lundi 1 août 2022

கம்பன் புகழ்

 

கம்பன் புகழ்

தாளம்: நான்மையின ஏகம்

நடை : நான்மை

 

தமிழ்வந்து மனஞ்சேர்ந்து

தாளம் போடுது00

அமுதென்று கவியுள்ளம்

அருந்தி யாடுது000

 

கவி.கம்பன் புகழ்பாடும்

கழகம் வாழ்கவே00

புவியெங்கும் பூந்தமிழின்

பொதுமை சூழ்கவே00

 

ஒளியூட்டும் தமிழ்ப்பாட்டை

உலகம் கேட்குது00

களியூட்டும் அருங்கம்பன்  

கருத்தை ஏற்குது00

 

என்றுமுள தெந்தமிழை

இதயம் பதிப்போம்00

இன்றுவரை தமிழ்வளர்த்த

இடத்தைத் துதிப்போம்00

 

பேரழகு திருராமன்

பெருமை பாடுவோம்00

தாரழகு தமிழேந்திச்

தாவி யாடுவோம்00

 

மானழகு சீதையினை

வணங்கிப் போற்றுவோம்00

தேனழகு தமிழோங்கச்

செயல்கள் ஆற்றுவோம்00

 

அண்ணனிடம் தம்பிகொண்ட

அன்பை யெண்ணுவோம்00

வண்ணமுடன் தமிழ்நெறியில்

வாழ்வைப் பின்னுவோம்00

 

மன்னனுயிர் மக்களென

வாழ்ந்து காட்டினார்00

தன்னிகரே இலையென்று

தமிழைச் சூட்டினார்00

 

படகோட்டும் வன்குகனின்

பாதம் தொழுகிறேன்00

இடரோட்டும் தமிழாலே

என்னை உழுகிறேன்00

 

காலடியைத் தலைசூடிக்

காத்தான் பரதனே00

மேலுலகில் இணையில்லை

வீரன் ஒருவனே00

 

பின்தொடர்ந்து பணிசெய்து

பேறு பெற்றவன்00

பொன்படர்ந்து மனமின்னப்

புகழை யுற்றவள்00

 

வாலுடைய சுக்கிரீவன்

வந்து வணங்கினான்00

மாலுடைய நல்லணியர்

வாழ்த்த இயங்கினான்00

 

ஈழதேச வீடணனை

ஏற்றே அருளினான்00

ஆழமாகச் சிந்தனையில்

அறத்தைச் சொருகினான்00

 

கையழகு காலழகு

காட்டும் விருத்தங்கள்00

மையழகு மேனியனை

மனத்துள் பொறுத்துங்கள்00

 

துகள்பட்டே பெண்ணெழுகை

துாய திருத்தாளே00

அகமுற்றே ஒளிமின்னும்

அருளின் திருநாளே00

 

வாலியெனும் பெரும்வீரன்

வாழ்வை யிழந்ததேன்00

கேலியுறும் செயல்புரிந்து

கீழே விழுந்ததேன்00

 

கலைவல்லி சூர்ப்பணகை

கண்கள் கவிபேசும்00

மலைநெல்லிக் கனியள்ளி

வாரித் தினம்வீசும்00

 

உறவுக்கே உயிர்தந்தே

உயர்ந்தான் கும்பனே00

சிறப்புக்கே சீர்தந்தே

செழித்தான் கம்பனே00

 

வேரடர்ந்து படர்ந்தாலே

விளைச்சல் வளருமே00

போரகன்று நின்றாலே

புகழ்தான் மலருமே00

 

தலைபத்துக் கொண்டிருந்த

தலைவன் வரவேண்டும்00

கொலையெட்டுத் திசைநீக்கிக்

கோலந் தரவேண்டும்00

 

இவ்வுலகின் பேரரசன்

எங்கள் இராவணனே00

எவ்வுலகும் இணையில்லை

ஏத்துத் தமிழினமே00

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

30.07.2022

1 commentaire:

  1. மிகவும் ரசித்து படித்தேன் - கில்லர்ஜி

    RépondreSupprimer