
நற்றொண்டு தினம்செய்க! முன்னோர் வாழ்ந்த
     நயங்கண்டு நலம்பெறுக! இனிக்கும் இன்பச்
சொற்கொண்டு நடம்புரிக! விழிகள் தம்முள்
     சுடர்கொண்டு வழியுணர்க! விழிகள் தம்முள்
விற்கொண்டு எழில்காக்கும் விந்தைச் சார
     நாயகி,நம் பாலகந்தன் வாழ்க! வாழ்க!!

சொல்லாண்டு புகழ்பெற்ற கம்பன் போன்று
     சுவையாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
நல்லாண்டு தந்திட்ட குறளார் போன்று
     நலமாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
வில்லாண்டு நமைக்காக்கும் இராமன் சீர்கள்
     விளைத்தாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
பல்லாண்டு பல்லாண்டு பாக்கள் பாடிப்
     பாரதிநான் வாழ்த்துகிறேன் வாழ்க! வாழ்க!!

06.09.2014
                  

7 commentaires:

  1. மிகவும் அருமையான வாழ்த்துப்பா ஐயா....

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    சொல்லாட்சி கண்டுள்ளம் சொக்கிப் போனேன்!
    சுவையாட்சி என்னவென்று சொல்வேன் இங்கு!
    வில்லாட்சி கொண்டேகோல் ஓச்சும் வேந்தன்!
    நிறையாட்சி நம்மொழிக்”கோ” நீதான் என்பேன்!
    நல்லாட்சி போற்றுகின்றீர் நல்லோர் முன்னே!
    பண்ணாட்சி செய்யழகு சந்தம் என்பேன்!
    மண்ணாட்சி காண்பீர்நம் மனதில் நின்றே!
    பல்லாண்டு வாழ்கவென வாழ்த்து கின்றேன்!

    ஐயா!..
    இல்லற பந்தத்தில் இணைந்த இணையர்களுக்கு
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    உங்கள் வாழ்த்துப் பாமாலை அற்புதம் ஐயா!
    உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சொற்பதங்களைச்
    சொல்ல வார்த்தை இல்லை! அற்புதம்!

    ஒரு வாழ்த்துப் பாவினை எப்படி எழுத வேண்டுமென
    இங்கு காண்கிறேன்... கற்கின்றேன்!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. வணக்கம் கவிஞரையா!

    அழகிய வாழ்த்துப் பாமாலை!
    இல்லத்தில் சேர்ந்த இணையருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!

    நன்றி ஐயா!

    RépondreSupprimer
  4. சிறந்த வாழ்த்துப் பா
    மறக்காமல் நாமும்
    சீரும் சிறப்பும் பெற்று வாழ
    வாழ்த்துகிறோம்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    RépondreSupprimer
  5. மிக அருமையான வாழ்த்துப்பா! எங்களது வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer

  6. உள்ளங்கள் ஒட்டி உவந்தன! செந்தமிழை
    அள்ளி அளித்து மகிழ்ந்தன! - கிள்ளை
    மணமக்கள் வாழ்க! மனையறம் வாழ்க!
    குணமக்கள் போன்றே குளிர்ந்து

    RépondreSupprimer