samedi 23 novembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

செம்பால் தமிழைத் தினம்பருகித்
     திண்தோள் மறவன் பாரதியும்
கம்பால் தரையைத் தாம்குற்றிக்
     கதைத்த பாட்டின் தலைப்பிட்டும்
அம்..மால் தங்கை படம்போட்டும்
     அழகாய்க் கவிதை படைத்துள்ள
அம்பாள் உனக்கே பயம்என்றால்
     அடியேன் நிலையை என்னென்பேன்?

24.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

தேவன் பிறந்த திருநாளில்
     தேன்போல் இனிமை திரளட்டும்!
சீவன் ஞானத் திருவொளியின்
     சீரை எண்ணித் சிறக்கட்டும்!
காவின் மணமாய் இவ்வுலகு
     கமழ்ந்து கனிந்து களிக்கட்டும்!
பாவின் செல்வன் பாரதிநான்
     பணிந்து படைத்தேன் வாழ்த்துக்கள்!

25.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

எண்ணுாறு ஆக்கம் படைத்திங்கே
     இனிய தமிழுக் கணிசெய்தீா்!
பெண்ணுாறு அழகின் பேற்றுகளைப்
     பெற்று மணக்கும் உன்கவிகள்!
மண்ணுாறு ஆண்டு செய்தவத்தால்
     மங்கை வேதா பிறந்தாரோ!
பண்ணுாறு ஆக்கப் பாரதிநான்
     படித்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்!

25.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முத்துச் சிதறல் மூளையினை
     முழுதும் பறித்துக் கொண்டதுவே!
சத்து மிக்க கிழங்குணவு!
     தண்ணீா்.. கண்ணீா்.. சிறுகவிதை
பித்து கொடுத்து என்னெஞ்சைப்
     பிரட்டிப் போடும்! மகிழ்ந்துனக்குக்
கொத்து மலா்கள் தருகின்றேன்
     கோலத் தமிழைத் தொடருகவே!

25.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

படமும் படா்தமிழ்ப் பாட்டும் படைத்தால்
சுடரும் இனிமை சுரந்து! - தொடருகிறேன்
உன்றன் வலையை! உயா்தமிழ் ஆசையால்
என்றன் கவியை இசைத்து!

26.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியா் அவா்களுக்கு வணக்கம்!
கவிதை மடல் பெற்றேன்!
சீர்முடிவில் கனிகள் சேராவிடினும்
சீர்கள் எல்லாம் இனித்தனவே!
இவ்வடிகளை மிகவும் சுவைத்தேன்!

காயே முற்றிக் கனியாகும்!
           
கவிதைச் சோலைத் தண்ணிழலில்
பாயே போட்டுப் படுத்தாலும்
           
பரவும் இனிய குயிலோசை!
வாயே தேனில் ஊறியதாய்
           
வண்ணச் சொற்கள் சுவைகொடுக்கும்!
தாயே! தமிழே! உன்கருணை!
           
தகரம் தங்கம் ஆனதுவோ?

26.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வெண்பா விளைத்து வியப்பிலெனை ஆழ்த்திய
நண்பா! வணக்கம் நவில்கின்றேன்! - தண்டமிழில்
பொன்பா புனையும் புலவன்என் வாழ்த்துக்கள்!
உன்பா தொடா்க உயா்ந்து!

எதுகை இனித்தால்!நன் மோனை ஒலித்தால்
மதுவை வடிக்கும் வரிகள்! - புதுவைநகா்
போற்றும் புலவன் புகன்ற நெறியுணா்ந்தால்
ஈற்றும் இனிக்கும் இணைந்து!

எழுதிய பின்னே எழுந்துளசீா் ஆய்ந்தே
அழுகிய சீரை அகற்று! - பழமாய்
இனிமையைக் காண்பாய்! எழுத்துலகம் ஏத்தும்
தனிமையைக் காண்பாய் தழைத்து!

28.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

8 commentaires:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அவரவர் வலைத்தளத்தையும் குறிப்பிட்டால் பலரும் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  2. வலையுலக நண்பருக்கு வார்த்த கவிகள்
    அலையென ஆர்த்த அழகு!

    அத்தனையும் அருமை!
    உங்கள் கவி வாழ்த்துங் கருத்தும்
    கிடைக்கப் பெற்றவர்கள் பேருவகை கொள்வார்கள்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா
    தமிழ்ச்சுவையுடன் கூடிய கவிப்பூக்கள் மனதை கவர்ந்தது....அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. என்ன சொல்வது நான்.

    விதவிதமான கவிதைப் படைப்புகள். அற்புதம்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. ஆஹா...
    அனைத்தையும் ரசித்தேன் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer

  6. வகைவகையாய் இங்கு வடித்தபுகழ் யாப்பு
    தொகைதொகையாய்ச் சூடும் சுவையை! - நகைநகையாய்
    மின்னும் கடைபோல் வியப்பூட்டும் உன்வலைதான்
    மின்னும் கவிதை விளைத்து.

    RépondreSupprimer
  7. வணக்கம் !
    வலைப் பூக்களில் தங்கள் கவிப் பூக்களின்
    தொகுப்பு மனத்தைக் கவர்ந்தது .வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer