அகவல் அமுதம்
அகவல் அமுதை அள்ளி அளித்த
நகுலா நற்சிவ நாதன் உள்ளம்
தமிழின் இல்லம்! தண்மை வெல்லம்!
சிமிழின் அழகாய்த் திகழும் பொலிவு!
சிரித்த முகமும் செழித்த அகமும்
விரித்த பசுமை! விளைந்த இனிமை!
தேனின் அடையில் செய்த இந்நுால்
வானின் மழையாய் வளத்தை வழங்கும்!
என்றன் இடத்தில் யாப்பைக் கற்று
நன்றே பாடும் நகுலா வாழ்கவே!
முத்து முத்தாய் முகிழ்த்த பாக்கள்
கொத்துக் கொத்தாய்க் கொழித்த கனிகள்!
அகவல் பாட ஆசை கொண்டோர்
நகுலா நுாலை நன்றே கற்றால்
அடிகள் யாவும் படிகள் போடும்!
குடிகள் வாழுங் கொள்கை சூடும்!
அன்னைத் தமிழின் அருளால் பூத்துப்
பொன்னைப் போன்று பொலியும் இந்நுால்
கன்னல் தமிழின் கவிதைக் கோட்டை!
மின்னும் புகழை மீட்டும் நன்றே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
11.08.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire