தேர் ஓவியக் கவிதை 10
புலவர் இறைவிழியனார் புகழ் வாழியவே!
ஆசிரியப்பா
[செய்யுள் 130 எழுத்து - ஓவியம் 115]
நாவே பூவே திகழ்புகழ் நல்லார்!
பாவாய்ப் பாக்கள் வார்க்கும் புலவர்!
நம்சீர் காக்கவே முன்னே நின்றார்!
தம்பேர் பதியத் தமிழ்ப்பெயர் பூண்டார்!
நற்றமி ழிதழை யெழிலுற நல்கினார்!
கற்றோர் விரும்பும் வண்ணம் நிறைமதி
கனிந்துரு வித்தகர்! துாயநற் பனிபோ[ல்]
இனிய விறைவிழி யர்சீர் வாழ்கவே!
கருத்துரை:
புதுவைப் புலவர், நற்றமிழ் இதழாசிரியர் மு. இறைவிழியனார் அவர்கள் மணக்கின்ற நன்மொழி பேசுகின்ற புகழுடைய நல்லார். பாகாய் இனிக்கின்ற பாக்களைப் பாடும் புலமையுடையவர். தமிழினத்தின் சீரைக் காக்க முன்னின்று போராடினார். 'சாமிகண்ணு' என்ற தம்முடைய பெயரை 'இறைவிழியன்' என்று தனித்தமிழில் வைத்துக்கொண்டார். நற்றமிழ் என்ற திங்களிதழைச் சிறப்பாக வெளியிட்டார். கற்றவர் போற்றுகின்ற முற்றறிவாளர். வல்லவர். துாய பனிபோல் குளிர்ந்த குணமுடைய இனிய இறைவிழியனார் புகழ் வாழ்கவே.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.08.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire