dimanche 7 août 2022

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

வெண்பா மேடை - 222

 

ஆற்றுநீர்ப் பொருள்கோள் அமைந்த வெண்பா

 

மொழிமாற்று முதலிய பொருள்கோள் போலப் பிறழ்ந்து செல்லாமல், யாற்றுநீர் ஒழுக்குப்போல நெறிப்பட்டு முதல் சீரிலிருந்து ஈற்றுச்சீர்வரை சொற்கள் முன் பின் மாறாமல் நேராகச் சென்று  பொருள் தருவதும், அடிதோறும் பொருள் அற்று அற்று ஒழுகுவதும் யாற்றுநீர்ப் பொருள்கோளாம்.

சொல்அருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநுால்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

 

சீவகசிந்தாமணி - 53

 

இப்பாடலுள், சொல் என்னும் எழுவாயினை முதலில் எடுத்து, அதன் தொழிலாகிய வினையெச்சங்கள் 'ஈன்று', 'தலைநிறுவி', 'இறைஞ்சி', என்பன ஒன்றனை ஒன்று கொள்ளுமாறு இடையில் நிறுவி இறுதியில் 'காய்த்த' என்னும் பயனிலை தந்து முடிந்தவாறு காண்க [நன்னுால் சங்கர நமசிவாயர் உரை 412]

 

பாடலின் கருத்து

 

நெல்லானவை, பச்சைப் பாம்பின் தோற்றம்போல் முதலில் தோன்றிப் பண்பற்றார் செல்வமேபோல் தலையை நேரே நிறுத்திக் கல்விசேர் மாந்தரைப்போல் மிகவும் வளைந்து விளைந்தன.

 

கண்ணன் எழிற்காட்டிக் கன்னல் கவிதீட்டி

எண்ண மயங்க இசைமீட்டி - வண்ண

மலர்கொண்டு சூட்டி மகிழ்வீட்டிக் காதல்

கலங்கொண்டு காணாக் கரை!

 

[பாட்டரசர்] 

 

எழிற்காட்டி, கவிதீட்டி, இசைமீட்டி, மலர்சூட்டி, மகிழ்வீட்டிக் காதலானது காணமுடியாத கரையாகும் எனத் தொடக்க முதல் இறுதிவரை நேராக, மடங்காது ஒரு முகமாகவே பொருள்கொள்ளப் பாடல் அமைந்தது.

 

மேற்கண்ட ஆற்றுநீர்ப பொருள்கோள் அமைந்த வெண்பா ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்  

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் 

07.08.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire