jeudi 11 août 2022

சாற்றுகவி

 


முனைவர் ம. தமிழ்ச்செல்வி நுாலுக்குச்

சாற்றுகவி

 

அன்னைத் தமிழை யிறையாக

       அல்லும் பகலும் தொழுகின்ற

பொன்னை நிகர்த்த நெஞ்சுடைய

       பொழிலார் முனைவர் தமிழ்ச்செல்வி

தன்னை யுருக்கிக் கவிசெய்து

       தந்த திறனை வாழ்த்துகிறேன்!

முன்னைப் புலமை புகழேந்தி

       முகிழ்த்த இந்நுால் பரவுகவே!

 

மரபு கவிமேல் மிகுபற்று

       வளர்ந்தே ஓங்கும் மதியுடைய,

விரவும் அன்பாம் நதியுடைய,

       வெற்றி முனைவர் தமிழ்ச்செல்வி

இரவும் பகலும் ஏடெழுதும்

       ஏற்றங் கண்டு வாழ்த்துகிறேன்!

வரவு நல்கும் மகிழ்வாக

       வடித்த இந்நுால் பரவுகவே!

 

வாழ்சேர் பாடம் தெளிவுற்று  
       வல்ல முறையில் கவியாக்கும்  

தாழ்சேர் நிலையை மேடாக்கும்

       தகைசேர் முனைவர் தமிழ்ச்செல்வி

காழ்சேர் வண்ணச் சொல்லேந்திக்

       கருத்தில் கூர்மை வில்லேந்தி

யாழ்சேர் இனிமை தருகின்ற

       எழிலார் இந்நுால் பரவுகவே!

 

 கண்ணைக் கவரும் காட்சிகளைக்

       கன்னல் கலந்து கவிதீட்டி

மண்ணைக் கவரும் வண்டமிழில்

       மகிழும் முனைவர் தமிழ்ச்செல்வி

விண்ணைக் கவரும் சிந்தனையில்

       விழியைக் கவரும் கலையொளியில்

பெண்ணைக் கவரும் அழகியலில்

       பிணைந்த இந்நுால் பரவுகவே!

 

புதுவைப் புலவன் புனைந்திட்ட

       புதுமைப் பெண்போல் நடைகொண்டு

பொதுமை கமழும் மனங்கொண்டு

       பொலியும் முனைவர் தமிழ்ச்செல்வி

மதுவைச் சுரக்கும் மொழிகொண்டு

       மனத்தை மயக்கும் அணிகொண்டு

முதுமைப் புலவர் திறங்கொண்டு

       மொழிந்த இந்நுால் பரவுகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

                             11.08.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire