vendredi 12 août 2022

கம்பன் விழா - 2021

                          பிரான்சு கம்பன் விழாக் கவியரங்கம்

26.12.2021

 

கம்பனின் காப்பிய மாந்தரிடம் ஒரு கேள்வி

[தலைமைக் கவிதை]

 

திருமால் வணக்கம்!

வானுாறி மழையோங்கும்! தேனுாறி மலரோங்கும்!

வளமூறி அருளோங்கும் தேவா!

மலையூறித் திருவோங்கும்! கலையூறி மனமோங்கும்!

வாழ்வூறித் தமிழோங்கும் வா..வா!

 

கானுாறி மரமோங்கும்! ஊனுாறி உயிரோங்கும்!

கண்ணுாறி எழிலோங்கும் சேவா!

கனியூறிச் சுவையோங்கும்! பனியூறிக் குளிரோங்கும்!

கவியூறித் தமிழோங்கும் வா..வா!

 

கோனுாறிச் சீரோங்கும்! நோனுாறிப் பேரோங்கும்

குழலுாதி இசையோங்கும் வேதா!

கோலுாறிச் சொல்லோங்கும்! ஆலுாறிப் பல்லோங்கும்!

குணமூறித் தமிழோங்கும் வா..வா!

 

மீனுாறி மணமோங்கும்! நானுாறி மரபோங்கும்!

விழியூறி உருவோங்கும் கண்ணா!

விதியூறி வினையோங்கும்! நதியூறி நகரோங்கும்!

மதியூறித் தமிழோங்கும் வா..வா!

 

தமிழ் வணக்கம்

 

விதியென்ன செய்தாலும் வினையென்ன செய்தாலும்

விழியோடு வாழ்கின்ற அழகே!

வேலென்ன செய்தாலும் கோலென்ன செய்தாலும்

விரைவாகக் காக்கின்ற அருளே!

 

மதியென்ன செய்தாலும் நதியென்ன செய்தாலும்

மனமோடு சுடர்கின்ற அணியே!

மலையென்ன செய்தாலும் அலையென்ன செய்தாலும்

வாழ்வோடு படர்கின்ற அறமே!

 

பதியென்ன செய்தாலும் சதியென்ன செய்தாலும்

பகையோட்டி ஆள்கின்ற மறமே!

பழியென்ன செய்தாலும் வழியென்ன செய்தாலும்

பற்றுாட்டிச் சூழ்கின்ற அரணே!

 

கதியென்ன செய்தாலும் துதியென்ன செய்தாலும்

கலையூட்டி மிளிர்கின்ற இறையே!

கழிவென்ன செய்தாலும் இழிவென்ன செய்தாலும்

கவியூட்டி ஒளிர்கின்ற தமிழே!

 

அவை வணக்கம்

 

உயிராகும் தமிழன்றும் உறவாகும் கவியென்றும்
உவந்திங்கு வந்தோரே வணக்கம்!

உள்ளத்துள் என்பாட்டு வெல்லத்தின் சுவையாக

உள்ளுாறி எந்நாளும் மணக்கும்!

 

மயிலாடும் அழகாக மலராடும் வண்டாக

மனமாடக் வந்தோரே வணக்கம்!

வாயாடும் சந்தங்கள் தாயான சொந்தங்கள்!

மகிழ்வோடு நெஞ்சத்தை அணைக்கும்!

                         

குயிலாகக் குரலுற்றும் ஒயிலாக எழிலுற்றும் 

குணமோங்கும் மங்கையரே வணக்கம்!

குடித்தாட மதுவுண்டு! நடித்தாட அவையுண்டு!

குதித்தாட இசைவந்து பிணைக்கும்!

 

கயிறாடும் கொடியாகக் கனியாடும் செடியாகக்

கவியாட வந்தோரே வணக்கம்!

காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டுக்

கணக்கோடு தமிழோங்கப் படைக்கும்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

Aucun commentaire:

Enregistrer un commentaire