jeudi 4 août 2022

சித்திர கவி மேடை - 13

 


சித்திர கவி மேடை  - 13

[சொற்சித்திரம்] [மிறைப்பா]

 

ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]

[கட்டளைத் கலித்துறை - நேரிசை வெண்பா]

 

ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதுபோல் ஒரு செய்யுளுக்குள் மற்றுமொரு செய்யுள் இருப்பது ஒன்றில் ஒன்று என்னும் சொற்சித்திரமாம். இவ்வகையை மிறைப்பாவென முன்னோர் வழங்கினர்.

 

ஒரு பாடலில் இருந்து பகுத்து வந்த மற்றப் பாடலும் எதுகை, மோனை, தளை, புணர்ச்சி, பொருள், யாப்புநெறி யாவும் சிறப்புடன் இருக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் நேரிசை வெண்பா வந்துள்ளதைக் காண்க.

 

கட்டளைத் கலித்துறை

 

சின்ன முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற் கன்னமதில்

என்ன கலையோ?சீர் மின்னி மயக்கும் இறையழகோ?

மன்னர் மரபோ? இயக்குமென் பேரன் எழில்வளமே?

கன்னல் தமிழோ? கவிதை யமுதோ? களித்தனனே!

 

நேரிசை வெண்பா

 

சின்ன முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற்
கன்னமதில் என்ன கலையோ?சீர் - மின்னி

மயக்கும் இறையழகோ? மன்னர் மரபோ?

இயக்குமென் பேரன் எழில்!

 

கட்டளைத் துலித்துறை இலக்கணம்

 

ஐந்து சீர்களுடைய நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும்.

முதல் நான்கு சீர்கள் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.

ஐந்தாம் சீர் விளங்காயாக இருக்க வேண்டும். [கருவிளங்காய், கூவிளங்காய்]

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டு.

ஒன்று ஐந்தாம் சீர்களில் மோனை அமையவேண்டும்.

நேரசையால் தொடங்கும் பாடல் அடிதோறும் ஒற்று நீக்கி 16 எழுத்தும், நிரையசையால் தொடங்கும் பாடல் 17 எழுத்தும் கொண்டிருக்கும்.

ஒன்றில் ஒன்றை எளிதாக எழுதும் முறை

 கீழுள்ள படம் கட்டளைக் கலித்துறைக்கானது.

 நேர் வரிசையில் கட்டங்கள் இரண்டு இரண்டாக 5 உள்ளன. இவை கட்டளைக் கலித்துறையின்  ஓரடியில் வரும் ஐந்து சீர்களின் முதல் ஈரெழுத்துகள் வரும் இடமாகும்.

1 என்ற எண் இரண்டு இடங்களில் உள்ளது. அந்த ஈரிடத்திலும் ஓரே எழுத்து வர வேண்டும்.

2 என்ற எண் ஆறு இடங்களில் உள்ளது. அந்த ஆறிடங்களிலும் ஒரே எழுத்து வர வேண்டும்.

 இவ்வாறே மற்ற எண்களிலும் எழுத்து ஒன்றி வர வேண்டும்.

 மூன்றாம் அடியில் 6 ஆம் எண் ஈரிடத்தில் உள்ளது. அது வெண்பாவின் ஈற்றடியாகும்.  மூன்றாம் அடியின் ஈற்றுச்சீரை வெண்பாவின் நாள் மலர் வாய்பாடு அமையும் வண்ணம் அமைத்துப்  புளிமாச்சீரை இணைத்தால் கட்டளைக் கலித்துறையின் விளங்காய் வரும்.

முதலில் வெண்பாவின் ஈற்றடியை அமைக்க வேண்டும். பின் கட்டளைக் கலித்துறையை எழுத வேண்டும்

 இப்பாடலை நேரசையில் மட்டுமே தொடங்க வேண்டும். நிரையசையில் தொடங்கினால் வெண்பாவில் தளை தட்டும். 

 பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

04.08.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire