mardi 16 septembre 2014

புத்துலகு - பகுதி 3





புத்துலகைப் படைத்திடுவோம்

முடிப்பு கவிதை

கீதை கொடுத்தான் மலர்மகளின்
        கேள்வன் பார்த்த சாரதியே!
சீதை மன்னன் எழில்ராமன்
        சிந்தை யாண்ட அன்புதனை
மேதை கம்பன் கொடுத்தனனே!
        மேன்மை கொடுக்கும் உயரன்பாம்
பாதை கொடுத்தார் இங்கினிய
        பாரீச் பார்த்த சாரதியார்!

புத்தன் யேசு காந்திமகான்
        பொழிந்த அன்பு நெறியினிலே
சித்தம் களித்து வாழ்ந்திட்டால்
        சிறக்கும் இனிய புத்துலகு!
முத்தம் சிந்தும் மழலையிடம்
        முள்ளைக் கொடுத்து மகிழ்வாரோ?
அத்தா் படைத்த கவியாவும்
        அன்பின் ஆழம் காட்டியதே!

பூக்கள் பறிக்கக் கொடும்வாளா?
        புனிதர் நெஞ்சுள் மதவெறியா?
பாக்கள் தொடுத்துக் கேள்விகளைப்
        படைத்த பார்த்த சாரதியார்!
ஈக்கள் போன்று நாங்களெலாம்
        இனிக்கும் இவர்தம்  பாட்டின்மேல்
நோக்கம் கொண்டு அமர்ந்திட்டோம்!
        நுகர்ந்து தேனைக் குடித்திட்டோம்!

கம்பன் காட்டும் சீர்ராமன்
        கைகள் பாய்ச்சும் அம்பெனவே
நம்முன் இந்தச் செயராமர்
        நல்ல கவிதை அம்பெய்தார்!
நம்மின் நெஞ்சைத் தாக்கியது!
        நாட்டின் நிலையைக் காட்டியது!
அம்மா! எங்கள் தமிழ்வாணி
        அருள்வாய்! அருள்வாய்! ஒற்றுமையே!

ஆணும் பெண்ணும் என்றுலகில்
        அமைந்த சாதி இரண்டாகும்!
வேணும் என்றே கொடியவர்கள்
        விளைத்த சாதி பலவாகும்!
ஏனோ உறக்கம் தமிழர்களே?
        இன்றே எழுவீர் படைதிரண்டு!
வீணோர் படைத்த சாதிகளை
        விரட்டி அடிப்பீர் இங்குயர்ந்து!

புனிதம் உலகில் மறைந்ததுவே!
        பொய்யே எங்கும் நிறைந்ததுவே!
மனிதம் மாண்டு போனதுவே!
        மகுடம் மிருகம் பெற்றதுவே!
கணிதம் போட்டு வாழ்வுதனைக்
        காட்டிச் சென்றார் திருமதியார்!
இனியும் மாந்தர் பொதுநிலையை
        ஏற்க மறந்தால் அழிவாரே!

காதல் மழையைப் பொழிந்திட்டார் 
        களித்து நாமும் நனைந்திட்டோம்!
காதல் காதல் காதலெனஇ
        காதல் போயின் சாதலெனஇ
வேதம் படைத்தான் பாரதியே!
        வியக்கம் அவன்தன் சிந்தனையை
ஓதும் நாளே புத்துலகாம்!
        உணர்வீர் என்றன் தமிழர்களே!

என்னைப் பாட வைத்ததுவே
        இங்குப் புதுமை  என்றாயே!
கண்ணைக் காக்கும் இமைபோலக்
        கன்னல் தமிழைக் காத்தனையே!
என்னைப் பொறுத்த வரையினிலே
        இன்பத் திருநாள் இந்நாளே!
பொன்னை நிகர்த்த அலன்நண்பா!
        பொழிந்தேன் நன்றி ஏற்றருளே!

புதிய உலகைப் படைத்திடவே
        பொங்கி எழுக என்தோழா!
விதியை நம்பி வீழாமல்
        விரைந்தே எழுக என்தோழா!
வதியும் மக்கள் வாழ்வோங்க
        வளத்தை இடுக என்தோழா!
பதியும் வண்ணம் அப்பாவு
        பாக்கள் படைத்தார் வாழியவே!

