vendredi 12 août 2022

கம்பன் விழா - 2022

 


சுவிற்சர்லாந்து  கம்பன் விழா

30.07.2022

 

திருமால் வணக்கம்

 

நீரோங்குங் கடன்மேலே சீரோங்குந் திருமாலே
        நிறையோங்குந் தமிழள்ளித் தருவாய்!

நிலையோங்கும் அணிசூடக் கலையோங்கும் அடிபாட

        நெடுமாலே என்னாவில் வருவாய்!

 

வேரோங்கும் மரமாகப் பேரோங்கும் வரமாக

        விரிந்தோங்கும் கருவள்ளி இடுவாய்!

வியனோங்கும் வண்ணங்கள் செயலோங்கும் எண்ணங்கள்

        விளைந்தோங்க ஒருபார்வை விடுவாய்!

 

போரோங்கும் படையாகப் பாரோங்கும் நடையாகப்

        பயனோங்கும் நெறியூட்டி எழுவாய்!

பெண்ணோங்கும் வழிதீட்டிப் பண்ணோங்கும் மொழிதீட்டிப்

        பெருமாளே என்னெஞ்சை உழுவாய்!

 

காரோங்கும் விண்ணாக ஏரோங்கும் மண்ணாகக்

        கவியோங்கும் தமிழ்மாலை அணிவாய்!

கண்ணோங்கும் அழகாகக் கனியோங்கும் சுவையாகக்

        கண்ணா..நீ இங்கென்னை இணைவாய்!

 

தமிழ் வணக்கம்

 

அணிபூத்த தமிழே..நற் பனிபூத்த கவிபாட

        அருள்பூத்த சொலேந்திச் சூடு!

அகம்பூத்த தமிழே..உன் முகம்பூத்த எழில்காட்டி

        அறம்பூத்த அடியேந்தி ஆடு!

 

பணிபூத்த தமிழே..உன் நனிபூத்த சுவையேந்திப்

        பண்பூத்த இசையேந்திப் பாடு!

பார்பூத்த புகழாகத் தேர்பூத்த எழிலாக

        பனைபூத்த வளமேந்திக்  கூடு!

 

மணிபூத்த ஒலியாக முனிபூத்த கணையாக

        மதிபூத்த தமிழே..பூக் காடு!

மரைபூத்த அழகாக இறைபூத்த தமிழே..உன்

        மனம்பூத்த சந்தங்கள் போடு!

 

மணம்பூத்த வனமாகத் தினம்பூத்த சீர்யாவும்

        மலைபூத்த அரணாகும் பீடு!

வான்பூத்த நிலவாக யான்பூத்த கவியாகும்

        மண்மீது தமிழுக்கே தீடு!

 

அவையோர் வணக்கம்

 

பூ..வாசத் தமிழ்நாடிப் புதுவாசக் கவிநாடிப்

        புறப்பட்டு வந்தோரே வணக்கம்!

பொன்வாச நெஞ்சத்துள் புகழ்வாசக் கம்பன்சீர்

        பொழுதெல்லாம் இன்பூட்டி மணக்கும்!

 

பா..வாசச் சான்றோரே! பழவாச ஆன்றோரே!

        பாவேந்தன் பகர்கின்றேன் வணக்கம்!

பனிவாசப் பொழுதாகப் படர்வாச அமுதாகப்

        பாய்ந்தோடி உள்ளத்தை யணைக்கும்!

 

கா..வாசக் குழல்கொண்டு கனிவாச நிழல்கொண்டு

        கமழ்கின்ற பெண்டீரே வணக்கம்!

கலைவாச என்பாட்டு! கடிவாச என்பாட்டு!

        கார்மேக மழையாக நனைக்கும்!

 

மா..வாசம் என்றெண்ணி மனவாசங் கொண்டிங்கு

        வந்துள்ள இளையோரே வணக்கம்!

மலைவாசக் காற்றாக மதிவாச வூற்றாக

        மரபேந்தி என்னாக்கம் இனிக்கும்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

30.07.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire