vendredi 8 novembre 2013

இயலாமை ஓடாதா?




இயலாமை ஓடாதா

சாதிகளை ஒழித்திடவே முடியாதா? தீய
     சண்டைகளை நிறுத்திடவே இயலாதா? இங்கு
நீதிகளை நிலைநாட்டல் நடவாதா? நல்ல
     நெறிகளையே வளர்த்திடல்கை கூடாதா? என்றும்
வாதிகளாய் நின்றதினிப் போதாதா? வாழ்வில்
     வடலூரார் தூயநெறி சேராதா? இன்பம்
மோதிவிளை யாடவழி தோன்றாதா? நாடு
     முன்னேற இயலாமை ஓடாதா தோழா?

தீயிடுவோம்

சாதிவிளை யாடுகின்ற மூடர் நெஞ்சைத்
     தகர்த்தெறிய நெருப்பிடுவோம்! கையுட் டாலே
நீதிவிளை யாடுகின்ற வழக்கு மன்றில்
     நேர்மையிலாச் செயல்புரியும் தீயோர் தம்மை
ஊதிவிளை யாடுகின்ற பந்தைப் போன்றே
     உதைதிங்கு வெடித்திடுவோம்! பொய்மைப் பேசி
மோதிவிளை யாடுகின்ற அரசை யெல்லாம்
     மூட்டைகட்டித் தீயிடுவோம் சம்ப லாகும்!

1996

12 commentaires:

  1. வடலூர் வள்ளலார் சொல்லிச்சென்ற நெறிப்படி நடந்தால் இந்த இன்னல்கள் ஏன் ?
    சரியான கேள்வியும் பதிலும். அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டும். நன்மை பிறக்கும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சாதி சமயங்கள் நீதியைக் கொன்றுவக்கும்!
      ஓதிய பாட்டை உணா்த்து!

      Supprimer
  2. சாதியைக் கொன்றிங்கு சாய்த்திடு வீரென
    நீதியை நல்கிய நேரியர்! - ஜோதியாம்
    வள்ளலார் கூற்றை வரைந்த கவியினில்
    உள்ளம் நிறைத்தீர் உவந்து!

    வணக்கம் ஐயா!

    அழகிய எண்சீர் விருத்தமதில் கூறிய கருத்து மிக அருமை!

    என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சாதிகள் ஏனோ? தமிழா தெளிவுற
      ஓது திருக்குறளை ஓா்ந்து!

      Supprimer
  3. என்ன சொல்லி என்ன பயன்! மாறுவதில்லை!
    எம்மவரைச் சாதிஎனும் பேய்தான் முற்றும்
    தன்னவராய் ஆக்கிவிட்ட சதியைக் கண்டால்
    தலையில் அடித்தன்றோ நாம் சாகவேண்டும்!
    என்ன கல்வி, என்ன செல்வம்! எல்லாம் பாழே!
    இரண்டு மனம் இணைவதையும் தடுத்தே நிற்பார்!
    இன்னவரே நாளை இந்த மண்ணை ஆள
    இருக்கின்றார் என்றால் யாம் என்ன செய்வோம்?

    - (மீண்டும் மீண்டும் இதையே எழுதவேண்டி இருக்கிறது. 1996 இல் அன்றோ இதை எழுதினீர்கள்!)
    -- கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தன்னலம் ஏற்றும் தலைவெறிச் சாதியால்
      பொன்னலம் போகும் புதைந்து

      Supprimer
  4. அன்று எழுதியது என்றாலும் இன்றும் பொருந்தும்! இந்நிலை மாறுமா ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாற்றிட வேண்டும் மனிதா்களை! நம்கவியைப்
      போற்றிட வேண்டும் புவி!

      Supprimer
  5. இனிய பாக்கள் - இவை
    இன்றைய ஆக்களின் செயலை
    அன்றே எழுதினாலும்
    உண்மைகள் மறையவில்லை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொய்யோ எனப்புழுத்துப் போடுவான் ஆட்டங்கள்
      அய்யோ அவனை அகற்று!

      Supprimer

  6. சாதி விளையாடும் மண்தான் தழைத்திடுமோ?
    மோதி விளையாடும் மூடா்களே! - நீதியைக்
    கொன்று விளையாடும் கொள்கையேன்? நன்னெறிகள்
    என்று விளையாடும் இங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லாரும் கல்வியை ஏற்றிடும் காலத்தில்
      பொல்லா வினைகள் புதைந்தொழியும்! - நல்லார்
      உரைத்த நெறியை உலகேற்றால் நீங்கும்
      குரைத்த கொடுமை குலைந்து!

      Supprimer