இன்று இருப்பார் நாளையிலை!
        என்று பகர்ந்த இந்திரனே!
நின்று கொடுமை செய்பவர்கள்
        நிலத்தில் அழிவார் என்றனையே!
வென்று வாழ்வில் இனிமையுற
        விதைப்பீர் அன்பின் விதைகளையே!
நன்றாய்க் கவிதை படைத்தவுயர்
        நண்பா! நன்றி ஏற்பாயே!

மலரும் கவிதை யரங்குதனை
        மகிழும் வண்ணம் அமைத்தவரும்
பொலியும் வண்ணம் கவிதீட்டிப்
        புதிய உலகைப் படைத்தவரும்
குளிரும் இந்த மாலையிலே
        கொஞ்சும் தமிழைச் சுவைத்தவரும்
குலவும் என்றன் நன்றியினைக்
        கொடுத்து நிறைவு செய்கின்றேன்!

(01-12-2002 அன்று சேர்சி-பொந்துவாசு  பிரஞ்சு-இந்தியச் சங்கம் நடத்திய விழாவில் பாடியவை)

10 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    புத்துலகிற் பூத்திட்ட பொன்மலர் நீரன்றோ
    இத்தரை வாழ்வு இனிக்கவே! - சத்தெனச்
    சாற்றினீர் நன்நெறி! தந்தகவி தேன்சுவை!
    போற்றியே காண்போம் புகழ்!

    புத்துலகு காணப் படைத்த கவிகள் அற்புதம்!
    உயர்ந்த கருத்துக்கள்! உளமதிற் சேர்த்திட உயர்வே!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

    இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

    வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

    RépondreSupprimer
  3. வந்தெனக்கு வாழ்த்துரைத்த
    பொன்மனமும் வாழ்க நன்று..
    வளர்தமிழில் வார்த்தெடுக்கும்
    நன்மனமும் பொலிக நின்று!..

    RépondreSupprimer
  4. வணக்கம் கவிஞரையா!

    கத்துங் கடலென ஆர்ப்பரித்துப்
    புத்துலகு படைக்கப் புறப்பட்ட வீரரே நீங்கள்!

    மிக ஆழமான அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer

  5. முடிப்பு கவிதையை மூன்றுமுறை நன்றே
    படித்துத் படித்து மகிழ்ந்தேன்! - குடிக்கின்ற
    தேன்போல் இனிமை! செழுந்தமிழின் சீா்மையோ
    வான்போல் விாியும் வளா்ந்து!

    RépondreSupprimer
  6. புத்துலகை பாடுகின்ற முத்துக் கவியெல்லாம்
    வித்தாகி வேர்கொள்ளும் இத்தரையின் - எத்திக்கும்
    இன்பம் விளைவிக்கும் இன்னமுது ஊட்டிவிடும்
    துன்பம் அகற்றும் துணை !

    அழகான வரிகள் அர்த்தமுள்ள பாக்கள்
    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் !
    தங்களுக்கு ஒரு மின்னஞ்சல்
    அனுப்பி உள்ளேன் தயைகூர்ந்து பார்க்கவும்
    தம 8

    RépondreSupprimer
  7. புத்தன் யேசு காந்திமகான்
    பொழிந்த அன்பு நெறியினிலே
    சித்தம் களித்து வாழ்ந்திட்டால்
    சிறக்கும் இனிய புத்துலகு!
    முத்தம் சிந்தும் மழலையிடம்
    முள்ளைக் கொடுத்து மகிழ்வாரோ?
    அத்தா் படைத்த கவியாவும்
    அன்பின் ஆழம் காட்டியதே!

    அருமை. அருமை...... உங்களுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தையே இல்லாததால்
    நான் உங்களின் பதிவுகளைப் படித்தவிட்டு எதையுமே எழுதாமல் சென்று விடுகிறேன்.

    இதற்கு என்ன செய்யலாம் கவிஞர்?

    RépondreSupprimer
  8. பொன்னின் குடமே வீணாக-எதற்கு
    பொட்டு வைத்தல் தானாக
    என்னுள் வாழும் தாசரே- நாங்கள்
    என்றும் உங்கள் நேசரே!

    குறிப்பு-- மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்! காண்க!

    RépondreSupprimer
  9. சிறந்த படைப்பு
    வாழ்த்துகள்.

    RépondreSupprimer