dimanche 18 août 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை 16
  
பதின்சீர் ஆசிரிய விருத்தம்
  
வேர்கனத்தோ டும்வன்மை காட்டுகவே!  
   விருந்தேயூண் சுவைதேமா
      நீ!நற்சு ளைநீ!செய்க பொங்கக்
         கனிதிருச்சொல், சீர்விகமே!
சீர்யாவும் வண்மேவு கண்ணாகக்
   கண்பொங்குந் திருவருளைத்
      தேனருள்கவி மாதே..நீ சீர்த்தமர்ந்து
         வாழ்வருள்வாய்! மாண்பருள்வாய்!
மார்பொங்கிக் கருக்கமழ்ந்து துணிவேயெம்
   மதியாழ்ந்து மாய்வுவல்ல
      மனங்குணந்தந் து,குன்றாய்மல் லு,திருவாள்தந்
         தெம்புகழ்மின் ன,த்தமிழ்வாழ்
கார்கனத்த கூத்தர்தம் மனம்பொங்கித்
   கருக்கமழ்ந்து மிகுந்துகற்க
      கலைபொங்கக் கவிபொங்கக் கண்பொங்குந்
         திருவருளை யூட்டுகவே!
  
நான்காரச் சக்கரம்
    
வஞ்சி விருத்தம்
    
தாயே..நீ கவிவானே..தா!
தானே..வா மதிநாவே..தா!
தாவே..நா[ன்] அறு தாழே..தா!
தாழே..தா! தகை நீயே..தா!
    
தாவு - பகை
தாழ் - திறவுகோல்
தாழ் - பணிவு
    
மாதாவே வாழ்வே தாமா!
மாதாவே ஆய்வே தாமா!
மாதாவே ஆழ்வே தாமா!
மாதாவே ஆர்வே தாமா!
    
ஆழ்வு - ஆழம்
ஆர்வு - நிறைவு
    
இத்தேரின் சக்கரங்கள் நான்கார ஓவியக்கவிதையில் அமைந்துள்ளன. வஞ்சி விருத்தப் பாடல் 32 எழுத்துக்களைப் பெறும். சக்கர ஓவியம் 17 எழுத்துக்களைப் பெறும். தேரில் அமைந்த பதின்சீர் விருத்தம் 237 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 206 எழுத்துக்களைப் பெறும். மூன்று பாடல்களும் சேர்ந்து 301 எழுத்துக்களைக் கொண்டுள்ளன. ஓவியம் 206 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
  
பதின்சீர் விருத்தம் தொடங்கிய இடத்திலேயே முடிவதைக் காணலாம். தேரின் கீழே 'வே' என்ற இடத்தில் விருத்தம் தொடங்கி மேலேறி இடப்பக்கம் வலப்பக்கம் என மாறி மாறி மேலேறித் தேர்த்தட்டின் இடது முனையிலிருந்து 4 கட்டங்கள் இறங்கி நேராகத் துாணேறி அங்கிருந்து நான்கு கட்டங்கள் இறங்கித் தேரின் மேல் தட்டில் சென்று வலது இடது என மேலேறி உச்சியை அடைந்து, அங்கிருந்து நேரே கீழிறங்கி வலது பக்க மேல் தட்டு முனைக்குச் சென்று 4 கட்டங்கள் மேலேறி அங்கிருந்து துாணிறங்கி, 4 கட்டங்கள் மேலேறித் தேரின் கீழ்த் தட்டு மையத்திலிருந்து இறங்கித் தொடங்கிய இடத்தில் நிறைவுறும்.
  
சித்திரக்கவி இலக்கியங்களில் கண்டுணர்ந்த 16 வகைத் தேர்களையும் இங்கு நான் பாடியுள்ளேன். பிரான்சு கம்பன் கழகத்தின் 19 ஆம் ஆண்டு கம்பன் விழா 21.09.2019 அன்று நடைபெறவுள்ளது. கம்பன் விழா நிறைவுற்றதும் மற்றுமுள்ள சித்திரங்களை எழுதுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.08.2019

1 commentaire: