விருத்த மேடை - 71
கலிவிருத்தம் - 7
கருவிளம் + கருவிளம் +கருவிளம் + புளிமா
[கருவிளத்திற்குப் பதில் கூவிளம் அருகி வரலாம். புளிமாவிற்குப் பதில் தேமா அருகி வரலாம்]
வெருண்டனா் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்!
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்!
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்
சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்!
[கம்பர். சுந்தர. சம்புமாலி - 29]
கரிகொடு கரிகளைக் களப்படப் புடைத்தான்!
பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்!
வரிசிலை வயவரை வயவரின் மடித்தான்!
திரைமணித் தேர்களைத் தேர்களில் நெரித்தான்!
[கம்பர். சுந்தர. சம்புமாலி - 30]
கனிதரும் சுவையினைக் கவிதையில் தருவான்!
பனிதரும் குளிரினைப் பார்வையில் அருள்வான்!
சனிதரும் துயரினைச் சரித்திட வருவான்!
இனியவன் சுவையினை இயம்புதல் எளிதோ?
[பாட்டரசர்]
பொன்னவன் கவிதையைப் பொழுதெலாம் படிப்பேன்!
மன்னவன் மொழியினை மதுவெனக் குடிப்பேன்!
என்னவன் நினைவினில் இளைத்துடல் கிடப்பேன்!
தென்னவன் சிறப்பினை இயம்புதல் எளிதோ?
[பாட்டரசர்]
மேலுள்ள 'கரிகொடு' என்ற கலிவிருத்தத்தில் தேர்களை, தேர்களில் எனக் கூவிளச்சீர் அருகி வந்தது. 'பொன்னவன்' என்ற விருத்தத்தில் முதல் சீர் கூவிளமாக அமைந்தது.
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
கருவிளம் + கருவிளம் +கருவிளம் + புளிமா என்ற வாய்பாட்டில் அமைந்த கலிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.08.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire