vendredi 12 août 2022

கம்பன் விழா - 2021

 


பிரான்சு கம்பன் விழாக் கவியரங்கம்

26.12.2021

 

கம்பன் புகழ்

1.

பொன்னாக ஒளிவீசும்

பூவாக மணம்வீசும்

இன்பாக மனமூறும் பாட்டு - கம்பன்

எழுத்தெல்லாம் மதுவூறும் கூட்டு!

 

2.

சந்தங்கள் முந்திவரும்

சந்தனமே ஏந்திவரும்

சொந்தமெனக் கவியுள்ளம் பாடும் - நாளும்

தந்ததன தாளங்கள் போடும்!

 

3.

கண்கொண்ட இமையாக,

மண்கொண்ட உரமாக,

பண்கொண்ட கவிகம்பன் ஏடு - அது

விண்கொண்ட திருமாலின் வீடு!

 

4.

முல்லைமலர்க் காடாக

முத்துமணிச் சரமாக

எல்லையிலா வானாகப் புலமை - கம்பன்

ஈந்ததமிழ் என்றுமெழில் இளமை!

 

5.

வில்லேற்று  நின்றவனைச்

சொல்லேற்றுச் சென்றவனைக்

கல்லேற்றுப் பெண்வந்த காதை - ஓர்

இல்லேற்று மண்தந்த பாதை!

 

6.

கார்மேனித் திருராமன்

போர்மேவி அருள்ராமன்

சீர்மேவிப் பாட்டுக்குள் வாழ்வான் - தமிழ்த்

தார்மேவி நம்நெஞ்சை ஆள்வான்!

 

7.

கால்வண்ணம் காட்டியவன்!

வால்வண்ணம் மூட்டியவன்!

மால்வண்ணம் தீட்டிநலந் தந்தான் - தமிழ்ப்

பால்வண்ணம் ஊட்டிவலம் வந்தான்!

 

8.

பகையின்றிச் சீர்வேண்டும்!

நகையின்றிப் பேர்வேண்டும்!

மிகையின்றி எழுத்தாளும் கம்பன் - பழி

வகையின்றி எனையாளும் அன்பன்!

 

9.

என்றுமுள தமிழாகும்!

இன்பமுள அமுதாகும்!

குன்றுநிகர் வன்மையினைக் கண்டு - செய்தான்

நன்றுபுகழ்த் தமிழோங்கத் தொண்டு!

 

10.

அன்பேந்தி வாழ்வோங்கும்!

அறமேந்திப் புகழோங்கும்!

பண்ணேந்தி இசையோங்கும் நன்றே - தமிழ்ப்

பண்பேந்திப் புவியோங்கும் இன்றே!


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

Aucun commentaire:

Enregistrer un commentaire